அமெரிக்கா – ஈரான் யுத்தம் மத்திய கிழக்குப் பிராந்தியத்தை கடந்து உலகளவில் வளரத் தொடங்கியுள்ளது. இந்து சமுத்திரத்தில் இலங்கைக்கு அருகே அமெரிக்கா நீர்மூழ்கி கப்பலால் ஈரானிய கடற்படைக் கப்பல் தாக்கப்பட்டுள்ளது. இது உலகப் போராக மாறுமா என்பதை இப்போதைக்கு உறுதியாக கூறிவிட முடியாது.

போரின்போக்கு இன்னமும் சில வாரங்களில் தெரியத் தொடங்க அது உலகப் போராக மாறுமா என்பதை ஊகிக்கலாம். உலகப் போராக மாறாது என்றால் யாராவது ஒரு தரப்பு வெற்றி அடைய வேண்டும். அதனை இன்னமும் அடையாளம் காணமுடியவில்லை.

ஈரானும் இடைவிடாது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது. அது அமெரிக்காவின் படைத்தளங்களுள்ள மத்திய கிழக்கு நாடுகள் மீது தாக்குதலை தொடர்வது தான் அமெரிக்காவைப் பொறுத்த வரை சங்கடமான விடயமாக உள்ளது. இவ்வாறான ஒரு நிலைவரும் என அமெரிக்கா நினைத்திருக்க வாய்ப்புகள் குறைவு.

ஈரானைப் பொறுத்தவரை இது வாழ்வா சாவா பிரச்சினை. எனவே கடைசி வரை அது போரிட்டுப் பார்க்கவே முயற்சிக்கும்.

ஈரான் சார்பு நாடுகளான சீனா, ரஷ்யா, வடகொரியா என்பவற்றுக்கும் இது இருப்புச் சார்ந்த பிரச்சினை தான். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதரைக் கடிப்பது போல அந்த நாடுகளை நோக்கியும் யுத்தம் பரவலாம்.

இந்த யுத்தம் தொடர்பில் அமெரிக்கா உள்நாட்டுச் சட்டத்தையோ, சர்வதேச ஒழுங்கமைப்புக்களையோ மதித்தது கிடையாது. ‘எனக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டல்ல’ என அமெரிக்க ஜனாதிபதி கூறியிருக்கின்றார்.

அமெரிக்க அரசியல் யாப்பின்படி வெளிநாட்டுடன் போர் புரிவதென்றால் சட்டத்துறையான காங்கிரஸின் அனுமதி பெறப்பட வேண்டும்.

அது பெறப்படவில்லை. சர்வதேச சட்டத்தின் படியும் இறைமையுள்ள ஒரு நாட்டின் மீது தன்னிச்சையாக போரிட முடியாது. ஐ.நா. பொதுச் செயலாளரே இந்த வலிந்த தாக்குதலை கண்டித் திருக்கின்றார்.

முன்னர் ஐ.நா.வின் பேரில் அல்லது நேட்டோவின் பேரில் அமெரிக்கா போரிடுவதே வழக்கம்.

ஈராக், லிபியா போன்றவற்றில் அதனையே பின்பற்றியது. வெனிசுவேலாவிலும், ஈரானிலும் தன்னிச்சையாக முயன்றுள்ளது.

ஐ.நா. மூலம் மேற்கொள்வதென்றால் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் அனுமதி பெறப்படல் வேண்டும். அங்கு ரஷ்யாவுக்கும், சீனாவிற்கும் வீட்டோ அதிகாரம் இருப்பதால் அது சாத்தியமாகாது. நேட்டோ மூலம் போரிடுவதென்றால் ஐரோப்பிய கூட்டாளிகள் ஒத்துழைக்க வேண்டும் அதற்கும் சாத்தியம் இருக்கவில்லை.

இந்தப் போர் தொடர்பாக அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் பல நோக்கங்கள் இருந்தன. சீனா வுக்கான வளங்களை தடுத்து நிறுத்துவது அமெரிக்காவின் பிரதான நோக்கமாகும்.

அமெரிக்கா போர்களுக்கு சென்று தனது பொருளாதாரத்தை பலவீனப்படுத்தி வர சீனா போர் எதற்கும் செல்லாமல் பொருளாதார ரீதியாக வளர்ச்சி கண்டு வருகின்றது. ஈரானின் எரிபொருள் அதிகளவில் சீனா விற்கே செல்கின்றது.

இரண்டாவது ஜி – 7 அமைப்பை மேவி வளர முயற்சிக்கும் பிரிக்ஸ் அமைப்பின் பொருளாதார வளர்ச்சியை வீழ்த்துவதாகும். தனி நாணயம் ஒன்றை உருவாக்கவும் பிரிக்ஸ் முயற்சிக்கின்றது. அந்த நாணயம் உருவாகுமானால் டொலரின் செல்வாக்கு வீழ்ச்சி அடையும். ஏற்கெனவே பிரிக்ஸ் நாடுகள் டொலரை தவிர்த்து தங்களது சொந்த நாணயங்களில் வர்த்தகம் செய்ய முயற்சிக்கின்றன.

மூன்றாவது, தற்போது வளர்ந்து வரும் பல்துருவ உலக ஒழுங்கினை மாற்றி மீண்டும் ஒரு துருவ உலக ஒழுங்கினை கொண்டு வருவதாகும். பல்துருவ ஒழுங்கில் அமெரிக்காவின் செல்வாக்கு மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும். இங்கு வரலாறு முன்னோக்கி நகருமே ஒழிய பின்னோக்கி நகருமென்பது சந்தேகம்தான்.

நான்காவது, எரிபொருள் வர்த்தகத்தில் டொலர் நீக்கத்தை தடுத்து நிறுத்துவதாகும். ஈரான் போன்ற நாடுகள் டொலரைத் தவிர்த்து அந்தந்த நாட்டு நாணயங்களில் வர்த்தகம் செய்ய முயற்சிக்கின்றன. டொலரின் வீழ்ச்சி அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் சரிவைக் கொண்டு வரும் என அமெரிக்கா அஞ்சுகின்றது.

இஸ்ரேலைப் பொறுத்தவரை பலஸ்தீனத்தை மறுத்து ஓர் அரசுத் தீர்வை நிலை நாட்டுதல் முக்கிய நோக்கமாகும். இதற்கு பிரதான தடையாக இருப்பது ஈரான் தான். இதுவே ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ், ஹெளதி இயக்கங்களுக்கு ஆயுத உதவிகளை செய்து வருகின்றது. எனவே ஈரான் அழிக்கப்பட்டால் தான் தனது செல்வாக்கினை மத்திய கிழக்கில் நிலை நிறுத்தலாம் எனக் கருதுகின்றது.

போரின் தாக்கம் உலக ரீதியானது. எரிபொருள் இல்லாவிட்டால் உலகமே இயங்குவது கடினம். ஈரான், பிரதான எரிபொருள் பாதையான ஹேர்முஸ் நீரிணையை மூடியுள்ளது.

உலக எரிபொருள் தேவை யில் 20 சதவீதம் இதனூடாகவே இடம்பெறுகின்றது. தினமும் சுமார் 2 கோடி பரல் எரிபொருள் இதன் வழியாக கொண்டு செல்லப்படுகின்றது. சவூதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தமது ஏற்றுமதிக்கு இப்பாதையினையே பயன்படுத்துகின்றன.

கட்டார் இயற்கை எரி வாயு ஏற்றுமதிக்கு முழுமையாக இதனையே பயன்படுத்துகின்றது. இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மசகு எண்ணையில் 50 சதவீதமும் எரி வாயுவில்; 60 சதவீதமும் இந்தப் பாதைனூடாகத்தான் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்தப் பாதை இல்லை யென்றால் 4500 கிலோமீற்றர் சுற்றி செங்கடல் வழியாக செல்ல வேண்டும். இதற்கு 12 நாட்கள் அதிக மாகத் தேவைப்படும். கப்பல்கள் கட்டணங்களும் அதிகமாக இருக்கும். கப்பல்களுக்கான காப்புறுதித் தொகையையும் பன்மடங்கு உயரும்.

உலகம் பங்குச்சந்தையில் பெரும் சரிவைக் கண்டிருக்கின்றது. எல்லா நாடுகளிலும் பங்குச் சந்தைகள் மளமளவென்று சரிந்து வீழ்கின்றன.

பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதற்காக தங்கத்தில் முதலீடு செய்ய முயல்கின்றனர். இதனால் உலகளாவிய வகையில் தங்கத்தின் விலை அதிகரிக்க போகின்றது.

இலங்கை மீதான தாக்கம் மிகவும் கவலைக்குரியது. பொருளாதாரச் சரிவிலிருந்தும், தித்வா புயல் நெருக்கடியிலிருந்தும் இலங்கை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகையில் ஈரான் போர் மீண்டும் சரிவைக் கொண்டு வரப் பார்க்கின்றது.

ஈரான் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் இலங்கைப் பொருளாதாரத்தின் பிரதான பகுதியாகும். அங்கு நெருக்கடி என்றால் இயல்பாகவே இலங்கையின் பொருளாதாரம் படுத்து விடும். எரிபொருள் மட்டுமல்ல 50 வீத தேயிலை ஏற்றுமதியும் மத்திய கிழக்கு நாடுகளுக்கே செல்கின்றது.

முதலாவது, தாக்கம் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலை உருவாகுவதாகும். 37 நாட்களுக்கான எரிபொருள் சேமிப்பிலிருப்பதாக கூறினாலும் அவை விரைவில் தீர்ந்து விடக் கூடிய நிலையே உள்ளது.

இலங்கை தற்போது மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து நேரடியாக எரிபொருள் இறக்குமதி செய்வது குறைவு.

இந்தியாவிடமிருந்தும் சிங்கப்பூரிடமிருந்தும் தென்கொரியாவிடமிருந்தும் அதிகளவில் இறக்குமதி செய்கின்றது ஆனாலும் இந்தியாவும், சிங்கப்பூரும், தென்கொரியாவும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே அதிகளவில் எரிபொருளைப் பெறுகின்றன.

இரண்டாவது, சுற்றுலாத்துறை பாதிப்படைவதாகும். மத்திய கிழக்கு நாடுகள் தான் ஐரோப்பாவில் இருந்து இலங்கைக்கு வரும் விமானங்களுக்கு மாற்றுத் தரிப்பிடங்களாக உள்ளன. குறிப்பாக துபாய், கட்டார், அபுதாபி என்பன முக்கிய மாறும் தரப்பிடங்களாகும். அவ்விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதனால் இலங்கை வந்தவர்கள் திரும்பிச் செல்ல முடியாமல் தடுமாறுகின்றனர்.

மூன்றாவது, மத்திய கிழக்கில் பணிபுரிவோரிடமிருந்து வரும் வருமானமாகும். அந்நியச் செலாவாணி வருமானத்தில் இரண்டாவது இடத்தை இதுவே பிடித்துள்ளது. சுமார் 10 லட்சம் பேர் பணி புரிகின்றனர். யுத்தம் தொடருமானால் இவ்வருமானம் வீழ்ச்சி அடையும்.

தற்போது, நான்காவது பிரச்சினை ஒன்று மேலெழுந்துள்ளது. கடற்தொழில் புரிவோருக்கு ஏற்பட இருக்கின்ற நெருக்கடியே இதுவாகும்.

பல நாட்கள் கடலில் நின்று தொழில் புரிவோருக்கு இந்த நெருக்கடி வர வாய்ப்புக்கள் உண்டு. போர் காரணமாக கடலில் தாக்கப்படக்கூடிய நிலை உருவாகலாம் என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.

இந்து சமுத்திரத்தில் ஈரானிய கப்பல் தாக்கப்பட்டதை தொடர்ந்து இந்த அச்சம் அதிகரித்துள்ளது. நீருக்கடியில் ஏவுகணைகள் ஏவப்படக்கூடிய சூழ்நிலைகள் இருப்பதால் இந்த ஆபத்து அதிகமாக இருக்கின்றது.

அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் மேற்கொண்டமை சர்வதேச சட்டத்துக்கும், சர்வதேச விழுமியங்களுக்கும் எதிரானவை ஆகும். எனவே இதனைக் கண்டிக்க வேண்டிய தார்மீக பொறுப்பு சர்வதேச நாடுகளுக்கும் உண்டு. மக்களுக்கும் உண்டு. இலங்கை அமெரிக்காவுடன் முரண்படக்கூடாது என்பதற்காக இதனை அடக்கி வாசிக்கின்றது.

இராஜதந்திர மொழியில் பேச்சுவார்த்தை மூலம் விவகாரத்தை தீர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

இதே ஜே.வி.பி. அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்திருந்தால் நாட்டையே அதிர வைக்கக்கூடிய போராட்டத்தை நடத்தி இருக்கும். ரணில் விக்கிரமசிங்க கடுமையான தொனியில் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக் ஷ கொல்லப்படும் ஈரான் மக்களுக்காக கவலை தெரிவித்துள்ளார். இக்கவலை அவரது மோசமான குண்டு வீச்சினால் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது வெளிவரவில்லை. ரவூப் ஹக்கீம் உட்பட முஸ்லிம் தலைவர்கள் வழமை போல கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் தலைவர்கள் இது பற்றி வாயே திறக்கவில்லை. தமிழ் மக்களை அழிப்பதற்கு ஈரானும் துணை நின்றது என்பதால் அறிக்கை விடுவதை தவிர்த்திருக்கலாம்.

அமெரிக்காவுக்கு அதிருப்தி ஏற்படக் கூடாது எனவும் கருதியிருக்கலாம். அமெரிக்கா இந்த போரில் வெற்றி அடையுமானால் மீண்டும் ஒரு துருவ உலக ஒழுங்கு நிலையே ஏற்படும்.

இது தமிழர்களுக்கு ஏற்றதல்ல. பல்துருவ நிலையே ஏற்றது. குறைந்தபட்சம் இரு துருவநிலையாவது இருக்க வேண்டும். ஒரு துருவ நிலையில் வல்லரசுகள் அரசுகளுக்கு இடையிலான உறவுகளையே முக்கியமாக கொள்ளும். ஒடுக்கப்படும் தேசிய இனங்களை கவனத்தில் கொள்ள மாட்டாது.

இந்தியாவுக்கு கப்பல் அணிவகுப்புக்காக சென்ற ஈரானின் மூன்று கப்பல்களில் ஒன்றே இலங்கைக்கு அருகில் தாக்கப்பட்டுள்ளது.

உண்மையில், இந்த கப்பல்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது இந்தியாவின் கடமை. அங்கு தான் கப்பல் அணி வகுப்பிற்காக சென்றிருக்கின்றன.

இது விடயத்தில் கப்பல்களை இந்தியா காட்டிக் கொடுத்துவிட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்தியா அதை மறுத்துள்ளது.

தற்போது இந்தியா சுமக்க வேண்டிய பாரத்தை இலங்கை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. போரின் வலியை அனுபவரீதியாக சுமந்தவர்கள் தமிழ் மக்கள். அமைதி உருவாக வேண்டும் என அவர்களும் பிரார்த்திக்கின்றனர். அமைதி உருவாகுமா? இது தான் இப்போது எழும் கேள்வி?

சி.அ.யோ­தி­லிங்கம்

Share.
Leave A Reply