தெலுங்கானா மாநிலம், கோரூட்லா அடுத்த மாதப்பூரை சேர்ந்தவர் வைஷ்ணவி (வயது 19). யூடியூபரான இவருக்கு யேசுகோனி குட்டவை சேர்ந்த ஹரிபாபு (26) என்பவர் பழக்கமானார். இவர்களது நட்பு காதலாக மாறியது. இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

வைஷ்ணவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். திருமணத்திற்கு பிறகு ஹரிபாபு மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்த தொடங்கினார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தம்பதி இருவரும் உணவு சாப்பிட்டு விட்டு அறையில் தூங்கச் சென்றனர்.

நள்ளிரவு திடீரென கண் விழித்த ஹரிபாபு பக்கத்தில் தூங்கிக் கொண்டு இருந்த மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்தார். நெற்றி, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார்.

வைஷ்ணவியின் அலறல் சத்தம் கேட்ட வீட்டிலிருந்தவர்கள் அறைக்கு வந்து பார்த்தனர். அப்போது ஹரிபாபு துப்பட்டாவால் மூடிக்கொண்டார். இருவரும் தூங்குவதாக நினைத்து அவர்கள் சென்று விட்டனர்.

நேற்று காலை வைஷ்ணவி அறைக்கு சென்று பார்த்த போது அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். ஹரி பாபு மனைவியை கொலை செய்த பிறகு பைக்கில் தப்பி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வைஷ்ணவியின் தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஹரிபாபுவை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Share.
Leave A Reply