“திருச்செந்தூர் விஜய் விஸ்வரூப தரிசனம் செய்தி: தேர்தல் களத்தின் நடுவில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிகாலை விஸ்வரூப தரிசனம் செய்து, கடலில் நீராடி, சத்ரு சம்ஹார யாகத்துடன் வெற்றிக்காக பிரார்த்தனை செய்த விஜய், பட்டு வேட்டி அலங்காரத்தில் பக்தர்களை கவர்ந்தார்.

:”தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

சட்டசபை தேர்தலில் 233 தொகுதிகளில் தவெக தனித்து போட்டியிட்ட நிலையில், திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.

வாக்குப்பதிவு அன்று தவெகவின் ட்ரெஸ் கோட் போட்டு பலரும் வாக்களித்திருந்த நிலையில், அடுத்து யார் ஆட்சியை பிடிப்பார் என்று கணிக்க முடியாத அளவுக்கு இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

.சட்டசபை தேர்தல் முடிந்த அடுத்த நாளே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றுள்ளார்.

அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார்.இந்நிலையில் தவெக தலைவர் விஜய் இன்று அதிகாலை திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்ற அவர், அங்கிருந்து கார் மூலம் திருச்செந்தூர் வந்தார்.

பட்டு வேட்டி சட்டை, மேல் துண்டு அணிந்து திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிகாலையில் நடந்த விஸ்வரூப தரிசனத்தில் விஜய் பங்கேற்றார்.

அங்கு சாமி தரிசனம் செய்த விஜய்க்கு திரிசுதந்திரர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கையில் வேலுடன் விஸ்வரூப தரிசனம் செய்த விஜய், கடலில் இறங்கி மலர்கள் சாற்றி முருகனை வழிபட்டார்.

விஜய் வந்தது தெரிந்ததும் அதிகாலையிலேயே அங்கு ரசிகர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. .

விஸ்வரூப தரிசனம்

அதிகாலையில் கடவுளை காணும் முதல் தரிசனம் தான் விஸ்வரூப தரிசனம். கடவுள்களுக்கு நடக்கும் நீராட்டுதலைக் குறிக்கும் சொல் திருமஞ்சனம்.

இந்த திருமஞ்சனத்திற்கு முன்பாகவே அதாவது, முந்தைய தினத்தின் அலங்காரத்தில் கடவுளை தரிசிப்பது தான் விஸ்வரூப தரிசனம்.

முதல் நாள் இரவில் கோவில் நடை அடைக்கப்பட்டு, மறுநாள் காலையில் நடை திறந்ததும், கருவறையில் திரை விலக்கப்பட்டு நடைபெறுகிற முதல் தரிசனத்தை விஸ்வரூப தரிசனம் என்பர்.

பொதுவாக பக்தர்கள் இறைவனை காண்பது தரிசனம். அதுவே கடவுள் பக்தர்களை பார்ப்பது தான் விஸ்வரூப தரிசனம்.

இதுவே மற்ற தரிசனத்திற்கும் விஸ்வரூப தரிசனத்திற்கும் உள்ள வித்தியாசம். .ஐதீகத்தின்படி, காலையில் நடைதிறந்து முதல் முறை தனக்கு முன் இருக்கும் திரை விலக்கப்பட்டதும் தன்னை பார்க்க யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று கடவுள் பார்ப்பார் என்கிறார்கள்.

கடவுளின் அருள்பார்வை நேரடியாக பக்தர்களின் மீது விழுவது தான் இந்த விஸ்வரூப தரிசனத்தின் சிறப்பு என்கிறது ஐதீகம்.

திருச்செந்தூர் முருகன் கோவிலை பொறுத்தவரை குழந்தையாக இருந்த முருகன் தேவர்களுக்கு விஸ்வரூப தரிசனம் அளித்த செய்தி கந்த புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

சூரபத்மனுக்கும் விஸ்வரூப தரிசனம் தந்த பின்னரே அவனை ஆட்கொண்டு கடவுள் முருகன் அருள்புரிந்தார் என்றும், இந்த தரிசனத்தின்போது முருகனுக்கு சேனை தலைவராக இருந்த வீரபாகு கடவுள் முருகனின் உடலில் பதினான்கு உலகங்களையும் தரிசிக்க முடிந்தது என்பது தான் சொல்லப்படும் புராணம். .

விஸ்வரூப தரிசனத்தின் பலன்கள் இத்தனை சிறப்புகள் இருப்பதால் தினமும் காலை 5 மணிக்கு திருச்செந்தூர் கோவிலில் நடக்கும் விஸ்வரூப தரிசனம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். திருச்செந்தூரில் விஸ்வரூப தரிசனம் செய்துவிட்டு முருகனிடம் பிரச்சனையை சொல்லி முறையிட்டால் முருகன் கேட்டதற்கும் மேலாக வரங்களை அள்ளிக் கொடுப்பார் என்று சொல்லப்படுவதுண்டு.

வாழ்க்கையில் தீர்க்க முடியாத பிரச்சனையில் இருப்பவர்கள் விஸ்வரூப தரிசனம் செய்தால் அந்த பிரச்சனை தீரும் என்பதும், விஸ்வரூப தரிசனம் செய்தால் வாழ்வில் ஏற்பட்டுள்ள தடைகள் விலகி நல்ல யோகம் ஏற்படும் என்பதும் ஐதீகம்.

.தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், எதிரிகளை வீழ்த்தி தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைய வேண்டி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் சத்ரு சம்ஹார யாகமும் நடத்தப்பட்டது. விஜய் சார்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் செய்த இந்த யாகத்தில் விஜய்க்கு நெருக்கமான சிலர் மட்டும் பங்கேற்றுள்ளனர்.

திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் தூத்துக்குடி விமான நிலையம் வந்த விஜய் அங்கிருந்து சென்னை திரும்பினார்.

Share.
Leave A Reply