கடந்த 8 வருடங்களில் முதல் தடவையாக இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள   பாலஸ்தீனப் பகுதிகளான மேற்குக்கரை (West Bank), ஜெருசேலம் (Jerusalem) என்பனவற்றில்   மேற்கொண்டு வரும் யூதக் குடியேற்றங்கள் சட்டவிரோதமானவை என ஐ.நா. பாதுகாப்புச்சபை தீர்மானம்  (எண்-2334) நிறைவேற்றியுள்ளது.

இந்தத் தீர்மான நிறைவேற்றத்தில் ஒரு முக்கியமான விடயம் என்னவெனில், 2001இல் இதுபோன்ற ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்திய அமெரிக்காவின் ஒபாமா நிர்வாகம், இம்முறை அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தாது தீர்மானம் நிறைவேற வாய்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நிலைமாற்றத்துக்குக் காரணம், இதுவரை காலமும் இஸ்ரேலின் மிக மோசமான வலதுசாரி அரசாங்கமான பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகுவின் நிர்வாகத்தை அமெரிக்கா ஒரு செல்லப்பிள்ளையாகவே நடாத்தி வந்தது.

இருப்பினும் அமெரிக்காவின் சிறு விமர்சனத்தைக்கூட நெத்தனியாகு ஏற்கத் தயாராக இல்லாமல் இருந்ததுடன், அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகளைக் கூட உதாசீனப்படுத்தியே வந்தது.

அந்த அதிருப்தியின் காரணமாகவே இம்முறை ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இஸ்ரேலைப் பாதுகாக்க அமெரிக்கா முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.

19341431_303

உண்மையில் இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்சினையில் தன்னை ஒரு “நேர்மையான, நடுநிலைமையான சமாதான மத்தியஸ்தர்” என அமெரிக்கா கூறிக்கொண்டாலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அமெரிக்கா ஒருபக்கச் சார்பாக இஸ்ரேலுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்திருக்கிறது.

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் நிறுவப்படும் சட்டவிரோத யூதக் குடியிருப்புகளுக்கு அமெரிக்காவின் ஆசிர்வாதம் எப்போதும் மறைமுகமாக இருந்தே வந்திருக்கிறது.

அதுமாத்திரமின்றி, இஸ்ரேல் இராணுவம் சட்டவிரோத யூதக் குடியிருப்புகளைப் பாதுகாப்பதற்கும், பாலஸ்தீனர்களை ஒடுக்குவதற்கும் அமெரிக்கா பெருமளவிலான இராணுவ உதவிகளை வழங்கியும் வந்திருக்கிறது.

இருப்பினும் ஜோர்ஜ் டபிள்யு.புஸ் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இஸ்ரேலுக்கு எதிரான ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன.

அதேபோல அவரது தகப்பனார் ஜோர்ஜ் எச்.டபிள்யு.புஸ் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் இஸ்ரேலை விமர்சித்து ஒன்பது தீர்மானங்கள் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள கண்டனத் தீர்மானத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேல் சட்டவிரோதமாக யூதக் குடியேற்றங்களை மேற்கொள்வதானது, “சமாதானத்துக்கு பெரும் இடையூறு” என்றும், “சர்வதேசச் சட்டங்களை அப்பட்டமாக மீறும் செயல்” என்றும், “இரண்டு அரசுகள் என்ற நோக்கத்துக்கு ஆபத்தான அச்சுறுத்தல்” என்றும், பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.

58167c2dc36188ee3f8b463e

அத்துடன் ஆக்கிரமிக்கட்ட பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொள்ளும் குடியேற்றங்களை இஸ்ரேல் உடனடியாகவும், முற்றுமுழுதாகவும் நிறுத்த வேண்டும் எனவும் பாதுகாப்புச் சபை கோரியுள்ளது.

தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக் கரையில் இஸ்ரேல் 196 சட்டவிரோதக் குடியிருப்புகளை உருவாக்கியுள்ளதுடன், கேந்திர முக்கியத்துவம் உள்ள இடங்களில் நூற்றுக்கணக்கான காவல் நிலைகளையும் அமைத்துள்ளது.

சமீபத்தில் ஜெருசெலம் மாநகர சபை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் மேலதிகமாக 300 வீடுகளை நிர்மாணிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.

ஐ.நா. பாதுகாப்புச் சபை இதுவரை பல கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தாலும், இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு எதிரான தனது ஆக்கிரமிப்புகளையும், அடாவடித்தனங்களையும் நிறுத்துவதாக இல்லை.

அது தொடர்ந்தும் மூர்க்கத்தனமாக அந்த வழியிலேயே பயணித்து வருகிறது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் கடந்த காலத்தில் தமக்குப் பிடிக்காத கியூபா, வட கொரியா, ஈராக், ஈரான், சிரியா போன்ற நாடுகள் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வந்துள்ளன.

அதுபோன்ற கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து, இஸ்ரேலிய சியோனிச ஆக்கிரமிப்பு அரசை சர்வதேச அரங்கிலிருந்து தனிமைப்படுத்தினால் மட்டுமே, அதன் போக்கை ஓரளவாவது கட்டுப்படுத்து முடியும்.

ஆனால் அமெரிக்கா அதைச் செய்யுமா என்பதுதான் கேள்வி.

இந்திய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி குடும்பம் கோவிலுக்கு செல்லும் காட்சி

Share.
Leave A Reply