தனது மனைவியின் தலையை துண்டித்த கணவன், அதனை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ள சம்பவம் ஒன்று இந்திய மேற்கு வங்க மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்திய மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அபிஜித் தாஸ் (30) என்பவர் நேற்று முன்தினம் கையில் பையுடன் பொலிஸ் நிலையத்துக்கு சென்று அங்கிருந்த பொலிஸாரிடம், பொலிஸ் ஆய்வாளரை பார்க்க வேண்டும் எனக்கூறியுள்ளார். அபிஜித் தாஸை மனநலம் பாதிக்கப்பட்டவராக நினைத்த அந்த பொலிஸார், என்ன காரணம் என கேட்டுள்ளார்.
அப்பொழுது அபிஜித் தாஸ், தான் கொண்டு வந்திருந்த கைப்பையிலிருந்து மனைவியின் தலையை வெளியில் எடுத்துள்ளார். நான் என்னுடைய மனைவியை கொலை செய்துவிட்டேன் என்றும் மனைவியின் தலையை பொலிஸ் ஆய்வாளரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பொலிஸார்,
வேகமாக பொலிஸ் ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், அபிஜித் தாஸின் மனைவியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் அபிஜித் தாஸிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கணவன் – மனைவி இருவரும் மகிழ்ச்சியாக இருந்ததாகவே பலரும் பதிலளித்துள்ளனர்.
அபிஜித் தாஸிடம் விசாரணை மேற்கொள்கையில், வரதட்சணை தான் காரணம் என முதலில் கூறியவர், அதன் பிறகு உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். அயல் வீட்டைச் சேர்ந்த நபருடன் தனது மனைவிக்கு தொடர்பு இருந்ததாகவும், அதனை கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில், கை கால்களை கட்டிப்போட்டு தலையை துண்டித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, மேலதிக விசாரணைக்காக அபிஜித் தாஸை சிறையில் அடைத்துள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.