முதலில் கோத்தாபய ராஜபக் ஷ, பசில் ராஜபக் ஷ, சமல் ராஜபக் ஷ ஆகியோரின் பெயர்கள் தான் அடிபட்டன. இவர்களுக்கு எதிரான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
அதேவேளை இப்போது ராஜபக் ஷ சகோதரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாது, நிச்சயம் நாமல் தான் வேட்பாளர், பொறுத்திருந்து பாருங்கள் என்று ஊவா முதலமைச்சர் சாமர தசநாயக்க புதிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.
ஜனாதிபதி தேர்தலில் டம்மியாக ஒருவரை நிறுத்தி வெற்றி பெற வைத்த பின்னர், அவரைப் பதவி விலகச் செய்து, ஜனாதிபதி ஆசனத்தில் மஹிந்தவினால் அமர முடியும் என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.
இத்தகைய தருணத்தில் உச்சநீதிமன்றத்தில் சட்டவியாக்கியானம் முக்கியமாகத் தேவைப்படும். அது மஹிந்த ராஜபக் ஷவுக்குச் சாதகமாக அமையுமா என்ற கேள்விகளும் இருக்கின்றன.
பொதுஜன பெரமுனவின் 2020 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கோத்தாபய ராஜபக் ஷ நியமிக்கப்பட்டுள்ளார் என்று, மஹிந்த ராஜபக் ஷவின் பெயரில் ஊடகங்களில் பரவிய அறிக்கை, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
மஹிந்த ராஜபக் ஷ தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் சென்றிருந்த போது தான் இந்த அறிக்கை பெரும்பாலான சமூக ஊடகங்களில் பரவியது.
உடனடியாகவே, மஹிந்த ராஜபக் ஷவின் ஊடகச் செயலாளர் ரொகான் வெலிவிட்ட, அவ்வாறான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது பொய்யான அறிக்கை என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதுபோல கோத்தாபய ராஜபக் ஷவும், தனது டுவிட்டர், பேஸ்புக் பக்கங்களில், இது பொய்யான செய்தி என்றும், மக்களைக் குழப்பும் நடவடிக்கை என்றும் பதிவுகளை இட்டிருந்தார்.
2019 டிசம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டேயாக வேண்டிய நிலையில், ஆளும்கட்சிகள் தரப்பில் யார் வேட்பாளர் என்ற கேள்வியை யாரும் கேட்பதில்லை.
ஆனால், எதிரணி பக்கத்தில், அதாவது மஹிந்தவின் தரப்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்பதையே எல்லா ஊடகங்களும், கிளறிக் கொண்டிருக்கின்றன.
முதலில் கோத்தாபய ராஜபக் ஷ, பசில் ராஜபக் ஷ, சமல் ராஜபக் ஷ ஆகியோரின் பெயர்கள் தான் அடிபட்டன. இவர்களுக்கு எதிரான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
அதேவேளை இப்போது ராஜபக் ஷ சகோதரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாது, நிச்சயம் நாமல் தான் வேட்பாளர், பொறுத்திருந்து பாருங்கள் என்று ஊவா முதலமைச்சர் சாமர தசநாயக்க புதிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டியிடுகிறார்.
ஆனால், 2019இல் ஜனாதிபதி தேர்தல் நடக்கும் போது, நாமலுக்கு 35 வயது ஆகியிருக்காது. அவருக்கு இப்போது தான், 32 வயது. ஜனாதிபதி தேர்தலில் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் போட்டியிட முடியும் என்று அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.
நாமலுக்கு “செக்“ வைக்கும் நோக்கில், தற்போதைய அரசாங்கம் செய்த சூழ்ச்சி இது. இதனைத் தாண்டி அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது சாத்தியமில்லாத விடயம்.
எனவே நாமல் ராஜபக் ஷவை தவிர்த்து விட்டுத் தான், சாத்தியமுள்ளவர்கள் யார் என்று பார்க்க வேண்டியுள்ளது.
அதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் ராஜபக் ஷ குடும்பத்தைச் சாராதவர்களின் பெயர்களும் அடிபடத் தொடங்கியுள்ளன. அதில் முக்கியமான நபர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.
இவர் பொதுஜன பெரமுனவின் தலைவராக இருக்கிறார். ஆனால் வெறும் டம்மி தான். ராஜபக் ஷவினர் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படக் கூடியவர்.
ராஜபக் ஷவினர் சொல்லும் எதற்கும் இவர் தலையாட்டக் கூடியவர் என்பதே, ஜனாதிபதி தேர்தலில் எதிரணி வேட்பாளராக நிறுத்தப்படுவதற்குத் தேவையான முழுத் தகுதி.
கடந்த வியாழக்கிழமை ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த பசில் ராஜபக் ஷ, ராஜபக் ஷ குடும்பத்துக்கு வெளியே உள்ளவர்களும் , ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறியிருந்தார்.
ஆனாலும், யார் யாருடைய பெயர்கள் அவ்வாறு பரிசீலனையில் இருக்கின்றன என்பதை அவர் கூற மறுத்து விட்டார்.
எல்லாம் அவன் செயல் என்பது போல, மஹிந்த ராஜபக் ஷவே முடிவெடுப்பார், அவரே எல்லாவற்றையும் சரியான நேரத்தில் பார்த்துக் கொள்வார், இனி ஜனாதிபதி வேட்பாளர் குறித்து எதுவும் பேசமாட்டேன் என்றும் பசில் ராஜபக் ஷ கூறியிருக்கிறார்.
கிட்டத்தட்ட இதே பாணியில் தான், மஹிந்த ராஜபக் ஷ பொருத்தமானவரை பொருத்தமான நேரத்தில் வேட்பாளராக அறிவிப்பார், அவருக்கு எல்லாவற்றையும் தீர்மானிக்கும் திறன் உள்ளது என்று கோத்தாபய ராஜபக்ஷவும் கூறியிருந்தார்.
அதேவேளை, ராஜபக் ஷவினர் ஒன்றுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக, சமல் ராஜபக் ஷவும் கூறியிருக்கிறார்.
அதாவது, ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில், மஹிந்த ராஜபக் ஷ கைகாட்டும் ஒருவரை ஏற்றுக் கொள்வது அல்லது அவர் முடிவை அறிவிக்கும் வரை எதையும் வெளிப்படுத்தாமல் இருப்பது என்ற விடயத்தில் ராஜபக் ஷவினர் மத்தியில் இணக்கப்பாடு ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
பசில் ராஜபக் ஷ தன்னிடம் ஜனாதிபதியாகும் கனவு இல்லை என்கிறார். கோத்தபய ராஜபக் ஷவோ, மஹிந்த ராஜபக் ஷ தன்னை போட்டியில் நிறுத்தினால் வென்று காட்டுவேன் என்கிறார்.
வெளிப்படையாக யாரும், தாம் போட்டிக் களத்தில் இருக்கிறோம் என்பதை காட்டிக் கொள்ளாமல் இருக்கின்றனர்.
இருந்தாலும், கோத்தாபய ராஜபக் ஷவையும், சமல் ராஜபக்ஷவையும் முன்னிறுத்துபவர்கள் அதற்கான பிரசாரங்களைச் செய்து கொண்டிருக்கின்றனர்.
கோத்தாபய ராஜபக்ஷ தான் அடுத்த ஜனாதிபதி என்றவாறு வியத்மக போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் செய்யும் பிரசாரங்கள் மஹிந்த ராஜபக் ஷவை எரிச்சலடையச் செய்திருக்கிறது.
அதனால் தான், தான் இன்னமும் யாரையும் வேட்பாளராக தெரிவு செய்யவில்லை என்று மஹிந்த ராஜபக் ஷ கூறியிருந்தார். அது வியத்கம அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு கடும் ஏமாற்றத்தையும் , அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தது.
அந்த அமைப்பின் முக்கிய புள்ளிகளில் ஒருவரான நாலக கொடஹேவா, இது தொடர்பாக மஹிந்த ராஜபக் ஷவிடம், நேரடியாகவே கவலையை வெளிப்படுத்தியதாகவும் கூட தகவல்கள் உள்ளன.
இப்படிப்பட்ட சூழலில் தான்- அதாவது, கோத்தாபய ராஜபக் ஷவை வேட்பாளராக நிறுத்த முடிவெடுக்கவில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ கூறிய பின்னர் தான்- கோத்தாபய ராஜபக் ஷவை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார் மஹிந்த ராஜபக் ஷ என்ற போலியான அறிக்கை ஊடகங்களில் பரவியது.
மஹிந்தவுக்கும் கோத்தாபய ராஜபக் ஷவுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தும் நோக்கில் இது பரப்பப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன.
அல்லது, இப்படியொரு அறிக்கைக்கு மஹிந்த ராஜபக் ஷ எப்படி பிரதிபலிக்கிறார் என்பதை அறிந்து கொள்வதற்கு,ம் கோத்தாபய ராஜபக் ஷவின் அனுதாபிகள் கூட இவ்வாறு செய்திருக்கலாம்.
எது எவ்வாறாயினும், உடனடியாகவே கோத்தாபய ராஜபக் ஷவும், மஹிந்த ராஜபக் ஷவின் ஊடகச் செயலாளரும் வெளியிட்ட மறுப்பு அறிக்கைகள், இதனை அவர்கள் தீவிரமான விடயமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.
அதாவது, கோத்தாபய ராஜபக் ஷவை வேட்பாளராக நிறுத்தும் எண்ணம், மஹிந்த ராஜபக் ஷவிடம் இல்லையோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு, சில விடயங்கள் நடந்திருக்கின்றன.
மஹிந்த அணியைச் சேர்ந்த சி.பி.ரத்நாயக்க அண்மையில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருந்தார். “மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் அதற்குத் தடையில்லை. அதற்கு ஒரு வழியுண்டு. அதனை நாம் இப்போது வெளிப்படுத்தமாட்டோம்” என்று அவர் கூறியிருந்தார்.
19 ஆவது திருத்தச்சட்டம் மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கிறது. ஆனாலும், அவர் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று சி.பி. ரத்நாயக்க கூறியிருப்பது, சட்டத்தின் ஓட்டைகள் எதையாவது தேடிப்பிடித்திருக்கலாமோ என்ற சந்தேகத்தை சிலருக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
அதேவேளை, மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாதே தவிர, ஜனாதிபதியாக முடியாது என்று சட்டத்தில் கூறப்படவில்லை என்பதையும் சிலர் நினைவுபடுத்துகிறார்கள்.
அதாவது, ஜனாதிபதி தேர்தலில் டம்மியாக ஒருவரை நிறுத்தி வெற்றி பெற வைத்த பின்னர், அவரைப் பதவி விலகச் செய்து, ஜனாதிபதி ஆசனத்தில் மஹிந்தவினால் அமர முடியும் என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.
இத்தகைய தருணத்தில் உச்சநீதிமன்றத்தில் சட்டவியாக்கியானம் முக்கியமாகத் தேவைப்படும். அது மஹிந்த ராஜபக் ஷவுக்குச் சாதகமாக அமையுமா என்ற கேள்விகளும் இருக்கின்றன.
பின்கதவு வழியாக ஜனாதிபதி ஆசனத்தைப் பிடிக்கும் எண்ணம், மகிந்த ராஜபக் ஷவிடம் இருக்குமானால், அவர் நிச்சயமாக, கோத்தாபய ராஜபக்ச போன்ற ஒருவரை வேட்பாளராக நிறுத்த முனையமாட்டார்.
ஏனென்றால், கோத்தாபய ராஜபக்ஷ போன்றவர்கள், அண்ணனுக்காக பதவியை விட்டுக்கொடுக்க முன்வந்தாலும், அவரைச் சுற்றியிருக்கும் கடும் போக்காளர்கள் அதனை அனுமதிக்கமாட்டார்கள்.
அது மஹிந்தவுக்கு தேவையற்ற சிக்கல்களையும் ஏற்படுத்தும். எனவே அதிகளவு றிஸ்க் எடுத்து அவரை வேட்பாளராக நிறுத்தி, குடும்பத்துக்குள்ளேயும் கட்சிக்குள்ளேயும் குழப்பங்களை ஏற்படுத்துவதை விட, வெளியில் இருந்து டம்மி ஒருவரைத் தெரிவு செய்வது அவரைப் பொறுத்தவரை புத்திசாலித்தனமானது.
ஆனால், டம்மி ஒருவரை வேட்பாளரை நிறுத்துவதிலும் சிக்கல்கள் உள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திசநாயக்கவை போட்டியில் நிறுத்தினாலும் கூட வெற்றி பெறுவோம் என்று அம்பாறையில் நடந்த பொதுஜன பெரமுன கூட்டத்தில் பசில் ராஜபக் ஷ, கூறியிருந்தார்.
அதாவது வேட்பாளர் யார் என்பது முக்கியமல்ல, தமது கட்சிக்கும் மஹிந்தவுக்கும் உள்ள பலமே வெற்றியைத் தீர்மானிக்கும் என்பது பசிலின் கருத்து.
அத்தகையதொரு சூழல் இருந்தால் மாத்திரமே, டம்மி வேட்பாளரை மஹிந்தவினால் துணிந்து களமிறக்க முடியும்.
ஆளும்கட்சி பலமான ஒருவரை நிறுத்தும் போதும், தனிப்பட்ட செல்வாக்குடைய ஒருவராக அவர் இருக்கும் போதும், டம்மிகளை வைத்து மஹிந்தவினால் ஆட்டத்தை ஆட முடியாது.
அப்படியான நிலையில் கோத்தாபய ராஜபக் ஷவோ அல்லது வேறெந்த வலுவான வேட்பாளரையோ தான், மஹிந்த நிறுத்த வேண்டும்.
எனவே தான், மஹிந்த இந்த விடயத்தில் அவசரப்படாமல் இருக்கிறார். அவசரப்பட்டு அவர் எடுத்த முடிவு தான், அரைகுறையில் அவரது ஜனாதிபதி பதவியை இழக்கும் நிலையை ஏற்படுத்தியது.
மீண்டும் ஒருமுறை அப்படியான முடிவுக்குச் செல்ல அவர் முனையமாட்டார் என்றே தெரிகிறது, அதுவரைக்கும் கோத்தாவா பசிலா, சமலா, பீரிசா என்று பல்வேறு பெயர்கள் உலாவிக் கொண்டு தான் இருக்கப் போகின்றன.
-சத்ரியன்