தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் எப்போதோ கோடிகளில் சம்பளம் வாங்க ஆரம்பித்துவிட்டனர். எண்பதுகளிலேயே கோடிகளைத் தொட்டுவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி. என்ன ஆச்சர்யம் என்றால் அவரை விட ஒரு ரூபாயாவது கூடுதலாக சம்பளம் பெறுவேன் என்று கூறி, அதைச் சாதித்தும் காட்டினார்கள் ராஜ்கிரண், ராமராஜன் ஆகியோர்.
இன்று முதல் படம் ஹிட்டானதுமே, அடுத்த படத்துக்கு கோடிகளில்தான் சம்பளமே பேசுகிறார்கள் ஹீரோக்கள். இத்தனைக்கும் முதல் படத்துக்கு சம்பளம்கூட வாங்கியிருக்க மாட்டார்கள் அல்லது சம்பளத்தை இயக்குநருக்குக் கொடுத்து நடித்திருப்பார்கள்.
ஹீரோயின்கள் நிலைமை அப்படியில்லை. அவர்கள் எத்தனை வெற்றிப் படங்களில் நடித்தாலும் லட்சங்களில்தான் சம்பளம். ஆனால் 2000 ஆண்டுக்குப் பிறகு, அந்த நிலை மாற ஆரம்பித்தது.
இன்று பல நடிகைகள் கோடிகளில் சம்பளம் பேசுகிறார்கள், வாங்குகிறார்கள்.
அவர்களில் சிலரைப் பார்ப்போம்…
நயன்தாரா 2004-ம் ஆண்டு அறிமுகமானார் நயன்தாரா. அந்தப் படத்தில் இவருக்கு மிகக் குறைந்த சம்பளம். ரூ 2 லட்சம் கூட இல்லை. ஆனால் அதற்கடுத்த படமே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி. அதில் நல்ல சம்பளம். அடுத்த படத்திலேயே ரூ 50 லட்சத்துக்கு தாவியது அவர் ரேட்!
பில்லாவில் கோடி… சிம்புவுடனான காதல் தோல்விக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்தார். படம் பில்லா. கவர்ச்சி நடிகைகளையே பின்னுக்குத் தள்ளும் அளவு அதிகபட்ச கவர்ச்சியுடன் வந்த அவருக்கு அந்தப் படத்தில் சம்பளம் ரூ 1 கோடி. அதன் பிறகு படத்துக்குப் படம் அவர் சம்பளம் கோடிகளில்தான்.
இன்று ஒரு படத்துக்கு அவர் ரூ 2 முதல் 2.50 கோடி வரை பெறுகிறார். அதற்கேற்ற மாதிரி, அவர் நடித்த படங்கள் வசூலிலும் மோசம் போவதில்லை, சுமார் படம் எனப்பட்ட இது கதிர்வேலன் காதல் வரை!
ஹன்சிகா சம்பள விஷயத்தில் போட்டி என்றால் இப்போதைக்கு அது நயன்தாராவுக்கும் ஹன்சிகாவுக்கும்தான். இத்தனைக்கும் ஹன்சிகா நடிக்க வந்த புதிதில் ராசியில்லா நடிகையாகத்தான் பார்க்கப்பட்டார்.
ஆனால் வேலாயுதம் படத்துக்குப் பிறகு அவரது மார்க்கெட் மதிப்பு ஒரே சீராகப் போக ஆரம்பித்துவிட்டது. இன்று அவர் ஒரு படத்துக்கு ரூ 2 கோடி முதல் 2.30 கோடி வரை பெறுகிறாராம்.
காஜல் அகர்வால் காஜல் அகர்வாலும் தமிழில் ஆரம்பத்தில் தோல்விப்பட நடிகையாகப் பார்க்கப்பட்டவர்தான். மகதீராவுக்குப் பிறகு தெலுங்கில் கோடிகளில் சம்பளம் வாங்கினார்.
தமிழில் நான் மகான் அல்ல, துப்பாக்கி படங்களுக்குப் பிறகு அவரும் கோடிகளில் சம்பளம் பேச ஆரம்பித்துவிட்டார். இப்போது தமிழில் ஒரு படம்தான் அவருக்கு உள்ளது.
தெலுங்கில் நான்கு படங்கள். சம்பளம் என்று பேசினால் ரூ 1.3 கோடியில் ஆரம்பித்து, ரூ 1 கோடிக்கு சம்மதம் சொல்கிறாராம்.
தமன்னா மிக இளம் வயது ஹீரோயின் என்ற அடைமொழியுடன் வந்த தமன்னாவும் தமிழில் ஒரு தோல்விப்பட நாயகியாகத்தான் அறிமுகமானார். ஆனால் கல்லூரி படத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தமன்னாவுக்கு பெரும் வரவேற்பு.
பையா, சுறா படங்களில் தமன்னா சம்பளம் கோடியைத் தாண்டியது. ஆனால் ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ள தமன்னா ரூ 75 லட்சம் வரை வாங்குகிறாராம்!
சமந்தா விண்ணைத் தாண்டி வருவாயாவில் சின்ன வேடத்தில் வந்த சமந்தா, அடுத்து பாணா காத்தாடியில் நடித்தார். படம் சரியாகப் போகவில்லை. அதன் பிறகு அவர் நடித்த எந்தத் தமிழ்ப் படமும் ஓடவே இல்லை.
நீதானே என் பொன்வசந்தம் மிகப்பெரிய ப்ளாப். ஆனால் அம்மணியின் சம்பளம் இப்போது ரூ 1.5 கோடி, அஞ்சானில்!
அனுஷ்கா அனுஷ்காவின் ரேஞ்ச் கடந்த மூன்றாண்டுகளாகவே ஒரே மாதிரிதான். அதாவது ரூ 1 கோடி வரை. ஆனால் லிங்காவில் ரஜினி நாயகியான பிறகு, அவர் மேலும் ரூ 50 லட்சத்தை உயர்த்திக் கொண்டாராம். தெலுங்கிலும் இதே நிலைதான்.
த்ரிஷா ‘பத்தாண்டுகளுக்கும் மேல்…’ – இப்படித்தான் த்ரிஷா பற்றிய செய்திகளே ஆரம்பமாகின்றன. அந்த அளவுக்கு தென் இந்திய சினிமாவில் எவர்கிரீன் நாயகி.
நான்கு ஆண்டுகளுக்கு முன்புவரை அவர் சம்பளம் ரூ 1.5 கோடி. இப்போதும் லைம்லைட்டில் இருக்கிறார். ஆறேழு படங்கள் பண்ணுகிறார். சம்பள விஷயத்தில் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்கிறார்.
பூலோகத்தில் அவருக்கு சம்பளம் ரூ 70 லட்சம். அடுத்த ஜெயம் ரவி படத்துக்கு ரூ 1 கோடியில் ஆரம்பித்து 90 லட்சத்தில் முடித்திருக்கிறார்கள்.
ஸ்ருதிஹாஸன் கப்பர் சிங் என்ற படம் வரும் வரை, ஸ்ருதி ஹாஸன் ரொம்பவே கேலிக்குரிய நாயகியாக பார்க்கப்பட்டார்.
நடிப்பும் வரல, கதாநாயகிக்குரிய லட்சணமும் இல்லை என்றெல்லாம் சொல்லிவந்தவர்கள், இப்போது ஸ்ருதி மாதிரி ஒரு ஹீரோயினைப் பார்க்க முடியாது எனப் புகழ்கிறார்கள்.
தமிழில் அவருக்கு ஹிட் படங்களே இல்லை. ஆனால் ரூ 1 கோடி கொடுத்து புதுப்படத்துக்கு ஒப்பந்தம் செய்கிறார்கள்.
லட்சுமி மேனன் தமிழ் சினிமாவின் அதிர்ஷ்ட லட்சுமியாகப் பார்க்கப்படுவர் லட்சுமி மேனன். இதுவரை ஒரு தோல்விப்படம் கூடக் கொடுக்காதவர் என்ற பெருமை அவருக்கு.
வெற்றிப்பட நாயகியாக இருந்தாலும் இன்னும் ரூ 60 லட்சம் வரைதான் வாங்கிக் கொண்டிருக்கிறாராம். அடுத்த படத்தில் கோடியைக் கொட்டித் தரத் தயாராக உள்ளனர் தயாரிப்பாளர்கள்! அடுத்த ஆண்டு இந்தப் பட்டியலில் ப்ரியா ஆனந்த், ஸ்ரீதிவ்யா போன்றவர்கள் இடம்பிடிக்கக் கூடும்.