கண்ணகியின் காற்சிலம்பை கையிலேந்த வல்லவர்கள் யார்?
யுத்தத்தினால் இருதரப்புக்களிலும் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. புலிகள் மீதும், படையினர் மீதும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இவை தொடர்பில் நீதிமன்றங்களை நாடினால் பிரச்சினை முடிவின்றித் தொடரும். எனவே நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். அனைத்தையும் மறப்போம் மன்னிப்போம், போர்க்குற்றச்சாட்டுக்களையும் கைவிடுவோம்.
தென்னாபிரிக்காவில் Truth and Reconciliation Commission (TRC) நியமிக்கப்பட்டு போர்க்குற்றங்கள் மன்னிக்கப்பட்டது போல இலங்கையிலும் அவ்வாறு உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான கமிஷனை நியமித்து போர்க்குற்றங்களை கண்டறிந்து கவலை தெரிவித்து மறப்போம் மன்னிப்போம் என்றவாறு நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான நகர்வை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்று ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சியில் 15ஆம் தேதி பேசினார்.
ஏற்கனவே 12ஆம் தேதி மேற்படி Truth and Reconciliation Commission (TRC) ஒன்றை உருவாக்கி வழக்குகள், விசாரணைகள், தண்டனைகள் எதுவும் அல்லாமல் போர்க்குற்றங்களைக் கண்டறிந்து மறப்போம் மன்னிப்போம் என்ற வகையில் செயற்படுவதற்கான வரைவு ஒன்றை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உண்மைக்கும் அறிவிற்கும் முரணான வகையில் தென்னாபிரிக்க உதாரணத்தை பிழையாகத் திரித்து அதுவும் தமிழ்த் தலைவர்கள் முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க பேசியிருப்பது வியப்பை அளிக்கிறது.
இவ்வாறு பொருத்தமற்ற தென்னாபிரிக்க உதாரணத்தை திரித்துக்கூறி, தமிழ் மக்களை ஏமாற்றும் பேச்சை பேசிய ரணில் விக்ரமசிங்கவிற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு.உருத்திரகுமாரன் மறுப்பு அறிக்கையின் மூலம் காட்டமாகப் பதில் அளித்துள்ளார்.
தென்னாபிரிக்க உதாரணத்தை இலங்கை போர்க்குற்ற விவகாரத்துடன் ஒப்பிடுவது முற்றிலும் தவறானது எனத் தெளிவுறச் சுட்டிக் காட்டியுள்ளார்.
தென்னாபிரிக்காவில் நிகழ்ந்த நல்லிணக்க முறைமையை திரித்து உதாரணங்காட்டிய ரணிலின் பேச்சு இலங்கை விடயத்திற்கு சிறிதும் பொருந்தாது. இரண்டும் ஒன்றல்ல. அதனை அறிவார்ந்த வகையில் விபரமாக நோக்க வேண்டியது அவசியம்.
தென்னாபிரிக்காவைப் பிரித்தானியர்கள் காலனிய ஆதிக்கத்திற்கு உட்படுத்தி அங்கு தமது வெள்ளையினக் குடியேற்றங்களை நிறுவினர். இதன் மூலம் அங்கு 9 வீதத்தினருக்கு குறைவான வெள்ளை இனத்தவர்களும் மற்றும் 91 வீதத்திற்கு மேல் கறுப்பின மற்றும் கலப்புநிற இன மக்களும் வாழ்ந்தனர்.
இந்த 9 வீதத்தினரான வெள்ளை இனத்தவரின் கையிற்தான் தென்னாபிரிக்காவின் ஆட்சி பீடம் இருந்தது. வெள்ளையர்கள் இனத்துவேஷ ஆட்சியைப் பிரகடனப்படுத்தி அங்கு கறுப்பின மக்களை அடிமைகளாக நடாத்தியதுடன் மிருகங்கள் போல கொன்றுகுவித்தும் வந்தனர்.
காலனிய ஆதிக்கம் ஆரம்பித்த காலத்திலேயே வெள்ளை இனவெறி துவேஷக் கொள்கையும், நடைமுறையும் இருந்து வந்தது. ஆனால் 1948 ஆம் ஆண்டு வெள்ளையினத் தேசியக் கட்சி பதவிக்கு வந்ததும் அது இனத்துவேஷத்தைக் கடுமையான கட்டுப்பாடுகளுடனும் அதிகம் முறைமைக்கு உட்படுத்தப்பட்ட வகையிலும் கடுமையான சட்டங்களின் மூலம் Apartheid என்ற இனத்துவேஷ ஆட்சிமுறையை பிரகடனப்படுத்தியது.
இதற்கு எதிராக மக்கள் வீரத்துடன் போராடலாயினர். நெல்சன் மண்டேலா தலைமையிலான ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் 1995ஆம் ஆண்டு வெள்ளையின ஆட்சியைத் தோற்கடித்து விடுதலை பெற்ற தென்னாபிரிக்க அரசை உருவாக்கியது.
கறப்பின மக்களின் கையிலான சுதந்திர தென்னாபிரிக்க அரசின் ஜனாதிபதியான நெல்சன் மண்டேலா நடந்த இனவெறிப் படுகொலைக்கும், அநீதிக்கும் எதிராக கறுப்பினத் தலைவரான டெஸ்மன்ட் டூட்டூ ((Desmond Tutu) தலைமையில் உண்மையைக் கண்டறிதல், மற்றும் நல்லிணக்கத்திற்கான விசாரணைக் குழுவை (Truth and Reconciliation Commission – TRC-Africa ) நியமித்தார்.
கறுப்பர்கள் தமது கையில் அரசியல் ஆதிக்கத்தைப் பெற்றுக் கொண்ட நிலையில், அநீதிகளை ஒழித்துக்கட்டிய நிலையில், இனத்துவேஷத்தை ஒழித்துக்கட்டிய நிலையில் தமக்கு அநீதி இழைத்த வெள்ளையர்களை மன்னிக்க அவர்கள் தயாரானார்கள்.
இங்கு அநீதி ஒழிக்கப்பட்டது என்பதும், நீதி நிலைநாட்டப்பட்டது என்பதும், கறுப்பர்கள் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டனர் என்பதும் நடந்தேறிய பின்புதான் அதுவும் வெற்றி பெற்ற கறுப்பர்கள் தம்மால் தோற்கடிக்கப்பட்ட வெள்ளையர்களை மன்னித்தார்கள்.
ஆனால் பிரதமர் ரணில் கூறும் தென்னாபிரிக்க உதாரணம் ஈழத் தமிழர்கள் விடயத்தில் தலைகீழானது. இனப்படுகொலை செய்து ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் சிங்கள ஆட்சியாளர்களை, இனப்படுகொலைக்கு உள்ளாகி அழிக்கப்பட்ட தமிழ் மக்கள் மன்னிப்பது என்பது அநீதியை நிலைநாட்டும் செயலேயாகும்.
இனப்படுகொலைக்கு உள்ளான 1,50,000 மக்களின் துயரத்திற்கு அப்பால் அவர்களுக்கான அரசியல் உரிமைகள் எதுவும் அரசியல் அமைப்பில் உருவாக்கப்படவில்லை. எதற்காகப் போராடினார்களோ அந்தக் காரணம் அப்படியே உண்டு என்பது மட்டுமல்ல, மேலும் அதற்கான காரணங்களும், தேவைகளும் விரிவடைந்தும் உள்ளன.
எந்த இராணுவம் அவர்களை இனப்படுகொலைக்கு உள்ளாக்கியதோ அந்த இராணுவத்தின் ஆதிக்கத்தின் கீழ்தான் அவர்கள் தொடர்ந்தும் விடப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் தென்னாபிரிக்காவில் வெள்ளையின இராணுவம் அகற்றப்பட்டு கறுப்பின மக்களின் இராணுவம் உருவாக்கப்பட்டது.
அது அந்தக் கறுப்பின மக்களின் பாதுகாப்புப் படையாக மாறிய பின்புதான் மன்னிப்பு அளிப்பது பற்றி கறுப்பின மக்கள் சிந்திக்கத் தயாரானார்கள்.
ஆதலால் தென்னாபிரிக்க உதாரணத்தை திரித்து அதேமாதிரி ஒரு நல்லிணக்க கொள்கையின் கீழ் மறப்போம் மன்னிப்போம் என்றவாறு செயற்படுவோம் என்று கூறுவது இனப்படுகொலையை சட்டரீதியாக ஏற்புடையதாக ஆக்குவதற்கான ஒரு மோசமான செயலாகும்.
அதாவது ரணில் என்ன கூறுகிறார் என்றால் தென்னாபிரிக்க உதாரணத்தை உண்மைக்குப் புறம்பாக தலைகீழாக முன்னிறுத்தி அதன் மூலம் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய இனப்படுகொலையை சட்ட அங்கீகாரமுள்ளதாக ஆக்கிக்கொள்ள விரும்புகிறார்.
இதை இன்னொருவகையில் சொல்வதென்றால் ராஜபக்ஷ அரசாங்கம் இராணுவ ரீதியாகப் புரிந்த இனப்படுகொலையை ரணில் அரசாங்கம் அரசியல் ரீதியாகச் சட்டபூர்வமானதாக்கி, இலங்கை அரசை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நெருக்கடியில் இருந்து தந்திரமாக காப்பாற்ற முனைகிறார்.
உலகில் 21ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த முதலாவது மிகப்பெரிய இனப்படுகொலை முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய இனப்படுகொலைதான்.
வெறுமனே 1,50,000 மக்கள் என்று மட்டும் பார்க்காமல் அங்கு வாழ்ந்த 4,50,000க்கும் மேற்பட்ட மக்களில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களின் தொகை 1/3 மூன்றில் ஒரு பங்கு என்று தெரிந்து கொண்டால் இதன் கொடூரம் மேலும் துலாம்பரமாகக் காட்சியளிக்கும்.
1945ஆம் ஆண்டு ஜப்பானின் இரு பெரும் நகரங்களான ஹிரோஷிமா, நாஹசாஹி மீது வீசப்பட்ட இரு அணுகுண்டுத் தாக்குதல்களுக்கும் உள்ளாகி இறந்த மக்களின் மொத்தத் தொகை 1,40,000. ஆனால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது கொல்லப்பட்ட மக்கள் தொகை 1,50,000க்கும் மேல் என அஞ்சப்படுகிறது.
செர்பியர்கள் புரிந்த இனப்படுகொலைக்குப் பொறுப்பாக ஜனாதிபதி மிலோசவிக் கைது செய்யப்பட்டு சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார்.
அவர் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்த வேளையில் மரணமடைந்தார் என்பது வேறு கதை.
இங்கு அந்த இனப்படுகொலைக்குப் பொறுப்பான ஜனாதிபதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னுதாரணத்தை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை விடயத்திலும் பின்பற்ற வேண்டும்.
எனவே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குக் கட்டளையிட்ட ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தலைமைத் தளபதி, மற்றும் தளபதிகள், களநிலை அதிகாரிகள் என இனப்படுகொலையோடு சம்பந்தப்பட்ட மேல்மட்டத்தவர்கள் முற்றிலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இங்கு எதுவும் உதிரிச் சம்பவங்களாகப் பார்க்கப்படாமல் கொள்கை முடிவிற்குள்ளால் பார்க்கப்பட்டு அத்தகைய கொள்கை முடிவை எடுத்த தலைவர்களும், அதனை நிறைவேற்றித் தளபதிகளும், அதிகாரிகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
இனப்படுகொலைக்குப் பரிகாரம் பிரிந்து செல்லல்தான் என்பதை கிழக்கு ஐரோப்பிய உதாரணங்கள் தெளிவாக நிரூபித்துள்ளன. யூகோஸ்லாவியாவில் செர்பிய இன ஆட்சியாளர்களின் இனப்படுகொலை அரசில் இருந்து 6 இனங்கள் பிரிந்து சென்று சுதந்திர அரசுகளை அமைத்துள்ளன. அப்படியே சூடானிய ஆட்சியாளர்களின் இனப்படுகொலையில் இருந்து தென் சூடான் பிரிந்து சென்று சுதந்திர அரசை அமைத்துக் கொண்டது.
இத்தகைய அபாயகரமான ஒரு பின்னணியிற்தான் இலங்கையை இரண்டாக உடைந்துவிடாது பாதுகாக்கவும், இனப்படுகொலை புரிந்த ஆட்சியாளர்களையும், இராணுவத்தினரையும் அதிகாரிகளையும் பாதுகாப்பதற்கு ஏற்ற பாதையில் ரணில் விக்ரமசிங்க கடந்த 5 ஆண்டுகள் பயணித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அணைத்து அவர்களினது ஆதரவை சர்வதேச சமூகத்தின் முன்னும், ஐநா மனிதஉரிமைகள் ஆணையத்தின் முன்னும் உயர்த்திக் காட்டியவாறு இனப்படுகொலை குற்றத்திலிருந்து மேற்படி தலைவர்களையும், இராணுவத் தளபதிகளையும் காப்பாற்றுவதில் ரணில் முதற்கட்ட வெற்றியை ஈட்டிவிட்டார்.
மேலும் போர்க்குற்ற விசாரணை என்பதை இராணுவ சிப்பாய் மட்டத்திலான விசாரணையாக சுருக்குவதில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
அத்துடன் அதனையும் இல்லாமல் செய்வதற்கான அடுத்த சூழ்ச்சியாக மறப்போம் மன்னிப்போம் என்ற தந்திரத்தை முன்வைத்துள்ளார்.
ஐநா மனிதஉரிமைகள் ஆணையத்தில் வழங்கப்பட்ட 2 ஆண்டுகால நீட்டிப்பு முடிவுறும் இத்தருணத்தில் மேலும் மேற்கண்டவாறான ஒரு புதிய நாடகத்தின் மூலம் தமது அடுத்தகட்ட நகர்வை சிங்கள ஆட்சியாளர்கள் முன்னெடுக்கின்றனர். இத்தகைய ஏமாற்று அரசியலுக்கு தமிழ்த் தலைவர்கள் யாரும் இனியும் இடம் கொடுக்கக் கூடாது.
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனால் தனது கணவன் கோவலன் அநீதியான முறையில் கொல்லப்பட்டுவிட்டான் என்பதை அறிந்த அவனது மனைவி கண்ணகி எரிமலைப் பிழம்பானாள்.
கோவலன் விற்பனைக்குக் கொண்டு சென்ற ஒற்றைக் காற்சிலம்பிற்கு அப்பால் தன்னிடமிருந்த மற்றைய காற்சிலம்பைக் கையில் ஏந்தியவாறு பாண்டிய மன்னனிடம் நீதி கோரி வழக்குரைத்தாள்.
இறுதியில் தன் கணவன் கள்வன் அல்ல என்பதையும், மன்னன் தன் கணவனை கொலை செய்தது குற்றம் என்பதையும் நிரூபித்து மன்னனை வீழ்த்தினாள், நீதியை நிலைநாட்டினாள்.
வரலாற்றில் நிகழ்ந்திருக்கக்கூடிய ஓர் உண்மைக் கதையைப் பின்னணியாகக் கொண்டு சிலப்பதிகாரம் என்ற காப்பியம் எழுதப்பட்டுள்ளது என்ற கருத்துக்கள் வலுவடைந்து வருகின்றன.
கண்ணகியும், கோவலனும் இறுதியாக மதுரையில் வைகை ஆற்றங்கரையில் தங்கியிருந்த வீடு அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரையும் அந்த வீட்டில் அமர்த்திய கவுந்தியடிகளின் ஆசிரமம் இப்போதும் ஓலைக்குடிசையாகப் பேணப்பட்டு வருகிறது.
கண்ணகி மதுரையில் இறுதியாக இருந்த அந்தக் கிராமம் கடை சிலம்பு ஏந்றதல் என்ற பெயரால் அழைக்கப்படலாயிற்று.
20 ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தப் பெயர் அப்படியே பதிவேடுகளில் இருந்துள்ளது. தற்போது கிராம வழக்கில் அந்தப் பெயர் மருவி கடைச்சனேந்தல் என்ற அழைக்கப்படுகிறது.
காப்பியத்தில் மிகைப்படுதல் இருந்தாலும் அநீதிக்கு எதிராகப் போராடி நீதியை நிலைநாட்டிய கண்ணகியின் பண்பாட்டுப் பாரம்பரியம் தமிழ் மக்களுக்கு உண்டு. 1980களில் இராணுவ பொலீஸ் கெடுபிடிகளுக்கு எதிராக ஈழத் தமிழ் மண்ணில் அன்னையர் முன்னணி உதயமாகி வெற்றிகரமாகச் செயற்பட்டமையையும் இங்கு பதிவு செய்வது நல்லது. கூடவே அன்னை பூபதியும் போர்க்குணத்திற்கு ஒரு முன்னுதாரணமான தாயாய் வரலாற்றில் காணப்படுகிறார்.
ஆனையை அடக்கிய ஆரியாத்தாள் என்று வன்னி மண்ணில் ஒரு கர்ணபரம்பரைக் கதையும் உண்டு.
தற்போது அந்த வன்னி மண்ணில் நின்றுதான் ரணில் தன் தும்பிக்கையால் தென்னாபிரிக்க உதாரணத்தை பிழையாகத் தூக்கிப் பிடித்து அநீதியை நிலைநாட்ட முற்பட்டிருக்கிறார்.
இத்தருணத்தில் கண்ணகியின் காற்சிலம்பை கையில் ஏந்தவல்ல தலைவர்கள் யார் என்ற கேள்வியை வரலாறு அனைத்துத் தமிழ்த் தலைவர்கள் முன்னாலும் நிறுத்தியுள்ளது.
-மு.திருநாவுக்கரசு