வட ஈராக்கிலுள்ள கொஷோ கிராமத்தை சுற்றி வளைத்துள்ள ஐ.எஸ்.போராளிகள், அங்குள்ள மக்களுக்கு மதம் மாறுவதற்கு காலக்கெடு விதித்துள்ளனர்.
அவ்வாறு மதம் மாறுவதற்கு தவறுபவர்கள் கொல்லப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொஷோ கிராமத்திலுள்ளவர்கள் மதம் மாறத் தவறும் பட்சத்தில் அந்த கிராமத்திலுள்ள 2,500 பேரும் கொல்லப்படும் அபாயம் நிலவுவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான அதிர்ச்சி தகவலை பிரித்தானிய டெயிலி மெயில் ஊடகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது.
போராளிகள் அந்தப் பிராந்தியத்தில் தம்மால் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களுக்கு சிலுவையில் அறைந்து மரணதண்டனை நிறைவேற்றும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் கனா மற்றும் ஹெஸான் ஆகிய இரு கிராமங்களை ஐ.எஸ். போராளிகள் கைப்பற்றியிருந்தனர். அவர்கள் கனா கிராமத்தில் 32 ஆண்களைக் கொன்று அங்கிருந்த பெண்களை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
ஹெஸான் கிராமத்தில் தம்மால் பிடிக்கப்பட்ட பெண்கள் அனைவரையும் நிர்வாணமாக்கி அழைத்துச் சென்றதுடன் சுமார் 70 ஆண்களை சுட்டுக் கொன்றுள்ளனர்.
இந்நிலையில் அச்சமடைந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் தற்கொலை செய்யும் முகமாக தனது வீட்டின் மூன்றாம் மாடியிலிருந்து குதித்ததாகவும் புதிதாக திருமணமான 26 வயது பெண்ணொருவர் தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டதாகவும் ‘டெயிலி மெயில்’ ஊடகவியலாளர் அயன் பிரெல் கூறுகிறார்.