ஒட்டுமொத்த உலகமும் பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருக்கையில், போர்க் கடிகாரத்தின் முட்கள் அசைகின்றன. உலகில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கென தாம் நியமித்த சமாதான சபையின் ஆரம்பக் கூட்டத்தில், அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கிறார்.
இன்னும் பத்து நாட்கள். அதற்குள் ஈரான் அமெரிக்காவுடன் உடன்படிக்கையை சாத்தியப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் கெட்டது நடக்கும் என்பது எச்சரிக்கையின் சாராம்சம்.
ஜெனீவாவில் அமெரிக்க – ஈரானிய இராஜதந்திரிகள் தமக்கிடையிலான முரண்பாடுகளைக் களைவது பற்றி ஜெனீவாவில் பேசி முடித்த மறுநாள், வொஷிங்டனில் டொனால்ட் ட்ரம்ப் பயமுறுத்தும் வார்த்தைகளை உச்சரிக்கிறார்.
இந்தக் கட்டுரை எழுதப்படும் வரையில் எதுவும் ஏடாகூடமாக நிகழவில்லையெனினும், போர்க் கடிகார முள்ளின் ‘டிக்.. டிக்’ என்ற ஓசையுடன் பதற்றம் தீவிரம் அடைகிறது.
ஈரானை சூழவுள்ள நிலப்பரப்பிலும், கடற்பரப்பிலும் படைப்பல ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில், போர்க் கப்பல்களும், ஆயுதங்களும் குவிக்கப்படுகின்றன.
கப்பல்கள் என்றால் வெறும் கடற்கலன்கள் அல்ல. மிதக்கும் ஆயுதக் கோட்டைகளுக்கு ஒப்பானவை. உலகின் மிகப் பெரிய போர்க் கப்பலான USS Abraham Lincoln உம், இன்னொரு கப்பலான USS Gerald R. Ford உம் அடங்கலாக 12 கடற்கலங்களை மத்திய கிழக்கு பிராந்திய கடற்பரப்பில் அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.
இதற்கு அப்பால், F-35, F-22 ஆகிய போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன. ஏவுகணைகளோ பீரங்கி குண்டுகளோ வரும் பட்சத்தில் அவற்றைத் தாக்கி அழிக்கக்கூடிய Aegis என்ற பாதுகாப்புத் திரையும் உண்டு.
இவற்றையெல்லாம் பார்த்தால், உன்னிப்பாக கண்காணித்து, அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து, சடுதியாக தாக்குதல் நடத்தும் வல்லமை அமெரிக்காவிற்கு உள்ளதென மேலோட்டமாகக் கூறலாம்.
ஆனால், ஈரானிய இஸ்லாமிய குடியரசு கடந்த நாற்பது வருடங்களாக இத்தகைய ஒரு நிலைமையை சமாளிக்க தன்னை எவ்வாறு தயார்ப்படுத்திக் கொண்டுள்ளது என்பதை புறந்தள்ளி விட முடியாது.
அமெரிக்காவைப் போன்று, ஈரான் மரபு வழி இராணுவ வலிமையில் தங்கியிருக்கவில்லை. அந்நாடு ‘சமச்சீரற்ற தற்காப்பு தடுப்பு” (Asymmetric Deterrence) வியூகத்தின் ஊடாக இயங்குகிறது.
இது முக்கியமான கோட்பாடு. எதிரியின் பலத்திற்கு இணையானதொரு பலம் இல்லாதபோதிலும், எதிரிக்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்த முடியும் என்ற அச்சத்தை உருவாக்குவதன் மூலம் போரைத் தவிர்த்தல் என்று விபரிக்கலாம்.
ஈரானின் படைப்பல வல்லமை பல்வேறு அடுக்குகளில் கட்டமைக்கப்பட்டதாக, பெரும்பாலும் வெளிப்பார்வைக்கு தெரியாததாக இருக்கிறது.
எதிரி தாக்க வருவதாக வைத்துக் கொள்வோம். தாக்குதலின் விளைவு பேரழிவு தருவதாக இருக்கும் என்பதை உணரச் செய்து, தாக்குதல் நடத்துவது என்ற தீர்மானமே ரிஸ்க்கானது என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் உத்தியில் இது கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.
ஈரானின் விமானப் படை பழைய தளபாடங்களைக் கொண்டு பலம் பொருந்தியதாக இல்லாமல் இருந்தபோதிலும், அந்நாடு ‘ஏவுகணை நகரங்கள்’ மூலம் குறைபாட்டை நிவர்த்தி செய்து கொள்கிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா ஈரானின் மீது நடத்திய தாக்குதல்களின்போது, இதனை வெளிப்படையாகக் காணக்கூடியதாக இருந்தது.
இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஃபத்தா-2 என்ற ஏவுகணையை ஈரான் பயன்படுத்தியது. இது ஒலியின் வேகத்தை மிஞ்சக்கூடிய ஏவுகணை. தவிரவும், நவீன விமானப் பாதுகாப்பு வியூகங்களையும் கடந்து செல்லும் ஆற்றல் மிக்கது.
அமெரிக்க விமானத் தாங்கிக் கப்பல்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால், இந்த ஏவுகணை போன்று தனியொரு ஆயுதத்தின் வடிவில் வரவில்லை. மாறாக, திணறடிப்பு உத்தியின் (Saturation Strategy) மூலம் வருகிறது.
எதிரியிடம் எவ்வளவு நவீன தற்காப்பு வசதிகள் இருந்தாலும், அவரால் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட அளவு ஏவுகணைகளை மாத்திரமே தடுத்து நிறுத்த முடியும்.
Shahed-136 B drone
இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தி, எதிரியின் தற்காப்புக் கருவிகள் சமாளிக்க முடியாத அளவிற்கு ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ட்ரோன்களையும், ஏவுகணைகளையும் ஏவுவதே திணறடித்தல் உத்தி எனப்படுகிறது.
ஈரானிடம் ஷஹிட்-136 வகையைச் சேர்ந்த பெருமளவு ட்ரோன்களுடன் ஏவுகணைகளும் உள்ளன.
இவற்றைக் கொண்டு ஒரே தடவையில் தாக்குவது ஈரானின் போர்த் தந்திரம். இத்தகைய தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில் அமெரிக்காவின் வலிமையான நாசகாரிகளால் கூட சமாளிக்க முடியாது.
போரென்று வருகையில் பூகோள ரீதியான அமைவிடம் ஈரானுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதிலும் ஹோர்முஸ் நீரிணையை வரப்பிரசாதம் என்றே வர்ணிக்கலாம்.
உலகின் பல பாகங்களுக்கு எரிபொருளை கொண்டு செல்லும் 20 சதவீத கப்பல்கள், இதன் ஊடாகவே பயணிக்கின்றன.
இதனை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் உலக பொருளாதாரத்தின் மீது செல்வாக்கு செலுத்தி அதன் மூலம் தனது பாதுகாப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றல் அந்நாட்டுக்கு உண்டு.
மறுபுறத்தில், செய்மதி இறையாண்மை (Satellite Sovereignty) என்பதும் ஈரானின் பலம். அதாவது தமக்கும், கீழைத்தேய நாடுகளதும் செய்மதி கண்காணிப்பு வசதிகளைப் பயன்படுத்தி, அமெரிக்காவின் நகர்வுகளை ஈரான் அவதானிக்கிறது. அந்தக் கண்காணிப்பு வசதிகளில் சீனாவின் பெய்டூ தொழில்நுட்பமும் அடங்கும்.
ஈரானுக்கும், அமெரிக்காவும் இடையிலான மோதல் வெறும் இராணுவ ரீதியானது மாத்திரமல்ல. அது அரசியல் ரீதியானதாகவும் இருக்கிறது.
டொனால்ட் ட்ரம்ப் தன்னிச்சையாக ஈரானைத் தாக்க முனைகிறார் என்றால், அதற்கு அமெரிக்காவின் உள்ளிருந்தும், நேச நாடுகளிடம் இருந்தும் கடும் எதிர்ப்பு வருகிறது.
அப்படித் தாக்குவதற்கு அதிகாரம் இருக்கிறதா என அமெரிக்க மக்களவையின் அங்கத்தவர்கள் வெளிப்படையாக கேள்வி எழுப்புகிறார்கள். அவர்கள் 1973ஆம் ஆண்டுக்குரிய போர் அதிகாரங்கள் சட்டத்தை சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஈரானைத் தாக்குவதற்கு தமது படைத்தளங்களைப் பயன்படுத்த முடியாதெனக் கூறி பிரிட்டன் அமெரிக்கப் படைகளுக்கு அனுமதி மறுத்துள்ளது.
டொனால்ட் ட்ரம்பின் பத்து நாள் காலக்கெடுவிற்கான நாட்கள் கழிகையில், அமெரிக்க – ஈரானிய முரண்பாடுகள் கோட்பாடுகளின் யுத்தமாக பரிணமிக்கிறது என்பதே உண்மை.
இராஜதந்திர ரீதியில் ஈரானை அடிபணியச் செய்வதற்கு அமெரிக்கா கண்ணுக்குத் தெரியக்கூடிய, தொழில்நுட்ப மேலாண்மை ஆற்றல்களை நம்புகிறது.
ஈரானோ, கண்ணுக்குத் தெரியாத, இன்னதென்று எளிதில் அனுமானிக்க முடியாத பாதுகாப்பு ஏற்பாடுகளில் பெரும்பாலும் தங்கியிருக்கிறது. தமது நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலும் பிராந்திய ஸ்திரத்தன்மையை பேரழிவு தரக்கூடிய விதத்தில் பாதித்து விடும் என்ற அச்சத்தையும் ஈரான் வலுவாக பதியச் செய்துள்ளது.
இந்தப் போரில் யாரிடம் எவ்வளவு பெரிய கப்பல்கள் இருக்கின்றன என்ற கேள்வி முக்கியமானது அல்ல. மாறாக, எந்தத் தரப்பு போரில் நீண்ட நாட்கள் தாக்குப் பிடிக்க முடியும் என்பதே முக்கியமான கேள்வி.
ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி ‘எக்ஸ்’ தளத்தில் இட்ட பதிவை ஞாபகப்படுத்தலாம். உலகின் மிகப்பெரிய போர்க்கப்பல் ஆபத்தானதாக இருந்தாலும், அதனை அமிழ்த்தி கடலின் ஆழத்திற்குள் அனுப்பி வைக்கக்கூடிய ஆயுதமே முக்கியமானது என்று அவர் கூறியிருந்தார்.
அடுத்து வரும் நாட்கள் முக்கியமானவை. ட்ரம்ப் எச்சரித்தவாறு கெட்டது தான் நடக்கப் போகிறதா, அல்லது சமச்சீரற்ற நிழல் யுத்தம் பற்றிய அச்சத்தின் மூலம் மாறுபட்ட சமாதானத்தை வலிந்து திணிக்கக் கூடுமா என்பதை அவை தான் தீர்மானிக்கும்.
-சதீஷ் கிருஷ்ணபிள்ளை-

