தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் 2025 டிசம்­பரில் வெளி­யிட்ட பயங்­க­ர­வா­தத்தில் இருந்து அரசைப் பாது­காப்­ப­தற்­கான உத்­தேச சட்ட வரைவு (Protection of State from Terrorism Act – PSTA), கடந்த 47 வரு­டங்­க­ளாக நடை­மு­றையில் இருந்து வரும் பயங்­க­ர­வாதத்  தடைச்­சட்­டத்தை (Prevention of Terrorism Act — PTA ) பதி­லீடு செய்­வ­தற்­காக  முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற  மூன்­றா­வது முயற்­சி­யாகும்.

அந்த சட்ட வரைவு  குறித்து பெப்­ர­வரி 28 ஆம் திகதி வரை பொதுக் கருத்­துக்­களை தெரி­விப்­ப­தற்கு  அர­சாங்கம் அவ­காசம் வழங்­கி­யி­ருக்­கி­றது.

ண்­மைய கடந்த காலத்தில் மைத்­திரி – ரணில் அர­சாங்­கத்­தினால் 2018 ஆம் ஆண்டில் பயங்­க­ர­வாத தடுப்புச் சட்ட வரைவும் (Counter Terrorism Act-CTA) ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்­கத்­தினால் 2023 ஆம் ஆண்டில் பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்ட வரைவும் (Anti Terrorism Act – -ATA) முன்­வைக்­கப்­பட்­டன.

முன்­னைய இரு வரை­வு­க­ளையும் போன்றே தற்­போ­தைய அர­சாங்­கத்தின்  வரைவும்  பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை விடவும் கொடூ­ர­மான ஏற்­பா­டு­களைக் கொண்­டி­ருப்­ப­தாக அர­சியல் கட்­சிகள், மனித உரி­மைகள் அமைப்­புக்கள், சட்­டத்­துறை சார்ந்த அமைப்­புக்கள், மத அமைப்­புக்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் கடு­மை­யான விமர்­ச­னத்தை முன்­வைத்து வரு­கின்­றன.

பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தின் கீழ் நான்கு தசாப்­தங்­க­ளுக்கும் அதி­க­மான கால­மாக இடம்­பெற்று வந்­தி­ருக்­கின்ற மக்­களின் அடிப்­படை உரிமை மீறல்­களும், படு­மோ­ச­மான  துஷ்­பி­ர­யோகங்­களும்  இனி­மேலும் இடம்­பெ­றா­தி­ருப்­பதை உறு­தி­செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­களை இந்த வரை­வுகள்  கொண்­டி­ருக்­க­வில்லை என்­பதே முன்­வைக்­கப்­ப­டு­கின்ற முக்­கி­ய­மான குற்­றச்­சாட்­டாகும்.

நீதி­ய­மைச்சின் இணையத்தளத்தில் கடந்த டிசம்­பரில் வெளி­யி­டப்­பட்ட புதிய வரைவும்  ஜனா­தி­ப­தி­யி­னதும் பாது­காப்­புத்­துறை அமைப்­புக்­க­ளி­னதும் அதி­கா­ரங்­களை பெரி­ய­ளவில் விரிவுபடுத்தும்  ஏற்­பா­டு­களைப்  கொண்­டி­ருப்­பது மாத்­தி­ர­மல்ல, மக்­களின் ஜன­நா­யக மற்றும் குடி­யியல் சுதந்­தி­ரங்­களை பார­தூ­ர­மான அள­வுக்கு கட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டிய ஆபத்­தையும் கொண்­டி­ருக்­கின்­றன என்று சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.

புதிய வரைவு தொடர்பில்  தற்­போது மூண்­டி­ருக்கும் பொது விவா­தத்தில் முன்­வைக்­கப்­பட்­டு­வரும் விமர்­ச­னங்­க­ளையும் மாற்று யோச­னை­க­ளையும் அர­சாங்கம் எந்­த­ள­வுக்கு கவ­னத்தில் எடுத்து போது­மா­ன­ளவு  மாற்­றங்­களைச் செய்­வதில் நாட்டம் காட்டும் என்­பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஆனால், பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை பதி­லீடு செய்­வ­தற்­கான முன்­னைய இரு முயற்­சி­க­ளுக்கும் நேர்ந்த அதே கதி தற்­போ­தைய முயற்­சிக்கும் நேராது என்று எவ­ராலும் உத்­த­ர­வாதம் கூற­மு­டி­யாது.

பயங்­க­ர­வாதம் என்­ப­தற்கு சட்ட வரைவில் கொடுக்­கப்­பட்­டி­ருக்கும் வரை­வி­லக்­கணம் ஜன­நா­யக ரீதி­யான எதிர்ப்­பி­யக்­கங்­களை ஒடுக்­கு­வ­தற்கும் கருத்து வெளிப்­பாட்டு சுதந்திரத்தை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கும் அர­சாங்­கத்­தினால் பயன்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டி­ய­தாக விசா­லமானதாகவும் தெளி­வற்­ற­தா­கவும் இருக்­கி­றது.

பயங்­க­ர­வாதக் குற்­றங்கள் என்று வரைவில் வகைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­பவை சாதா­ரண குடி­மக்­களைக் கூட 20 வரு­டங்கள் வரை சிறை­வைக்­கக்­கூ­டிய  ஆபத்தைக் கொண்­டி­ருப்­ப­தாக கூறப்படு­கி­றது.

ஜீ.எல். பீரிஸ்

இலங்­கையில் இது­வ­ரையில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட ஆபத்­தான சட்­டங்­களில் ஒன்று என்று இதை வர்­ணித்­தி­ருக்கும் முன்னாள் வெளி­விவகார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல். பீரிஸ்,

இந்த வரைவு தற்­போ­தைய வடிவில்  நிறை­வேற்­றப்­ப­டு­மானால் ஜன­நா­யக சுதந்­தி­ரங்­க­ளுக்கு சாவு­ம­ணி­யாக அமையும் என்­ப­துடன் சர்­வ­தேச ரீதியில் நாட்­டுக்கு பார­தூ­ர­மான விளை­வு­களைக் கொண்­டு­வரும் என்று எச்­ச­ரிக்கை செய்­தி­ருக்­கிறார்.

வீடு­க­ளுக்குள் பிர­வே­சிப்­பது, அந்­த­ரங்­க­மான ஆவ­ணங்­களைக் கைப்­பற்­று­வது மற்றும் ஆட்­களை சோதனை செய்­வது உட்­பட பரந்­த­ள­வி­லான அதி­கா­ரங்­களை ஆயுதப் படைகள், பொலிஸ் மற்றும் கரை­யோரக் காவல்­ப­டைக்கு வழங்கும் ஏற்­பா­டு­களை உத்­தேச சட்டம் கொண்டிருக்கிறது.

ஒரு வருடம் வரை­யான தடுப்­புக்­காவல் உத்­த­ரவைப் பிறப்­பிப்­ப­தற்கு பாது­காப்புச் செய­லா­ள­ருக்கு அதி­கா­ர­ம­ளிப்­ப­துடன் வழ­மை­யாக நீதி­மன்­றத்தின் மேற்­பார்­வையின் கீழ்  விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட வேண்­டிய சந்­தே­க­ந­பர்­களை பொலிஸ் காவ­லுக்கு மாற்­று­வ­தற்கும் அனு­ம­திக்கும் ஏற்­பா­டு­களும் இருக்­கின்­றன.

ஜனா­தி­பதி வர்த்­த­மானி அறி­வித்தல் ஒன்றின் மூல­மாக எந்­த­வொரு அமைப்­பையும் தடை செய்­யலாம்.  தடை உத்­த­ரவை ஜனா­தி­பதி விலக்­கிக்­கொள்ளும்வரை அத்­த­கைய அமைப்­புக்கள் உறுப்­பி­னர்­களைச் சேர்ப்­பதை, கூட்­டங்­களை நடத்­து­வ­தற்கு அல்­லது வங்­கிக்­க­ணக்கு ஒன்றை கையா­ளு­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டாது.

எந்­த­வொரு இடத்­தையும் ஜனா­தி­பதி தடை­செய்­யப்­பட்ட பிர­தே­ச­மாக பிர­க­டனம் செய்து மக்கள் பிர­வே­சிப்­பதை தடுக்க முடியும். அந்த தடையை மீறு­ப­வர்கள் மூன்று வருட சிறைத்­தண்­ட­னையை அனு­ப­விக்க வேண்டி வரும் அல்­லது 03 மில்­லியன் ரூபா அப­ரா­தத்தை செலுத்த வேண்டும்.

முன்­னைய இரு அர­சாங்­கங்­க­ளினால் முன்­வைக்­கப்­பட்ட பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான சட்ட மூலங்­களில் பயங்­க­ர­வா­தத்­துக்கு கொடுக்­கப்­பட்ட வரை­வி­லக்­கணம் தொடர்பில் ஏற்­கெ­னவே சுட்­டிக்­காட்­டப்­பட்ட பார­தூ­ர­மான  குறை­பா­டு­க­ளையும் நீதித்­துறை விதந்­து­ரைத்த திருத்­தங்­க­ளையும் கருத்தில் எடுக்­காமல் தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் புதிய வரைவை வெளி­யிட்­டி­ருக்­கி­றது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்கம் சமர்ப்­பித்த பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­டத்தின் அர­சி­ய­ல­மைப்புத் தகு­தியை கேள்­விக்கு உள்­ளாக்கி தாக்கல் செய்­யப்­பட்ட  முப்­ப­துக்கும் அதி­க­மான மனுக்­களை விசா­ரணை செய்த உயர்­நீ­தி­மன்றம், சட்­ட­மூ­லத்தில் ‘பயங்­க­ர­வாதக் குற்­றச்­செ­யல்கள்’ என்று வர்­ணிக்­கப்­பட்­டி­ருந்­தவை பெரு­ம­ள­வுக்கு சர்­வ­தேச சட்­டங்­க­ளுக்கு பொருத்­த­மான முறையில் அமைந்­தி­ருக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யது.   பயங்­க­ர­வா­தத்­துக்கு அந்த சட்­ட­மூலம் கொடுத்த  வரை­வி­லக்­க­ணத்தை உயர்­நீ­தி­மன்றம் ஏற்றுக் கொள்­ள­வில்லை.

பயங்­க­ர­வாதம் என்­ப­தற்­கான வரை­வி­லக்­கணம் ஐக்­கிய நாடு­களின் வரை­வி­லக்­க­ணத்தின் வழியில் அமைய வேண்டும் என்­கிற அதே­வேளை, அந்த வரை­வி­லக்­க­ணத்தை தீர்­மா­னிக்­கும்­போது ஐக்­கிய இராச்­சியம், அவுஸ்­தி­ரே­லியா, நியூ­சி­லாந்து மற்றும் கனடா போன்ற நாடு­களின் சட்­டங்­களில் கூறப்­பட்­டி­ருக்கும் வரை­வி­லக்­க­ணத்தை பரி­சீ­ல­னைக்கு எடுக்க வேண்டும் என்று உயர்­நீ­தி­மன்றம் அறி­வு­றுத்­தி­யது.

பயங்­க­ர­வா­தத்­துக்கு வரை­வி­லக்­கணம் வகுப்­பது என்­பது உண்­மையில் ஒரு சர்­வ­தேசப் பிரச்­சினை. அது விட­யத்தில் ஐக்­கிய நாடுகள் சபை­யினால் கூட இது­வ­ரையில் உல­க­ளா­விய கருத்­தொ­ரு­மிப்பைக் காண­மு­டி­ய­வில்லை என்­பதே யதார்த்தம்.

ஒரு­வ­ருக்கு பயங்­க­ர­வா­தி­யாகத் தோன்­று­பவர் இன்­னொ­ரு­வ­ருக்கு விடு­தலை போரா­ளி­யாக தென்­ப­டுவார் என்று  நாம் வழ­மை­யாக பேசு­வ­துண்டு. நாடுகள், அவை எதிர்­நோக்­கு­கின்ற பிரச்­சி­னை­களின் பாது­காப்பு நெருக்­க­டிகள் மற்றும் அர­சியல் பிரச்­சி­னை­களின் அடிப்­ப­டை­யி­லேயே  பயங்­க­ர­வா­தத்­துக்கு வியாக்­கி­யானம் செய்­கின்­றன.  இலங்கை அதற்கு விதி­வி­லக்கு அல்ல.

பிடல் காஸ்ட்ரோ

நியூயோர்க் இரட்டைக் கோபு­ரங்கள் மீதான  2001 செப்­டெம்பர் 11 விமானத் தாக்­கு­தல்­களைத்  தொடர்ந்து அமெ­ரிக்கா தலை­மையில் மேற்­கு­லகம் பயங்­க­வா­தத்­துக்கு எதி­ரான உல­க­ளா­விய போரைப் பிர­க­டனம் செய்­த­போது அன்­றைய கியூப ஜனா­தி­பதி பிடல் காஸ்ட்ரோ தெரி­வித்த வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த  கருத்தை இந்த இடத்தில் நினை­வு­ப­டுத்­து­வது பொருத்­த­மா­னது.

‘பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான உல­க­ளா­விய போர் என்ற போர்­வையில் அவர்கள் அப்­பட்­ட­மான பயங்­க­ர­வா­தத்­துக்கும் (naked terrorism ) நியா­ய­பூர்­வ­மான ஆயுதப் போராட்­டத்­துக்கும் (Legitimate Armed struggle)  இடை­யி­லான வேறு­பாட்டை அழிக்கப் போகி­றார்கள்’ என்று அவர் எச்­ச­ரிக்கை செய்தார்.

இது இவ்­வா­றி­ருக்க, பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை பதி­லீடு செய்­வ­தற்கு தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் சட்­ட­வ­ரைவு ஒன்றை வெளி­யிட்­டி­ருப்­பதில் ஒரு முரண்­நிலை இருக்­கி­றது.

ஜனா­தி­பதி அநுர குமார திச­நா­யக்க 2024 ஜனா­தி­பதி தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் உட்­பட சகல ஒடுக்­கு­முறைச் சட்­டங்­க­ளையும் ஒழித்து நாட்டின் சகல பாகங்களிலும் மக்­களின் குடி­யியல் உரி­மை­களை உறு­தி­செய்­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்தார். பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தை பதி­லீடு செய்­வ­தற்கு புதிய சட்டம் கொண்டு வரப்­படும் என்று விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

ஆனால், திசா­நா­யக்க ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்ற சில வாரங்களில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தங்களது அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவோ அல்லது திருத்தவோ போவதில்லை என்று அறிவித்தார்.

புதிய அரசாங்கம் உள்நாட்டிலும் வெளியுலகிலும் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகிவந்திருக்கும் அந்த சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யாது என்று அவர் உறுதியளித்தார். தேசிய மக்கள் சக்தி மீறிய முதல் தேர்தல் வாக்குறுதி பெரும்பாலும் அதுவாகவே இருக்கலாம்.

இன்னொரு விசித்திரம் என்னவென்றால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றாக நீக்கப்போவதாக வாக்குறுதியளித்த ஒரு அரசாங்கம் அதே சட்டத்தைப் பதிலீடு செய்வதற்காக தற்போது வெளியிட்டிருக்கும் சட்ட வரைவு முன்னைய இரு அரசாங்கங்கள்  கொண்டுவந்த சட்டமூலங்களை விடவும் கொடூரமான ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதாகும்.

இதுவரையான மூன்று சட்ட வரைவுகளுமே எந்தச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கான நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டனவோ அதே சட்டத்தில் உள்ளதை விடவும் கொடூரமான ஏற்பாடுகளை கொண்டிருப்பதை நோக்கும்போது அதுவே தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்ற சூழ்ச்சித்தனமான நோக்கத்துடனேயே அரசாங்கங்கள் செயற்படுகின்றன என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.

-வீரகத்தி தனபாலசிங்கம்

Share.
Leave A Reply