2 மில்லியன் மக்களைக் கொண்ட போராட்டக் கூட்டம், ஆம்புலன்சுக்காக வழிவிட்டு ஒதுங்கி நின்ற வீடியோ இணையத்தில் காண்போரின் நெஞ்சை நெகிழ வைத்துள்ளது.
ஹாங்காங்கில், ‘வேறு நாட்டுக்குச் சென்று குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு நாடு திரும்புபவர்களை, அந்த நாட்டு கைதியாக நாடு கடத்தலாம்’ என்பதற்கான காண்ட்ராவெர்ஷியல் எக்ஸ்ட்ராடிஷன் என்கிற பெயரிலான சட்டத்திருத்தத்தை, சீனாவின் ஆதரவுடன் ஹாங்காங் தலைவர் கேரி லாம் கொண்டுவர முனைவதற்கு எதிரான போராட்டம் வெடித்துள்ளது.
இந்த சட்டத் திருத்தத்தால், வரி ஏய்ப்பு செய்தால் கூட நாடு கடத்தப்படும் நிலை உண்டாகும் என்பதால், ஏறக்குறைய 2 மில்லியன் மக்கள் வீதியில் இறங்கி போராடி வருவது உலக நாடுகளை ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது.
Hong Kong protesters let an ambulance go through the massive protestpic.twitter.com/IN61ZnJ9fZ
— Amichai Stein (@AmichaiStein1) June 16, 2019
மேலும் கேரி லாம் பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் போராடி வருகின்றனர். போலீஸாரும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் ரப்பர் புல்லட்டுகளைப் பயன்படுத்தி, கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்தி வந்தனர்.
இந்த போராட்டத்திற்காக பேனர்களைக் கட்டிய ஒருவர் மேலிருந்து தவறி கீழே விழுந்ததால், அங்கு பரபரப்பானது.
அப்போது அவரை உடனடியாக ஏற்றிகொண்டு சிகிச்சைக்காக புறப்பட்ட ஆம்புலன்ஸ் கூட்டத்தின் திசையை குத்திக் கிழித்துக்கொண்டு வர, கடல் போன்ற அந்த 2 மில்லியன் மக்கள் கூட்டமும், நகர்ந்து கொடுத்து ஆம்புலன்ஸிற்கு வழி தந்து நெகிழ வைத்த சம்பவம் இணையத்தில் வீடியோவாக வலம் வருகிறது.