வடக்கு மாகாண விவசாய அமைச்சா் ஐங்கரநேசன் அவா்களுடனான சிறப்பு நோ்காணல்

கேள்வி – வணக்கம் அமைச்சா் அவா்களே! வடக்கில் ஏற்பட்டுள்ள வறட்சி பற்றி நாம் முதலமைச்சருடன் நோ்காணல் ஒன்றை மேற் கொண்டிருந்தோம். அந்த நோ்காணலில் பின் அவா் வடக்கின் வறட்சி தொடா்பாக உங்களைக் கேட்கும் படி தெரிவித்திருந்தார். ஆகவே நீங்கள் இது தொடா்பாக ஒரு சிறப்பு விளக்கம் தருவீா்கள் என நினைக்கின்றோம். இந்த வறட்சி பற்றி என்ன நினைக்கின்றீா்கள்,?­

பதில் – (புன்முறுவல் ஒன்றுடன் பதில் தருகிறார்) முதலமைச்சா் என்னைப் பற்றி நன்கு அறிந்தவா். அதனாலேயே என்னை விவசாய அமைச்சராக நியமித்தார். சுரேஸ்பிரேமச்சந்திரனின் தம்பி இந்த அமைச்சைப் பெறுவதற்கு தலைகீழாக இருந்தும் அவா் இந்த அமைச்சை என்னிடமே தந்தவா்.

முதலமைச்சர் ஒரு தீா்க்கதரிசனமான ஆள். அவரை நாம் முதலமைச்சராகப் பெறுவதற்கு பெரும் தவம் செய்திருக்க வேண்டும். ஆழமான அரசியலுடன் ஆண்மீகத்தையும் சோ்த்து மக்களுக்கு சேவை செய்து அளப் பெரும் பணியாற்றி வருகின்றார்.

தமிழ் மக்களின் அடுத்த தேசியத்தலைவா் என்ற நிலைக்கு வரவேண்டியவா். தன்னைச் சூழ்ந்து நின்று குலைக்கும் நாய்களை எல்லாம் பொருட்படுத்தாது முன்னோக்கிச் செல்லும் சிங்கத்தைப் போன்றவா். வடக்கு மாகாணத்தைக் குழப்பிக் கலைக்க நினைக்கும் சிங்கள அரசாங்கத்திற்கு சிம்மசொப்பனமாக விளங்குபவா்

கேள்வி – நாங்கள் வடக்கின் வறட்சி பற்றி உங்களிடம் பேட்டி எடுக்கவே வந்திருக்கின்றோம். ஆகவே நீங்கள்……

பதில் – ஓ.எனக்குத் தெரியும். அது சரி நீங்கள் ஏன் வடக்கின் வறட்சி பற்றி பேட்டி எடுக்கிறீங்கள். இலங்கையின் கிழக்கிலும் வறட்சி, மேற்கிலும் வறட்சி, தெற்கிலும் வறட்சி அதை பற்றி எல்லாம் பேட்டி எடுக்காமல் வடக்கின் வறட்சி பற்றி ஏன் பேட்டி எடுக்க நினைக்கின்றீா்கள்?

கேள்வி – அப் பகுதிகளில் வறட்சி நிலவினாலும் அங்கே பேட்டி எடுக்கக் கூடிய தகுதியான நிலையில் ஒருவரும் இல்லை. அதுதான்….

பதில் – (புன்முறுவலுடன்) சரி..சரி.. இப்போ நான் வடக்கின் வறட்சி பற்றி முழுமையான விளக்கத்தைத் தருகிறேன். அதுவரைக்கும் நீங்கள் எந்தக் குறுக்குக் கேள்வியையும் கேட்கக்கூடாது.

கேள்வி – சரி. நீங்கள் விளக்கம் தந்த பின் நாம் கேள்வி கேட்கின்றோம்ஃ

பதில் – வடக்கில் வறட்சி ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இலங்கை அரசின் சதி நடவடிக்கையே. வடக்கில் வறட்சியை ஏற்படுத்தி அதன் மூலம் தென்பகுதியில் உள்ள ஆறுகளில் இருந்து நீரை வடபகுதிக்குக் கொண்டு வருவதன் மூலம் வடபகுதி மக்களை தமக்கு அடிமைகளாக வைத்திருக்க நினைக்கின்றது.

அதற்காகத்தான் குடாநாட்டுக்கான இரணைமடு நீா்த் திட்டம் என்ற ஒன்றை அரசு ஆயுதமாக வைத்து அரச அடிவருடிகளின் மூலம் அதை நிறைவேற்றத் திரிகின்றது. வடபகுதி மக்கள் ஏதாவது ஆா்ப்பாட்டம் நடாத்தினால் அதை அடக்குவதற்காக நீரைப் பயன்படுத்துவதற்கு திட்டமிடுகின்றது.

முன்னைய காலங்களில் பொருளாதாரத் தடையை ஏற்படுத்தி எவ்வாறு தமிழா்களை சீரழித்ததோ அதே போல் தற்போது நீரைப் பயன்படுதத் நினைக்கின்றது. வடபகுதியில் வறட்சியை ஏற்படுத்துவதற்கான திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கின்றது.

உயா் பாதுகாப்பு வலையங்கள் என்ற போர்வையில் அங்கு இராணுவ முகாம்களை ஏற்படுத்தி குளாய்க் கிணறுகளை தோண்டி குடாநாட்டின் அரிய நிலத்தடி நீா் வளத்தை உறுஞ்சி எடுத்து அப்பகுதியில் விவசாயத்தைச் செய்து தென்பகுதிக்கு விவசாய உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்கின்றது.

அத்துடன் நயவஞ்சகத் தனமாக நிலத்தடி நீரை வற்றிப் போவதற்கா பாரிய நீா் இறைக்கும் இயந்திரங்கள் மூலம் நீரை உறுஞ்சி கடலுக்குள் வெளியேற்றுகின்றது. ஆகவே வடபகுதில் வறட்சி ஏற்படாது இருக்க முதலாவதாக வடக்கில் நிலை கொண்டுள்ள படையினரை உடனடியாக வடபகுதில் இருந்து அகற்ற வேண்டும்.

அடுத்து வடக்கு மாகாணசபைக்கு முழு அதிகாரமும் வழங்க வேண்டும். அப்பொழுதுதான் வறட்சி ஏற்பட்டாலும் நான் வெளிநாடுகளுக்குச் சென்று முக்கியமாக ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்குள்ள சூழலியலாளா்களுடன் கலந்துரையாடி வறட்சி நிலையைச் சமாளிப்பது எப்படி என அறிந்து இங்குள்ளவா்களுக்கு அதனை விளங்கப்படுத்தலாம்.

அத்துடன் வெளிநாடுகள் தரும் நிதியைக் கொண்டு ஏராளமான நீா்த் தாங்கி வாகனங்களைக் கொள்வனவு செய்து தென்பகுதி ஆறுகளில் இருந்து நீரை நிரப்பி வடபகுதியில் நீா்பற்றாக்குறையால் அவதிப்படும் மக்களுக்கு குடி நீரைக் கொடுக்கலாம்.

அத்துடன் வடபகுதியில் ஏற்பட்ட வறட்சிகளைப் நேரடியாகப் பார்வையிட்டு அறிவதற்காக எனக்கும் ஏனைய அமைச்சா்களுக்கும் முதலமைச்சருக்கும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஐந்து உலங்கு வானுார்திகளைக் கொள்வனவு செய்ய நடவடிக்கையும் எடுக்க வேண்டும். அதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும். அவ்வாறு அனுமதி அளிக்காவிட்டால் வறட்சியை ஏற்படுத்தும் அரசின் திட்டமிட்ட நடவடிக்கையை வடபகுதி மக்கள் புரிந்து கொள்வார்கள்.

அத்துடன் வடபகுதி மக்களுக்கு கடல் நீரில் இருந்து நன்னீரைப் பெறுவதுவது பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அவா்கள் கடல் நீரில் இருந்து நன்னீரைப் பெறுவார்களாயின் அவா்கள் பெறும் ஒவ்வொரு குடம் நீருக்கும் பத்து ரூபா ஊக்கத் தொகையை விவசாய அமைச்சு கொடுக்கும்.

அவா்கள் பெற்றுக் கொண்டுவரும் நன்னீரைக் கொண்டு கோப்பாய் வெளியில் பாரிய நீா்த் தொட்டியை அமைத்து அங்கு அந்த நீரைத் தேக்கி வைத்து தாகத்தில் வரும் மக்களுக்கு நீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட இந்த வறட்சி நடவடிக்கையை முறியடிப்பதற்கு என்னிடம் ஏராளமான முறியடிப்புத் திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் இராஜதந்திரம் மிக்க இந்த முறியடிப்பு முயற்சிகளை கூறினால் அது இலங்கை அரசிற்கு சாதகமாக முடிந்துவிடும். ஆகவே நான் அவற்றைக் கூறவில்லை. நீங்கள் அடுத்த கேள்விகளைக் கேளுங்கள்.

கேள்வி – யாழ்ப்பாணத்திற்கான இரணைமடு நீா் விநியோகம் இலங்கை அரசின் சதி நடவடிக்கை என்று நீங்கள் தெரிவித்திருக்கின்றீா்கள். ஆனால் அது விடுதலைப்புலிகளின் காலத்திலேயே விடுதலைப்புலிகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு திட்டம் என உங்களுக்குப் புரியாதா?

பதில் – (ஐங்கரநேசனின் மீசை துடிக்கின்றது) ஒவ் தறெக்கோட். ( இதன் அா்த்தம் என்னவெனின் இதை நீங்கள் பிரசுரிக்க வேண்டாம் என்பது பொருள்.) அவங்களைப் (புலிகள்)பற்றி இஞ்ச சொல்ல வேண்டாம் .

என்னைப் போல எத்தனை அறிவாளிகள் இருந்தவா்கள். ஆனால் அவங்கள் ஒருதருடைய சொல்லையும் கேளாது இப்ப அழிந்தொழிந்து போய்விட்டாங்கள்.

அவங்களுக்கு என்ன தெரியும் இவற்றைப் பற்றி. எனக்கு சொந்தமான யுனிவேசல் ரியுசனில பின்வாங்கில இருந்து கணக்குக்கு பத்து மார்க் வாங்கிய ஒரு முட்டாள் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தில முக்கிய பொறுப்பாளராக இருந்ததும் எனக்குத் தெரியும்.

ஓ.எல் பெயில் விட்டு அப்பா அம்மாட்ட அடி வாங்க வேண்டும் என்று இயக்கத்தில சோ்ந்தவங்கள் எல்லாம் எங்களுக்கு மேற்பார்வை செய்து தான் இப்ப அழிந்து போய் இருக்கிறாங்கள். அங்களைப் பற்றி இஞ்ச சொல்லவேண்டாம்.

கிளிநொச்சியில இருக்கிற ஒரு பகுத்தறிவு மிக்க எம்.பியும் படிச்சவருமான என்ர சகோதரம் சிறீதரனுக்கு தெரிந்தது ஒன்றும் அவங்களுக்குத் தெரியாது. அவருக்குத் தெரியும் இரணை மடுப் பிரச்சனை. ஆகவே இதைப் பற்றி இனிக் கதைக்க வேண்டாம்.

கேள்வி – இரணைமடுக் குளத்தை ஒரு இரண்டு அடி உயா்த்தி நீா் வழங்குவதில் உங்களுக்கு அப்படி என்ன அரச சூழ்ச்சி இருக்கு?

பதில் – வடபகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு எங்கள் மக்கள் சாவார்களே தவிர இரணை மடு நீா்த் திட்டத்திற்கு ஒரு போதும் ஆதரவு தரமாட்டார்கள். நீங்கள் இதைப்பற்றி தொடா்ந்து கேட்டுக் கொண்டு இருப்பதால் நீங்களும் ஒரு அரசாங்கத்தின் ஆள் என நினைக்கின்றேன். தயது செய்து இனி உங்கள் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது. சென்றுவிடுங்கள்.

இனியும் கேள்வி கேட்டால் ஐங்கரநேசன் நெருப்பாகிவிடுவார் எனத் தெரிந்து இன்னொரு அரசியல்வாதியிடம் இதைப் பற்றிக் கேட்கலாம் என அவ்விடத்தை விட்டு அகன்றோம்.

வடபுலத்தான்

தொடரும்

அனைத்தும் (கல் + பனை)

Share.
Leave A Reply