பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்த நரேந்திரமோடி தலைமையிலான இந்திய மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
மேலும், இம்மூவரையும் விடுவிப்பது பற்றி மாநில அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் பரிந்துரைத்தது. இதனால், மூவரும் விடுதலையாவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்து பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்படுவதற்கு இடைக்கால தடைபெற்றது. இதுதொடர்பாக மத்திய அரசு விரிவான பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கடந்த மே மாதம் இடம்பெற்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
இதனால், புதிதாக பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு ராஜீவ் கொலையாளிகள் விடயத்தில் என்ன கொள்கை முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்குத்தண்டனையை பெற்று கொடுக்க தீவிரமாக இருப்பது தெரியவந்துள்ளது.
சமீபத்தில் புதிய சொலிசிட்டர் ஜெனரலாக ரஞ்சித்குமார் நியமிக்கப்பட்டார். அவர், ராஜீவ் கொலை குற்றவாளிகளை தூக்கில் போடலாம் என்று கருத்து தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரையும் தூக்கிலிட பரிந்துரை செய்து மனு தயாரித்து உச்சநீதிமன்றில் தாக்கல் செய்யுமாறு சட்ட அமைச்சகத்திடம் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், இம்மூவரையும் தூக்கில் போடுவதை உறுதிசெய்யும் வகையில் தனிப்பட்ட சிறப்பு மனுவாக அந்த மனுவை தயாரித்து அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ.க. அரசின் இந்த முடிவு தமிழ் ஆர்வலர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.