மறப்பதும், மன்னிப்பதும் மனித இயல்பு. மனம் திருந்தி மன்னிப்பு கேட்பதாக அது அமைய வேண்டும். மனம் திருந்தாமல் மன்னிப்பு கோருவதை மனக்காயங்களுக்கு உள்ளாகியவர்கள் ஏற்பதில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
வடபகுதிக்கு அரசு முறைப் பயணம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி நடந்தவைகளை மறப்போம்; மன்னிப்போம்; இணைந்து வாழ்வோம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார். உண்மையான மனிதாபிமானத்தின் அடிப்படையில் விடுக்கப்பட்ட அழைப்பாக இதனைக் கருத முடியவில்லை.
ஏனெனில் மறந்து, மன்னிக்க வேண்டிய விடயங்களில் அல்லது சம்பவங்களில் என்ன நடந்தது, யார் யாரெல்லாம் பங்கேற்றிருந்தார்கள் என்பது தெரியாது. அவற்றுக்கு யார் பொறுப்பு என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. உண்மை கண்டறியப்பட்டு, நிலைநிறுத்தப்படவுமில்லை.
என்ன நடந்தது என்ற உண்மையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிந்திருப்பதனால்தான், நடந்தவைகளை மறப்போம்; மன்னிப்போம் என்று கூறினாரோ என்று சந்தேகிக்க வேண்டியிருக்கின்றது. மனித உரிமைகளும் மனிதாபிமான சர்வதேச சட்டங்களும் மீறப்பட்ட மண்ணில் நின்று பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி அழைப்பு விடுத்திருப்பதனால் இந்த சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது.
பாதிப்புக்கு உள்ளாகியவர்கள் நடந்த உண்மைகளை அறிய வேண்டிய அவசியமில்லை. நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். அந்த மர்மங்களை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அவற்றைப் அப்படியே புறந்தள்ளிவிட்டு, அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வோம் என்பதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாடு.
பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி அவர் விடுத்துள்ள இந்த அழைப்பை சாதாரணமான அரசியல் பிரசாரமாகக் கொள்ள முடியாது. ஏனென்றால், நாட்டின் பிரதமர் என்ற ரீதியிலும் நாட்டின் இரு பெரும் அரசியல் கட்சிகளில் ஒன்றாகிய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் என்ற ரீதியிலும் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கு பொறுப்பு கூற வேண்டும் என்ற ஐ.நா.வினதும், சர்வதேச நாடுகளினதும் வற்புறுத்தல் கோரிக்கைக்கு செவிசாய்த்து, அவருடைய அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியிருக்கின்றது.
அந்தப் பிரேரணையின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்குரிய பொறிமுறைகளை நிறுவிச் செயற்படப் போவதாக அரசாங்கம் ஐ.நா. மன்றத்திடமும் சர்வதேச நாடுகளிடத்திலும் உறுதி வழங்கி, அதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
குறிப்பாக உண்மையைக் கண்டறியும் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்காக ஓ.எம். பி. என்று அழைக்கப்படுகின்ற காணாமல் போனோருக்கான அலுவலகத்தை அரசு ஏற்கனவே நிறுவி, செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. முதலில் இரண்டு வருடங்கள் கால அவகாசத்தைப் பெற்றிருந்த அரசாங்கம் மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை கோரி பெற்றிருந்தது.
அந்த கால அவகாசமும் முடிந்துவிட்டது. ஆனால், நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்கு இன்னும் எத்தனையோ நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இந்த நிலைமையில் மேலும் இரண்டு வருட கால அவகாசத்தைப் பெறுவதற்கான முயற்சிகள் அரச தரப்பில் மேற்கொள்ளப்பட்டு, அதற்கு சாதகமான நிலைமை உருவாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இத்தகைய ஒரு பின்னணியில்தான், மறப்போம்; மன்னிப்போம்; வாருங்கள் என்று பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
வைரலாகியுள்ள அழைப்பு
மறப்போம்;மன்னிப்போம்; வாருங்கள், என்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பு குறித்து கருத்து தெரிவிக்காதவர்களே இல்லை என்று கூறுமளவுக்கு நாடளாவிய ரீதியில் அது முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. எதிர்த்தும், ஆதரித்தும், கண்டித்தும் கருத்துக்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
மறப்போம்;மன்னிப்போம் என்றதன் மூலம் நாட்டில் நடக்கக் கூடாதவைகள் நடந்தேறியிருக்கின்றன என்பதை பிரதமர் ஏற்றுக்கொண்டிருக்கின்றார். அதற்கான ஒரு வாக்குமூலமாகவே அந்த இரண்டு சொற்களையும் அவர் பயன்படுத்தியிருக்கின்றார் என்று பேரினவாதத் தரப்பினர் மத்தியில் முக்கியமாகக் கருதப்படுகின்றது. இதனால், அவருக்கு எதிராகக் கண்டனக்குரல் எழுந்திருப்பதையும் காண முடிகின்றது.
ரணில் விக்கிரமசிங்க பொய்யுரைத்து, இராணுவத்தினர் மீது குற்றம் சாட்டியிருப்பதாக குறிப்பாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் பெரும் பங்காற்றியவருமாகிய கோத்தபாய ராஜபக்.ஷ,
அவர் மீது சீறிப் பாய்ந்துள்ளார்.
இராணுவத்தினர் குற்றச் செயல்களில் ஒருபோதும் ஈடுபடவில்லை. அவர்கள் விடுதலைப்புலிகளிடம் இருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றியிருக்கின்றார்கள். இதற்காக அவர்கள் தமது உயிரைப் பணயம் வைத்திருந்தார்கள் என குறிப்பிட்டுள்ள கோத்தபாய, இராணுவத்தினர் போர்க்குற்றம் புரிந்தார்கள் என்ற அபாண்டமாகப் பொய்யுரைத்துள்ள ரணில் விக்கிரமசிங்கவை சிங்கள மக்கள் மன்னிக்கமாட்டார்கள். தேர்தலில் உரிய முறையில் அவரை அவர்கள் தண்டிப்பார்கள் என்று சாபமிடும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தினால் முப்படைகளையும் சேர்ந்த சில அதிகாரிகளும், சிப்பாய்களும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இரண்டு பேருக்கு மரண தண்டனையும் வேறு ஐந்து பேருக்குத் தண்டனை வழங்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரட்நாயக்க, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முன்னின்று உழைத்த முன்னாள் கடற்படைத் தளபதியைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்துள்ளார்.
முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக இன்னும் ஒரு படி மேலே சென்று அரச படைகளை எதிர்த்துத் தாக்குதல்கள் நடத்திய விடுதலைப்புலிகள் மன்னிக்கப்பட்டுவிட்டார்கள் என்றும், நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டி எழுப்புவதில் சிங்கள மக்கள் தங்களுடைய கடப்பாடுகளை சரியான முறையில் நிறைவேற்றியுள்ளனர் என்றும், தமிழர் தரப்பினரே பங்களிப்பு செய்ய வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான செயற்பாட்டில் பந்து தமிழ் மக்கள் பக்கமே உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைத் தோற்கடிப்பதற்கு, தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை வழங்க வேண்டும் என்றும், பிரபாகரனின் பிடியில் பணயக்கைதிகளாக இருந்த தமிழ் மக்களை விடுவிப்பதற்கு அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற இரண்டு சிந்தனைகள் இருந்ததாகவும், தங்களால் முன்வைக்கப்பட்ட இரண்டாவது யோசனை ஏற்கப்பட்டு, பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, யுத்தத்தில் இரு தரப்பினருமே பாதிக்கப்பட்டிருப்பதனால் முன்னேறிச் செல்வதற்கு மறந்து, மன்னித்துச் செயற்பட தமிழ் மக்கள் முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது பங்கிற்கு இந்த விடயம் குறித்து கருத்து வெளியிடத் தவறவில்லை. இராணுவத்தினர் குற்றம் புரிந்திருந்தாலும்கூட, அவர்களைத் தண்டிப்பதற்கு இடமளிக்கமாட்டேன் என்று அவர் அழுத்தி உரைத்துள்ளார். நாட்டைப் பாதுகாத்த தியாகிகளாகிய படையினரை, தான் அதிகாரத்தில் இருக்கும் வரையில் பாதுகாப்பேன் என்று அவர் உறுதிபடக் கூறியிருக்கின்றார்.
இத்தகைய கருத்துக்கள் இலங்கையில் போர்க்குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை. அத்தகைய குற்றங்கள் இடம்பெற்றிருந்தாலும், அவைகள் தமிழர் தரப்பினாலேயே புரியப்பட்டன என்று நிலைநிறுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இறுதி யுத்தத்தின்போதும் சரி, அதற்கு முந்திய காலத்திலும் சரி, தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தை அடித்து நொறுக்குவதில் தீவிரமாக இருந்த அரசாங்கங்களினாலும், அரச படைகளினாலும், இனப்படுகொலைக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன, போர்க்குற்றச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்பதற்கான சம்பவங்கள் பல அரங்கேற்றப்பட்டிருக்கின்றன. இதனை வெறும் வாய்ப்பேச்சுக்களினாலும், பாதிக்கப்பட்ட மக்களுடன் நல்லுறவை வளர்த்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான போக்குகளினாலும் ஒளித்து மறைப்பதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்படுகின்றன.
சந்தர்ப்பங்கள் கோட்டை விடப்பட்டுள்ளன
நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்து செயற்பட்ட தமிழ் மக்களின் நம்பிக்கையைத் தக்கவைத்து, அதனை வளர்த்துக் கொள்வதில், நல்லாட்சி அரசாங்கம் தனது நான்கு வருட ஆட்சிக் காலத்தில் கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் கோட்டை விட்டுள்ளது. இதனால் தமிழ் மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்களாகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவர் மீதும் நம்பிக்கை இழந்துள்ளார்கள். அரசாங்கத்தினால் தங்களுக்குத் தீர்வு எதுவும் கிடைக்கமாட்டாது என்ற காரணத்தினால், அவர்கள் சர்வதேசத்தை நம்பியிருக்கின்ற நிலைமை உருவாகியிருக்கின்றது.
நல்லாட்சியை உருவாக்குவதற்கு உறுதுணையாக நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி ஒத்துழைத்துச் செயற்பட்டு வந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்திருப்பதை வெளிப்படையாகக் கூறத் தொடங்கிவிட்டார்கள். யுத்த மோதல்களில் ஈடுபட்ட இரு தரப்பினருமே குற்றம் புரிந்திருக்கின்றார்கள் எனவே மறப்போம்; மன்னிப்போம் என்ற ரணில் விக்கிரமசிங்கவின் கூற்றிற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் சீற்றத்தோடு பதிலளித்துள்ளார்.
மறக்கவும் முடியாது; மன்னிக்கவும் முடியாது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு பற்றி கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
பிரதமருடைய கருத்தை நிராகரித்துள்ள அவர் இராணுவத்தினரும் விடுதலைப்புலிகளும் போர்க்குற்றம் புரிந்தனர் என்று ஒற்றைச் சொல்லின் மூலம் தப்பிவிட முடியாது என்றும் மறப்போம்; மன்னிப்போம் என்ற பேச்சுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்றும் கூறியுள்ளார். ஐ.நா. தீர்மானங்களின்படி உண்மைகள் கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தமது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பினராலும் இறுதி யுத்தத்தின்போது மனித உரிமைகள் மீறப்பட்டன. எனவே, மறப்போம்; மன்னிப்போம் என்று கூறியுள்ளதன் மூலம், இராணுவத்தினரால் யுத்தக் குற்றம் புரியப்பட்டிருக்கின்றது என்ற குற்றச்சாட்டுக்களை பிரதமர் ஏற்றுக்கொண்டிருக்கின்றார் என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது.
ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் கடந்த நான்கு வருடங்களாக பிரதமராக இருந்து வருகின்ற ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும், இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வைக்காண்பதிலும் காட்டி வந்துள்ள அக்கறையும் கரிசனையும் அவர் எத்தகைய அரசியல் போக்கை கொண்டிருக்கின்றார் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றன.
நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்பதற்கும் உகந்த அரசியல் சூழலை தேர்தல்களின் ஊடாகத் தமிழ் மக்களே உருவாக்கியிருந்தார்கள். அரசியல் ரீதியாக அந்த நன்றிக்கடனைச் செலுத்த வேண்டிய பொறுப்பு அவரைச் சார்ந்திருந்தது. இன்னும் சார்ந்திருக்கின்றது. ஆனால், அந்தப் பொறுப்பை நிறைவேற்றாவிட்டாலும்கூட, ஜனநாயக வழிமுறையைக் கடைப்பிடிக்கின்ற ஓர் அரசியல் தலைவர் என்ற ரீதியிலும்கூட அவர் தனது பொறுப்புக்களை உணர்ந்து செயற்பட்டதாக, அவருடைய நடவடிக்கைகள் அமையவில்லை. தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளைச் சிதறடிப்பதற்கே அவருடைய நடவடிக்கைகள் துணை புரிந்திருக்கின்றன.
தேர்தலே இலக்கு
தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீது இழந்துள்ள நம்பிக்கையைக் கட்டி எழுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் பிரதமரினால் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, வரப்போகின்ற தேர்தலை இலக்கு வைத்து அபிவிருத்திச் செயற்பாடுகளைத் துணையாகக் கொண்டு தமிழ் மக்களின் ஆதரவைக் கட்டி எழுப்புவதற்காகவே மறப்போம்; மன்னிப்போம் என்ற அவருடைய கருத்து வெளிப்பட்டிருக்கின்றது.
வடமாகாணத்திற்கு மூன்று நாள் விஜயமாக வருகை தந்திருந்த அவர் கவர்ச்சிகரமான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த தீர்மானங்களையும் உத்தேச நடவடிக்கைகளுக்கான கருத்துக்களையுமே அவர் வெளியிட்டிருந்தார்.
வடமாகாண மக்கள் எதிர்கொண்டுள்ள எரியும் பிரச்சினைகள் குறித்து, மறதியாகக் கூட அவரால் எதனையும் கூற முடியவில்லை.
படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேறுவதற்காக வீதியோரத்தில் அமர்ந்து ஒரு வருடத்திற்கும் மேலாகப் போராடிக் கொண்டிருக்கின்ற கேப்பாப்புலவு மக்களுடைய பிரச்சினைகள் குறித்து அவருடைய கவனம் திரும்பவில்லை.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் அந்தந்த மாவட்டங்களில் வீதியோரப் புழுதியில் குளித்த வண்ணம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகின்ற போராட்டங்கள் பற்றி அறிந்திருப்பதாகக் கூட அவர் காட்டிக்கொள்ளவில்லை.
இந்து ஆலயங்கள் அமைந்துள்ள இடங்களில் அடாத்தாக உட்புகுந்து புத்தர் சிலைகளை நிறுவுகின்ற பௌத்த மதரீதியான ஆக்கிரமிப்பினால் வடபகுதியில் கொதிப்படைந்துள்ள நிலைமைகள் குறித்து அவர் கவலைகூட தெரிவிக்கவில்லை.
வனபரிபாலன திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், கரையோர அபிவிருத்திக்குப் பொறுப்பான திணைக்களம் போன்ற அரச பொறிமுறைகள் காலம் காலமாக மக்கள் குடியிருந்து வந்த காணிகளுக்கு அத்துமீறி உரிமை கொண்டாடுவதும், அவற்றில் அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை இம்சைக்குள்ளாக்குவதும் அவருக்குத் தெரியாத விடயங்களாகவே இருக்கின்றன.
மறப்போம் மன்னிப்போம். . . . . . . . . .
பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். காணி உரிமை, தொழில் உரிமை, வாழ்வாதார உரிமை, வாழ்வியல் இருப்புக்கான உரிமை தொடர்பிலான பலவேறு நிலைமைகளில் அடிப்படை உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ள ஒரு சூழலில், பொருளாதார அபிவிருத்தி பற்றி பேசுவதும், பொருளாதார அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்கள் குறித்து வசீகரமான அறிவித்தல்களை வெளியிடுவதும் எந்த வகையில் மக்களுடைய மனங்களை வென்றெடுக்க உதவும் என்பது தெரியவில்லை.
இத்தகைய நடவடிக்கைகள் மொத்தத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பின்னரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள மக்களை ஏமாற்றுகின்ற நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது.
போர்க் குற்றங்கள் புரியப்பட்டிருக்கின்றன என்பதை உண்மையிலேயே உணர்ந்து, அவற்றுக்குப் பிராயச்சித்தம் காணும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தானே வலிந்து அவற்றை ஏற்றுக்கொண்டு, மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு மன்னிப்பு கோரும் வகையில் மறப்போம் மன்னிப்போம் என்ற கருத்தை வெளியிட்டிருப்பதாக ஒரு பேச்சுக்காக வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.
ஏனெனில் இத்தகைய சம்பவம் முன்னரும் இடம்பெற்றிருக்கின்றது. குறிப்பாக 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான நாடளாவிய வன்முறைகள் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கை என சுட்டிக்காட்டி, அதற்காக பல வருடங்களுக்குப் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்க பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்தார்.
அந்த வன்முறைகள் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் நிர்வாகத்தின் கீழ் இடம்பெற்றிருந்தது. அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் பிரதமராகிய ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு கோரியிருக்கின்றார் என்றுகூட கொள்ளலாம்.
அத்தகைய எண்ணப்பாட்டிற்கு அமைவாக நல்லாட்சி அரசாங்கத்தில் உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூறுவதை இழுத்தடித்து, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் மேலும் அவர்களுடைய பிரச்சினைகளை அதிகரித்து அவர்களை இம்சைகளுக்கு உள்ளாக்கியுள்ள இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு வருங்காலத்தில் யார் மன்னிப்பு கோரப் போகின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது.
அது மட்டுமல்லாமல், காலம் காலமாக அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்படுகின்ற தமிழ் மக்கள் மீது நடத்தப்படுகின்ற அடக்குமுறைகளுக்கும் உரிமை மீறல்களுக்கும் அவ்வப்போது மறப்போம்; மன்னிப்போம் என்று மன்னிப்பு கோரிச் செயற்படுவது எந்த வகையில் நியாயமானது என்பது தெரியவில்லை.
இது நாங்கள்தான் பெரும்பான்மையானவர்கள், அதிகாரம் உடையவர்கள், நாங்கள் அவ்வப்போது அப்படித்தான் நடந்து கொள்வோம். நீங்கள் எல்லாவற்றையும் மறந்து மன்னித்து எங்களுடன் நல்லிணக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அடாவடித்தனமான அன்புரிமையோடு கூறுகின்ற கூற்றாகவே மறப்போம்; மன்னிப்போம் என்பதைக் கருத வேண்டியுள்ளது.
வடமாகாண மக்கள் எதிர்கொண்டுள்ள எரியும் பிரச்சினைகள் குறித்து, மறதியாகக் கூட அவரால் எதனையும் கூற முடியவில்லை.
படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேறுவதற்காக வீதியோரத்தில் அமர்ந்து ஒரு வருடத்திற்கும் மேலாகப் போராடிக் கொண்டிருக்கின்ற கேப்பாப்புலவு மக்களுடைய பிரச்சினைகள் குறித்தும் அவருடைய கவனம் திரும்பவில்லை.
வலிந்து காணாமல் ஆக்கப்பட ்டுள்ளவர்களின் உறவினர்கள் அந்தந்த மாவட்டங்களில் வீதியோரப் புழுதியில் குளித்த வண்ணம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகின்ற போராட்டங்கள் பற்றி அறிந்திருப்பதாகக் கூட அவர் காட்டிக்கொள்ளவில்லை.
இந்து ஆலயங்கள் அமைந்துள்ள இடங்களில் பலவந்தமாக உட்புகுந்து புத்தர் சிலைகளை நிறுவுகின்ற பௌத்த மதரீதியான ஆக்கிரமிப்பினால் வடபகுதியில் கொதிப்படைந்துள்ள நிலைமைகள் குறித்து அவர் கவலைகூட தெரிவிக்கவில்லை.
வனபரிபாலன திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், கரையோர அபிவிருத்திக்குப் பொறுப்பான திணைக்களம் போன்ற அரச பொறிமுறைகள் காலம் காலமாக மக்கள் குடியிருந்து வந்த காணிகளுக்கு அத்துமீறி உரிமை கொண்டாடுவதும், அவற்றில் அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை இம்சைக்குள்ளாக்குவதும் அவருக்குத் தெரியாத விடயங்களாகவே இருக்கின்றன.
மறப்போம் மன்னிப்போம். . . . . . . . . .
பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். காணி உரிமை, தொழில் உரிமை, வாழ்வாதார உரிமை, வாழ்வியல் இருப்புக்கான உரிமை தொடர்பிலான பலவேறு நிலைமைகளில் அடிப்படை உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ள ஒரு சூழலில், பொருளாதார அபிவிருத்தி பற்றி பேசுவதும், பொருளாதார அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்கள் குறித்து வசீகரமான அறிவித்தல்களை வெளியிடுவதும் எந்த வகையில் மக்களுடைய மனங்களை வென்றெடுக்க உதவும் என்பது தெரியவில்லை.
இத்தகைய நடவடிக்கைகள் மொத்தத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பின்னரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள மக்களை ஏமாற்றுகின்ற நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது.
போர்க் குற்றங்கள் புரியப்பட்டிருக்கின்றன என்பதை உண்மையிலேயே உணர்ந்து, அவற்றுக்குப் பிராயச்சித்தம் காணும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தானே வலிந்து அவற்றை ஏற்றுக்கொண்டு, மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு மன்னிப்பு கோரும் வகையில் மறப்போம்; மன்னிப்போம் என்ற கருத்தை வெளியிட்டிருப்பதாக ஒரு பேச்சுக்காக வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.