நான் சர்வாதிகாரி தான் – வடக்கில் தேர்தலை நடத்தினேன்
பொருளாதாரத்தை பாதுகாப்பதில் அரசாங்கம் தோல்வி
தேர்தலில் மாற்று அரசை உருவாக்கப் போராட்டம்
சர்வதேச நாடுகளுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டுவதில் தற்போதைய அரசாங்கம் சிறந்த அனுபவசாலியாக விளங்குகின்றது.
வேறு எந்தவொரு உலக நாடோ எம்மை வழிநடத்த முடியாது. எனவே எனது அரசியல் நடவடிக்கைகளை இந்தியாவிற்கோ அல்லது வேறு எந்தவொரு நாட்டிற்கோ தீர்மானிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
நான் சர்வாதிகாரிதான் . ஆனால் போர் முடிந்த பின்னர் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் வடக்கில் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தினேன்.
தேசிய அரசாங்கம் இன்று தேர்தலை நடத்தாது நல்லாட்சி குறித்துப் பேசி வருகின்றது . அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாயில் ஏற்பட்டுள்ள பாதாள வீழ்ச்சியினால் நாட்டில் பாரிய நிதி நெருக்கடி ஏற்பட்டு பொருளாதாரம் வீழ்ச்சிக்கண்டுள்ளது.
அரசாங்கத்தின் இயலாமையே அனைத்து வீழ்ச்சிகளுக்கும் காரணமாகும் . எனவே மாற்று அரசாங்கம் ஒன்று உருவாக தேர்தலை வலியுறுத்திய போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு – விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது மஹிந்த ராஜபக்ஷ ஊடகவியலாளர்கள் மத்தியில் தொடர்ந்தும் பேசுகையில் ,
நாடு இன்று பாதாளத்தை நோக்கி செல்கின்றது. அனைத்து துறைகளிலுமே பாரிய வீழ்ச்சி நிலையே காணப்படுகின்றது.
தேசிய பொருளாதாரத்தின் மிகவும் மோசமான நிலைமை தற்போது வெளிப்பட்டுள்ளது. டொலரின் பெறுமதி வரலாறு காணாதளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துள்ளது.
டொலரின் பெறுமதி நாளுக்கு நாள் அதிகரிப்பதனால் சர்வதேசத்தில் பெற்றுக் கொண்ட கடன்களுக்கான தவணைகள் மற்றும் வட்டி என பல்வேறு வகையிலும் நாடு செலுத்தும் தொகை பன் மடங்காக அதிகரித்து விட்டது.
2014 ஆம் ஆண்டு ஆட்சியை கையளிக்கும் போது நாட்டின் கடன் சுமை 7391 பில்லியனாக காணப்பட்டது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் தேசிய அரசாங்கம் 11 ஆயிரம் பில்லியனுக்கும் அதிகமான கடனைப் பெற்று அதனை செலுத்திக் கொள்ள முடியாது திண்டாடுகின்றது.
மறுபுறம் முதலீட்டாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். பங்குச் சந்தை மற்றும் தேசிய வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்து நிதிச் சந்தையில் ஒரு நம்பிக்கையற்ற தன்மை உருவாகியுள்ளது.
அரசாங்கத்தின் இயலாமையின் வெளிப்பாடாகவும், நிர்வாகச் சீர் கேடுகளினால் ஏற்பட்ட நிலைமைகளுமே இவையாகும். நாட்டை பாதுகாப்பதில் அரசாங்கம் முழுமையாக தோல்வி கண்டுள்ளது. இந்த நிலைமை பொருளாதார துறையில் மிகவும் மோசமாக வெளிப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையிலான புரிந்துணர்வுகள் கேள்விக்குறியாகியுள்ளன.
தேசிய பிரச்சினைகளில் தீர்மானங்கள் எடுக்கும் போது இரு தரப்புமே வௌ;வேறு திசைகளில் பயணிக்கின்றனர். இவ்வாறானதொரு நிலைமை நாட்டின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமாக அமையாது.
நாட்டை இந்த நெருக்கடியான நிலைமையில் இருந்து மீட்க வேண்டுமாயின் வலுவானதொரு தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் தேர்தல் முக்கியமானதொன்றாகும்.
ஜனநாயகத்தை பாதுகாப்பதாக ஆட்சிக்கு வந்த தேசிய அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்தாது ஒத்திவைத்துள்ளது. நான் சர்வாதிகாரிதான். ஆனால் 2009 ஆம் ஆண்டில் போர் நிறைவடைந்தவுடன் வடக்கில் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தினேன்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 7.5 வீதமாக எமது ஆட்சி காலத்தில் பதிவாகியது. ஆனால் இன்று அனைத்துமே தலைகீழாகியுள்ளன. எனவே மாற்று அரசாங்கமொன்று ஆட்சி அதிகாரத்தை பொறுப்பேற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஜேர்மன் மற்றும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடமிருந்து நாட்டின் அபிவிருத்திக்காக நிதி உதவிகளை பெற்றுக் கொள்வது ஒரு சாதாரண விடயமாகும்.
ஆனால் அவ்வாறு பெற்றுக் கொள்கின்ற கடனை செலுத்த முடியாது திண்டாடுகின்ற நிலைமை எமக்கு ஏற்படவில்லை. சர்வதேச முதலீட்டாளர்களுக்கு இலங்கை மீது நம்பிக்கையற்ற நிலைமை தற்போது உருவாகியுள்ளது. அரசியல் ஸ்திரமற்ற தன்மையே இதற்கு பிரதான காரணமாகும்.
ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ள சுதந்திரக் கட்சியிடம் இனி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இணைந்து செயற்பட முடியாது. பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எம்மீது சுமத்தப்பட்டாலும் அவை ஆதாரமற்ற அரசியல் நோக்கங்கள் கொண்டவையாகும்.
எனது மீள் அரசியல் பிரவேசம் தொடர்பான அச்சம் காரணமாகவே எனக்கெதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சர்வதேச நாடுகளுடன் இணைந்து சூழ்ச்சி செய்வதில் தேசிய அரசாங்கம் திறமையாக செயற்பட்டுள்ளது. எந்தவொரு வெளிநாடுகளின் வழிநடத்தலுடனும் செயற்பட வேண்டிய தேவை எமக்கு கிடையாது.
இந்திய விஜயம் கூட சிறப்பானதாகவே அமைந்தது. எமது அரசியல் நடவடிக்கைகளை அவர்கள் தீர்மானிக்க முடியாது.
வேட்பாளர் குறித்தும் எவ்விதமான விடயங்களையும் நான் குறிப்பிடவில்லை. ஜனாதிபதி வேட்பாளராக ராஜபக்ஷ ஒருவர் வேட்பாளர் பட்டியலில் இருக்கலாம் என்றே கூறினேன் எனத் தெரிவித்தார்..
லியோ நிரோஷ தர்ஷன்