உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடுக்கத் தவறினார் என கட்டாய லீவில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளார்.
அரச புலனாய்வு முகவரங்களுக்கும் அரச பாதுகாப்புப் படைகளுக்கும் இடையிலான பாரதூரமான தொடர்பாடல் இடைவெளியை 20 பக்கங்கள் கொண்ட முறைப்பாட்டில் பூஜித் ஜயசுந்தர வெளிபடுத்தியுள்ளார்.
இஸ்லாமிய தீவிரவாதிகள் தொடர்பான நடைபெற்ற விசாரணையை நிறுத்துமாறு பிரதான புலனாய்வு அமைப்பான அரச புலனாய்வு சேவை (SIS), ஒரு வருடத்துக்கு முன்னர் தனக்கு உத்தரவிட்டது எனவும் பூஜித் ஜயசுந்தர மேற்படி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார் என ஏ.எவ்.பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்படும் தேசிய தௌஹீத் ஜமாஅத் உட்பட முஸ்லிம் தீவிரவாத குழக்களினள் மீதூன விசாரணைகளை பொலிஸ் திணைக்களத்தின் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID ) நிறுத்த வேண்டும் என அரச புலனாய்வுப் பிரிவு (SIS) தெரிவித்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
258 பேர் கொல்லப்பட்ட இத்தாக்குதல்கள் தாக்குதல்களையடுத்து பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பதவி விலகுவதற்கு மறுத்ததால் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கட்டாய லீவில் அனுப்பப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இத்தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமைக்குப் பொறுப்பேற்று பதவி விலகினால் தனக்கு இராஜதந்திர பதவி வழங்க முன்வந்ததாகவும், ஆனர்ல, புலனாய்வுத் தோல்விக்கு தான் பொறுப்பில்லை என்பதால் பதவி விலக தான் மறுத்ததாகவும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார் என ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.