“ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும். வண்டியும் ஒரு நாள் ஓdenis-wiknesvaranடத்தில் ஏறும்” என்று சொல்வார்கள். நீதிமன்றங்களில் விசாரணைக்காக எத்தனையோ பேர் எழுந்து நின்றதைப் பார்த்த நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு, தானே நீதிமன்றத்தில் எழுந்து நின்று விசாரணைக்கு முகம் கொடுக்கும் நிலை வந்திருக்கிறது. இதை விக்கினேஸ்வரன் ஒரு போதும் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்.

விக்கினேஸ்வரனுக்கு இந்த நிலை வந்திருப்பது, அவர் எப்போதும் தன்னை ஒரு நீதியரசராகவே கருதிக் கொள்ளும் நீதித்துறையினால் அல்ல. அவர் பின்னாளில் பங்கேற்றுக் கொண்டிருக்கும் அரசியலினாலேயே.

அதுவும் அவருடைய தரப்பினரால். அதுவும் அவருடைய ஜூனியர்களினால். குறிப்பாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனால். (இன்னொரு ஜூனியரான சுமந்திரன் தொடக்கம் ஆனோல்ட், சயந்தன் வரையில் இன்னொரு வகையில் விக்கினேஸ்வரனைச் சுற்றி முடக்கும் வியூகத்தை அமைத்திருக்கிறார்கள்).

விக்கினேஸ்வரனுக்கு வந்த நெருக்கடி, அவரே உருவாக்கிக் கொண்டது. வடமாகாணசபையில் கல்வி அமைச்சராக இருந்த தம்பிராஜா குருகுலராஜா, விவசாய அமைச்சராக இருந்த பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோர்மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக இந்த இருவரையும் பதவி விலக்கியிருக்க வேண்டும். பதிலாக ஏனைய இரண்டு அமைச்சர்களான ப. சத்தியலிங்கத்தையும் பா.டெனீஸ்வரனையும் சேர்த்து நான்கு அமைச்சர்களையும் பதவி விலக்கியமையே.

“இது முறையற்ற நடவடிக்கை. அநீதியானது. அரசியல் பழிவாங்கல். சுய கௌரவத்துக்கும் நீதி முறைக்கும் அரசியல் விதிமுறைக்கும் எதிரானது…” என்று அப்பொழுதே பலரும் கூறியிருந்தனர். இதைக் கண்டித்து எதிர்க்குரல் எழுப்பினார் டெனீஸ்வரன். தான் பதவி விலகமுடியாது என்று மறுத்தார்.

ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மாற்று அமைச்சரவையை உருவாக்கினார் விக்கினேஸ்வரன்.

denis_18082017_SSS

பா.டெனீஸ்வரன்

நீதி மறுக்கப்பட்டதால் தனக்கு வேறு வழியில்லை என நீதி மன்றத்தை நாடினார். “டெனீஸ்வரன் இந்தளவுக்குப் போயிருக்கத் தேவையில்லை. ஒரு முதியவரை, நீதித்துறையில் உயர் பதவியில் இருந்தவரை, முதலமைச்சுப் பொறுப்பில் உள்ளவரை, பெருந்திரள் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியை இவ்வாறு நெருக்கடிக்குள்ளாக்கியிருக்க வேண்டாம்.

இது ஒரு வகையில் தமிழ் மக்களின் அரசியலைப் பலவீனப்படுத்துவதாக இருக்கிறது. விக்கினேஸ்வரனின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களை அவமதிப்பதாக உள்ளது.

அவரை எதிரியாகக் கருதுவதால் வந்த பிரச்சினை இது” எனச் சிலர் விக்கினேஸ்வரனின் நிலை தொடர்பாகக் கருத்துரைக்கின்றனர். ஏறக்குறைய இதே தொனியை கடந்த வாரம் அரசியல் ஆய்வாளர் நிலாந்தனும் தன்னுடைய பத்தியொன்றில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது இது ஒரு வகையில் முதிய வயதில் உள்ள விக்கினேஸ்வரனின் மீது இரக்கத்தையும் அதன் வழியான அனுதாபத்தையும் உண்டாக்கும்.

ஆனால், அரசியலில் இது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. அரசியலில் விடப்படும் தவறுகளுக்கு முகத்துக்கு நேரே எதிர்ப்பு வரும். கண்டனம் எழும். அதை எதிர்கொண்டே ஆக வேண்டும். இல்லையெனில் அந்தக் களத்துக்கு வரவே கூடாது.

இங்கே விக்கினேஸ்வரன் இரண்டு வகையில் நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறார். ஒன்று சட்ட ரீதியாக – அவருடைய நீதித்துறையினால். மற்றது அரசியலினால். அதுவும் அவர் இன்று பெற்றிருக்கும் அரசியல் அந்தஸ்தினால், உயர் பதவியினால்.

ஆகவே இரண்டிலும் அவருக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி என்பது அவர் சம்மந்தப்பட்ட விடயங்களினாலேயே. அதிலும் அவர் நேரடியாக மேற்கொண்ட நடவடிக்கைகளினால். ஆகவே இதை அவர் எப்படி நீதிமன்றத்திலும் அரசியல் களத்திலும் எதிர்கொண்டு வெற்றியடையப்போகிறார் என்பதே இனி நாம் கவனிக்க வேண்டியது.

ஆனால், விக்கினேஸ்வரன் தன்னை நிதானப்படுத்தும் நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால், முதலில் தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட அமைச்சுப் பொறுப்பை மீள வழங்க வேண்டும் என்று கேட்ட டெனீஸ்வரன், நீதி மன்றத் தீர்பின்படி பதவியை ஏற்றவுடன் அதைத் துறக்கிறேன் என்று தெரிவித்தார்.

ஆனால், இதை விக்கினேஸ்வரன் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தாக்கல் செய்தார் டெனீஸ்வரன். இந்த வழக்கே விக்கினேஸ்வரனை நிற்க வைத்திருக்கிறது.

இதற்குப் பிறகு இந்த விடயத்தில் வடமாகாணசபையின் முதல்வர் சீ.வீ.கே. சிவஞானம் தலையிட்டு நிலைமையைச் சுமுகமாக்குவதற்கு முயற்சித்தார். இந்தச் சமரச முயற்சிக்கு டெனீஸ்வரனும் இணக்கம் தெரிவித்திருந்தார்.

டெனீஸ்வரனுடைய ஒரே கோரிக்கை தன்மீதான குற்றச்சாட்டை மறுப்பதேயாகும். அதன்படி மீளப் பதவி வழங்க வேண்டும். ஆனால் அந்தப் பதவி கிடைத்தவுடன் தான் அதைத் துறந்து விடுவேன் என்பதாகும். இதை அவர் மாகாணசபையின் அமர்வில் பகிரங்கமாகவே தெரிவித்தும் இருந்தார்.

ஆனால் இதற்கும் விக்கினேஸ்வரன் இணங்கவில்லை. அப்படி டெனீஸ்வரனுக்குப் பதவி வழங்கினால் அவர் இடைப்பட்ட காலத்துக்குரிய நிலுவைச் சம்பளத்தைக் கோருவார்.

அப்படிக் கோரினால் அதை வழங்க வேண்டும். அதை வழங்கவேண்டி வந்தால் அந்த இடைப்பட்ட காலத்தில் அமைச்சுப் பொறுப்பிலிருந்த ஏனையவர்களின் நிதியைத்தான் எடுக்க வேண்டி வரும். அதெல்லாம் சிக்கலாகி விடும் என்று கருதியிருக்கிறார் விக்கினேஸ்வரன். இதை அவர் தனக்கு நெருக்கமான உறுப்பினர்களிடம் சொல்லியுள்ளதாக நம்பகரமான செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால், தான் ஒரு போதுமே அப்படி சபையில் சம்பளத்தைக் கோரப்போவதில்லை என்று சொல்லியிருக்கிறார் டெனீஸ்வரன். ஆனாலும் விக்கினேஸ்வரன் இதையிட்டு கவனம் கொள்ளவே இல்லை. இதன் விளைவே அவர் நீதி மன்றத்தில் நின்றது.

ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நீதித்துறையில் செயற்பட்டு அதன் உச்சம்வரை சென்றவர் விக்கினேஸ்வரன். இலங்கையில் இனங்களுக்கிடையிலான சமத்துவம் மறுக்கப்பட்டு, நீதி மறுக்கப்பட்டு, அரச ஒடுக்குமுறையும் இனவாதமும் தலைவரித்தாடிய காலத்தில், ஒடுக்கப்பட்ட சமூகமொன்றிலிருந்து நீதித்துறையில் உயர்ந்து சென்றவர்.

ஆனாலும் அவர் ஒரு போதுமே நீதித்துறையின் சிக்கல்களுக்காளானதில்லை. அவரைப் பற்றிய விமர்சனங்கள் நீதித்துறையிலிருந்து வந்ததில்லை. விக்கினேஸ்வரனுடைய நீதித்துறைச் செயற்பாடுகள் பற்றி அரசியல் ரீதியாகவும் சிக்கல்களோ விமர்சனங்களோ பெரிதாக எழுந்ததில்லை.

விக்கினேஸ்வரனைப்போல உயர் பதவிகளில் இருந்த சரத் என் சில்வா, சிராணி பண்டாரநாயக்க போன்றவர்கள் கடுமையான விமர்சனங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளானார்கள். அதிலும் சிராணியின் பதவியே ஒரு கட்டத்தில் அரசியல் பிரச்சினைகளால் பிடுங்கப்பட்டது.

விக்கினேஸ்வரனோ எப்போதும் பாதுகாப்பாகவே இருந்திருக்கிறார். 1995 ஆம் ஆண்டில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உயர்நீதிமன்ற நீதியரசராக தமிழ்மொழியில் பதவிப்பிரமாண உறுதிமொழி எடுத்துக் கொண்ட விக்னேஸ்வரன், அந்த நிகழ்வில் தமிழர்கள் இலங்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து ஆற்றிய உரை முக்கியமானதாகும். இப்படிக் கடுமையாக அவர் அரசாங்கத்தை விமர்சித்த போதும் அவருக்கு எந்த நெருக்கடிகளும் ஏற்பட்டதில்லை.

அப்படி நீதித்துறையில் பெயரைக் கெடுத்துக் கொள்ளாமல் (தமிழ்த்தரப்பில் ஒரு தொகுதியினரிடம் விக்கினேஸ்வரனின் நீதிச் செயற்பாடுகளைப் பற்றிய விமர்சனங்கள் உண்டு என்பது கவனத்திற்குரியது.

குறிப்பாக புலிகளின் காலத்தில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளின் நீதிமன்ற விசாரணைகள், அளிக்கப்பட்ட தீர்ப்புகளையிட்ட விமர்சனம் இது) தன்னைப் பாதுகாத்துக் கொண்ட விக்கினேஸ்வரனை அவருடைய அரசியல் மடக்கி விட்டது. இப்பொழுது அவருடைய நான்கு ஆண்டுகால அரசியல் அவரை நீதிமன்றத்தில் நிற்க வைத்துள்ளது.

விக்கினேஸ்வரனுக்கு அரசியல் புதிது. பழக்கமில்லாத அரசியல் அவரைப் (பிடரியில்) பிடித்து ஆட்டுகிறது. நீதித்துறையில் அவர் சேகரித்துக் கொண்ட அடையாளங்களை எல்லாம் அவர் தேர்வு செய்த அரசியல் கரைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் இன்று அவர் தான் என்ன கதைக்கிறேன், என்ன செய்கிறேன் என்றே தெரியாத குழப்ப நிலைக்குள்ளாகியிருக்கிறார். இதனையிட்டு அவரை ஆழமாக நேசிப்போர் கவலைப்படுகிறார்கள். அவருடைய அரசியல் எதிரிகள் சந்தோசப்படுகின்றனர். எல்லாவற்றுக்கும் அப்பால் விக்கினேஸ்வரனை வரலாறு எப்படி மதிப்பிடப்போகிறது என்பதே முக்கியமானது.

வரலாற்றுக்கு மட்டுமல்ல, சமகாலத்துக்கும் தேவைப்படுவது, விக்கினேஸ்வரன் பொது அரங்கில் பேசும் அரசியலையும் அதன் உள்ளடக்கத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கான கட்டமைப்பும் பொறிமுறையும் அதனுடைய செயல் விளைவுகளுமே. இவற்றை அவர் எப்படி உருவாக்கிச் செயற்படுத்தப் போகிறார் என்பதாகும்.

சமகாலத்திற் செய்யப்படும் பங்களிப்புகளே ஒருவருடைய அல்லது ஒரு அமைப்பினுடைய வரலாற்றுப் பெறுமானங்களை உண்டாக்குவன. ஆகவே, விக்கினேஸ்வரன் மொழிகின்ற அல்லது பிரகடனப்படுத்துகின்ற அரசியலை நடைமுறைப்படுத்துவதற்கான கட்டமைப்பும் பொறிமுறையுமே அவருடைய வரலாற்றடையாளமாகவும் பெறுமானமாகவும் இருக்கும்.

இதைப்பற்றிய அறிவுரைகள், ஆலோசனைகள், வழிகாட்டல்கள் பலவும் விக்கினேஸ்வரனின் முன்னால் பலராலும் வைக்கப்பட்டுள்ளன. அவருக்கான ஆதரவும் அவர் எதிர்பார்த்ததற்கும் மேலாகக் கிடைத்திருக்கிறது. கட்சிகள் எதனோடும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமலிருக்கும் விக்கினேஸ்வரன் என்ற தனி அடையாளத்துக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய ஆதரவுத்தளம் இது. இன்னொரு வகையில் சொன்னால் தனிக் கட்சிகளுக்கே இந்தளவு ஆதரவுத்தளம் இன்று இல்லை என்று சொல்லலாம். அந்தளவுக்குப் பெரியதொரு பலம் அவருக்குண்டு. ஆனாலும் விக்கினேஸ்வரன் மிகப் பலவீனமாகவே இருக்கிறார்.

அவர் களத்தில் – பந்தயத்தில் – இறங்கட்டும். அப்பொழுது பாருங்கள், அவருடைய குதிரை எந்தளவு சக்தி மிக்கது என்று தெரியும் என்கின்றனர் சிலர். இது விக்கினேஸ்வரனைப் பலமான சக்தியாகக் கருதும் தரப்பு. இவர்களைப் பொறுத்தவரை இன்று விக்கினேஸ்வரனுக்கு நிகரோ மாற்றோ இல்லை என்பது முடிவு.

இதையே மறுதரப்பும் சொல்கிறது. ஆமாம், அவர் பந்தயத்தில் இறங்கட்டும். அப்போது விளங்கும் அவருடைய குதிரையின் பலம் எப்படியானது? என. இவர்களுடைய கணிப்பில் விக்கினேஸ்வரன் சும்மா வாயினால் கம்பு சுத்துகிற பேர்வழியே என்பதாகும்.

இதையெல்லாம் கடந்து விக்கினேஸ்வரன் எப்படி நிற்கப்போகிறார் என்பதே இன்றைய கேள்வி.

இதேவேளை நீதிமன்றத்தில் விக்கினேஸ்வரனை நிற்க வைத்திருக்கும் டெனீஸ்வரனுடைய தனிப்பட்ட அபிப்பிராயத்தையும் இங்கே நோக்க வேண்டும். டெனீஸ்வரன் சொல்கிறார், என்மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டினை மறுக்க வேண்டியது எனக்குத் தவிர்க்க முடியாதது.

அதை நான் முதலமைச்சருக்குத் தெளிவுபடுத்தியிருந்தேன். அவர் அதனைப் புரிந்து கொண்டிருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது. முதல் தடவை நீதிமன்றத்துக்குப் போகவேண்டியிருந்தது, என்னுடைய பதவி முறையற்று – முறையற்ற குற்றச்சாட்டிற்காகப் பறிக்கப்பட்டதற்காக. இரண்டாவது தடவை நீதிமன்றத்தை நாட வேண்டியிருந்தது நீதிமன்றத்தீர்ப்பை அவமதித்ததற்காக.

நீதித்துறையிலும் அரசியல்துறையிலும் செயற்படும் ஒரு மூத்தவர் இப்படித் தவறுகளை இழைப்பது வருத்தத்திற்குரியதே. ஆனாலும் அவரை நான் அரசியல் ரீதியாகவோ தனிப்பட்ட ரீதியிலோ எதிராகப் பார்க்கவில்லை. அவருக்கான மதிப்பை அளிக்கிறேன்” என.

ஆகவே இங்கே பிரச்சினை, விக்கினேஸ்வரன் அரசியல் விடயங்களை அதற்கான பொறுப்புணர்வோடும் சரியாகவும் மேற்கொள்ளவில்லை என்பதனால் ஏற்பட்ட விளைவுகளே. இதை அவர் ஏன் செய்கிறார்? அவருக்கு இது விளங்காதா? என்றால், அப்படியும் சொல்ல முடியாது. அரசியலில்தான் அவர் புதியவர். அனுபவம் குறைந்தவர் என்றால், நீதித்துறையிலும் அனுபவம் குறைந்தவர் என்று சொல்ல முடியாது.

நீதித்துறையில் அவரையும் விட இளையவரான ஜூனியர் ஒருவரிடமே இன்று விக்கினேஸ்வரன் தோற்றிருக்கிறார். இதைக்குறித்து விக்கினேஸ்வரனும் அவரை ஆதரிப்போரும் கவனம் கொள்வது அவசியம்.

அரசியலில் நேர்மையோடு புத்திசாலித்தனமும் துணிச்சலும் மக்களுடனான உறவும் (மக்கள் என்பது அவருடைய பிள்ளைகளை அல்ல. பொதுசனங்களையே) அவர்கள் மீதான கரிசனையும் அர்ப்பணிப்பான செயற்பாடுகளும் அவசியம். இவையே ஒருவரை அரசியலில் தலைமைச் சக்தியாக்கும். இவை இல்லை என்றால், நின்று பிடிப்பது கடினம்.

என்னதான் உயரக் கத்தினாலும் தனிக்குரலுக்கு ஒரு எல்லைக்கு அப்பால் எந்த வலிமையும் இருப்பதில்லை. ஏறக்குறைய விக்கினேஸ்வரனின் நிலை இன்று இதுதான். அவர் ஏராளமாகப் பேசுகிறார். பல நியாயங்களை எடுத்துரைக்கிறார்.

அவற்றிற்கு இன்று ஒரு வெகுஜனக் கவனம் உண்டு. ஆனால், அவர் தொடர்ந்து எல்லாவற்றைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கும் ஒருவராகவே இன்று அடையாளமாகி வருகிறார். செய்ய வேண்டிய, கவனிக்க வேண்டிய பல விடயங்களில் அவர் கோட்டை விட்டிருக்கிறார் என்ற விமர்சனம் கடுமையாக இருக்கிறது.

இது அவரையிட்ட நம்பிக்கையீனங்களையும் கவர்ச்சியையும் குறைக்கிறது. இந்த இடத்தில்தான் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்காக அவர் நீதி மன்றத்தில் எழுந்து நிற்க வேண்டி வந்திருக்கிறது. இது விக்கினேஸ்வரனுக்குப் பெரியதொரு அடி சறுக்கலே.

– கருணாகரன்-

Share.
Leave A Reply