இரான் மற்றும் அமெரிக்கா இடையேயான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை குறித்த ஊகங்கள் தொடர்கின்றன. இதற்கிடையில், யுரேனியம் செறிவூட்டலுக்கு ஐந்தாண்டு காலத் தடை விதிக்க இரான் முன்மொழிந்துள்ளது, ஆனால் அமெரிக்கா இந்த முன்மொழிவை நிராகரித்து, 20 ஆண்டு காலத் தடையைக் கோரியுள்ளது.

இரான் மற்றும் அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, ​​அணுசக்தி நடவடிக்கைகளை நிறுத்த அமெரிக்காவும் இரானும் வெவ்வேறு முன்மொழிவுகளை வழங்கின, ஆனால் இரு தரப்பினருக்கும் இடையே எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்று அந்த செய்தி அறிக்கை கூறுகிறது.

இருப்பினும், ஓர் அமைதி ஒப்பந்தத்துக்கான சாத்தியம் இன்னும் உள்ளது என்பதையும், இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என்பதையும் இந்த விவாதங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதுகுறித்து கருத்து கேட்பதற்காக வெள்ளை மாளிகையை பிபிசி தொடர்புகொண்டுள்ளது.

இரானின் அணுசக்தி லட்சியங்களே இந்த சர்ச்சைக்கு ஒரு முக்கிய காரணம் என்று அமெரிக்கா நம்புகிறது.

இரான் அணு ஆயுதங்களைப் பெறாமல் இருப்பதை அமெரிக்கா உறுதி செய்யும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வலியுறுத்தினார்.

 

இரான் ‘பொருளாதார பயங்கரவாதத்தில்’ ஈடுபடுவதாக வான்ஸ் குற்றச்சாட்டு
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்

ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களைத் தடுப்பதன் மூலம் இரான் அரசு ‘பொருளாதார பயங்கரவாதத்தில்’ ஈடுபட்டு வருவதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.

“இந்த ஆட்டத்தை இரு வழிகளிலும் விளையாட முடியும் என்பதை அதிபர் டொனால்ட் டிரம்ப் காட்டியுள்ளார்,” என்று ஜே.டி. வான்ஸ் ஃபாக்ஸ் நியூஸிடம் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “இரான் பொருளாதார பயங்கரவாதத்தில் ஈடுபட்டால், எந்தவொரு இரானிய கப்பலும் வெளியே செல்ல முடியாது என்ற கொள்கையின் அடிப்படையில் அமெரிக்கா செயல்படும்,” என்றார்.

இஸ்லாமாபாத்தில் இரானுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஜே.டி. வான்ஸ் கூறுகையில், “பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, இப்போது பந்து இரானின் கையில் உள்ளது,” என்றார்.

வான்ஸ் மேலும் கூறுகையில், “இரான் நெகிழ்வுத்தன்மையுடன் இருந்து, அமெரிக்காவின் அத்தியாவசிய கோரிக்கைகளுக்கு இணங்க வேண்டும். இரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் மீது அமெரிக்கா கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். இரான் அணு ஆயுதங்களை உருவாக்க முடியாது என்பதை உறுதிசெய்யும் ஒரு கண்காணிப்பு அமைப்பும் இருக்க வேண்டும்,” என்றார்.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இரானுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் ஜே.டி. வான்ஸ் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அவை முடிவடையவில்லை, அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளைப் பரிமாறிக்கொண்டன.

Share.
Leave A Reply