பாக்தாத்துக்கு அடுத்தபடியாக ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்கும் மொசூல் நகரை கைப்பற்றிய ஐ.எஸ். எனப்படும் ஜிஹாதி போராளிகள் அப்பகுதியினை இஸ்லாமிய ஆட்சி முறைக்குட்பட்ட தனிநாடாக அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஈராக்கின் பல்வேறு பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, குர்திஷ் படைகளுடன் ஆவேச தாக்குதலில் ஈடுபட்டு வந்த ஜிஹாதி படையினர், சிரியா-ஈராக் எல்லைப் பகுதியில் மோசூலை ஒட்டியுள்ள சிஞ்சார் நகரையும் கைப்பற்றி தங்கள் வசமாக்கிக் கொண்டுள்ளனர்.
சிஞ்சார் நகரில் ஸொராஸ்ட்டிரிய கோட்பாடுகளை பின்பற்றி வாழும் யாஸிதி இனத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான பெண்களை கடத்திச் சென்ற ஐ.எஸ்.படையினர், இளம்வயதுடைய அழகிய பெண்களை தனியாக பிரித்து, அவர்களை மத மாற்றம் செய்து, திருமணம் செய்துக் கொள்ளும் ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக ஈராக்கில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலவச நிலம், வீடு, வசதியான வாழ்க்கை என்ற வாக்குறுதிகளின் மூலம், வயது முதிர்ந்த பெண்களையும் மூளைச்சலவை செய்து மதமாற்றம் செய்யவும் அவர்கள் முயன்று வருவதாகவும் ஒரு செய்தி குறிப்பிட்டுள்ளது.
போர் களத்துக்கு மத்தியில் முஸ்லிகள் கலப்பு திருமணம்
17-08-2014
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளின் எல்லையோரம் உள்ள காஸாவில் வாழும் ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேல் நாட்டினருக்குமிடையில் தீராப்பகை நிலவி வருகிறது. இது தவிர, இஸ்லாமிய நெறிமுறைகளை பின்பற்றி வாழும் பாலஸ்தீனிய முஸ்லிம்களையும் இஸ்ரேலியர்கள் தங்களது ஜென்ம எதிரிகளாக கருதி வருகின்றனர்.
சமீபத்தில், இஸ்ரேலிய மாணவர்கள் 3 பேரை கடத்திக் கொன்றது தொடர்பாக காஸா பகுதி மீது சுமார் 40 நாட்கள் இஸ்ரேலின் முப்படைகளும் நடத்திய தாக்குதலில் சுமார் 2 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தரப்பில் நூற்றுக்கும் குறைவான உயிரிழப்பு ஏற்பட்டது.
எகிப்து அதிபரின் தலையீட்டின் பேரில் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டு, இரு தரப்பினருக்கும் இடையில் கெய்ரோவில் தற்போது இரண்டாவது சுற்று சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை சேர்ந்த மரல் மல்க்கா(23) என்ற யூதப் பெண்ணுக்கும், மஹ்மவ்ட் மன்சவுர்(26) என்ற முஸ்லிம் இளைஞருக்கும் நேற்று ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
யூத மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறிய மரல் மல்க்கா முஸ்லிம் ஒருவரை திருமணம் செய்து கொள்ளும் செய்தி காட்டுத்தீ போல டெல் அவிவ் நகருக்குள் பரவியது. இதையறிந்து, மண்டபத்தின் அருகே திரண்டு வந்த சுமார் 200 யூத ஆண்களும், பெண்களும் உள்ளே நுழைந்து இந்த திருமணத்தை தடுக்க முயன்றனர்.
இந்த செய்தி அறிந்து விரைந்து வந்த போலீசாரும், ராணுவத்தினரும் அவர்களை தடுத்து நிறுத்தி அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுத்து நிறுத்தினர்.
இஸ்ரேல் நாட்டின் சுகாதார (பெண்) மந்திரி உள்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற இந்த திருமணம் திட்டமிட்டபடி நடந்து முடிந்ததும், வெளியே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மணமக்களை சபித்து கோஷமிட்டனர்.
இஸ்ரேல் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதத்தினர் அரபு நாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.