carதூத்துக்குடி: தூத்துக்குடியில் பூட்டிய காருக்குள் நான்கு குழந்தைகள் மூச்சுத்திணறி இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் ஆடிமாதத்தையொட்டி கோயில்களில் விழாக்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி குறுக்குச்சாலை அருகே வேடநத்தம் கிராமத்தில் உள்ள இசக்கியம்மன் கோயிலி்லும் ஆடி விழாவுக்கு அப்பகுதி மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த விழாவுக்கு தூத்துக்குடி ராஜபாண்டிநகர் மற்றும் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த முத்தழகு (10), இசக்கியம்மாள் (8), மோசஸ் (7), ஆதி (4) ஆகிய குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் இங்கு வந்துள்ளனர்.

இன்று காலை 9 மணி அளவில் அந்த பகுதியில் 4 பேரும் விளையாடியுள்ளனர். அப்போது, அங்கு பைனான்ஸ் நிறுவனத்தால் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹோண்டா காரில் குழந்தைகள் ஏறி விளையாடியுள்ளனர். திடீரென கார் கதவு மூடியதால் குழந்தைகள் மூச்சுத்திணறி அலறியுள்ளனர்.

ஆனால், கார் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஓட்டியிருந்ததால் வெளியே யாருக்கும் குழந்தைகள் அலறுவது தெரியவில்லை. மேலும், கோயில் விழாவில் ரேடியோ ஒலித்துக் கொண்டு இருந்ததாலும் குழந்தைகளின் அலறல் சத்தம் யாருக்கும் கேட்காமல் போய்விட்டது.

 car-2

இதனிடையே, குழந்தைகள் காணவில்லை என்று பெற்றோர்கள் தேடி வந்தனர். இந்நிலையில், நண்பகல் 1.30 மணி அளவில் ஒரு சிறுமி அந்த கார் பக்கத்தில் வந்துள்ளார். அப்போது, காரை உற்றுநோக்கிய சிறுமி, உள்ளே குழந்தைகள் இருப்பதை பார்த்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் வந்து காரின் கண்ணாடியை உடைத்து குழந்தையை மீட்டனர்.

அப்போது, குழந்தைகள் இறந்த நிலையில் மூக்கில் இருந்து ரத்தம் கசிந்திருந்தது.

தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 4 ஆண்டுகளாக அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி குழந்தைகள் விளையாடியுள்ளனர். அப்போது கதவு பூட்டிக்கொண்டதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாகவே குழந்தைகள் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தகவல் அறிந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரை நேரில் சென்று விசாரணை நடத்தினார். குழந்தைகளின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூட்டிய காருக்குள் 4 குழந்தைகள் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Share.
Leave A Reply