கிளிநொச்சி நகரத்தை விட்டு பின்வாங்கிச் செல்வது என பிரபாகரன் முடிவு எடுத்த காரணத்தால், தளபதி தீபன் தலைமையிலான படைப் பிரிவை புதுக்குடியிருப்பு பகுதி நோக்கி வருமாறு உத்தரவிடப்பட்டது குறித்து கடந்த பாகத்தில் எழுதியிருந்தோம். அந்த முடிவு தீபனுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை என்பதையும் கூறியிருந்தோம்.

கிளிநொச்சி நகரத்தை கைவிடுவது என பிரபாகரன் எடுத்த முடிவு பற்றி, விடுதலைப் புலிகளின் இப்போது உயிருடன் உள்ள முன்னாள் தளபதிகள் சிலர், மாறுபட்ட கருத்துக்களையே தெரிவிக்கின்றனர்.

தற்போது தடுப்புக் காவலில் இருந்து வெளிவந்த நிலையில் இலங்கையில் வசிக்கும் சில முன்னாள் தளபதிகளுடனும், தற்போதும் இலங்கையில் தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் தளபதிகள் சிலருடனும் பேசியபோது, அவர்கள், “கிளிநொச்சியை கைவிடுவது என்ற முடிவு எடுக்கப்பட்டபோது, ‘யுத்தம் தோல்வியில் முடியப்போகிறது’ என்பதை எம்மால் ஊகிக்க முடிந்தது.

பின்னாட்களில் முள்ளிவாய்க்காலில் எடுக்கப்பட்ட சரணடையும் முடிவை அந்த நேரத்திலேயே எடுத்திருக்கலாம்.

கிளிநொச்சியை கைவிடுவது என்ற முடிவுடன், சரணடையும் முடிவையும் எடுத்திருந்தால், பல ஆயிரக் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம். அனைவரையும் முள்ளிவாய்க்கால் வரை கொண்டு சென்று, அங்கு பல உயிர்களை பலி கொடுத்ததை தவிர்த்திருக்கலாம்” என்கிறார்கள்.

லாஜிக் உள்ள கூற்றுத்தான் இது.

ஆனால், அப்போது பிரபாகரனுக்கு ‘இறுதி நேரத்தில் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள். அதற்கான ஏற்பாடுகள் ரெடி’ என ஆலோசனை கொடுக்கப்பட்டிருந்தது. அதை அவர் மிகவும் நம்பினார் என்பதை, அந்த தொடரின் பின் பகுதியில் நீங்கள் படிக்கப் போகிறீர்கள்.

அப்போது புரியும், பிரபாகரன் எதற்காக அனைவரையும் முள்ளிவாய்க்கால் வரை கொண்டு சென்றார் என்ற பின்னணி.

இப்போது, புதுக்குடியிருப்பு பகுதியில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

புகுக்குடியிருப்பு பகுதியை நாணுவம் கைப்பற்றாமல் இருக்க விடுதலைப் புலிகள் மண்-அரண்களை (Earth bunds) அமைத்திருந்தார்கள். இந்த மண்-அரண் அமைக்கும் உத்தி, உலகப்போர்-1 காலத்து உத்தி. நகர்ந்து வரும் ராணுவத்தை தாமதப் படுத்துமே தவிர, ஒரேயடியாக நிறுத்தி விட முடியாத ஏற்பாடு.

ஏற்கனவே கைப்பற்றப்பட்ட மற்ற நகரங்களிலும் விடுதலைப் புலிகள் மண்-அரண்களை அமைத்திருந்தார்கள். அவற்றை உடைத்துக் கொண்டே ராணுவம் சென்று அந்த நகரங்களை கைப்பற்றியிருந்தது. இதனால், புதுக்குடியிருப்பு நகரைச் சுற்றி விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த மண்-அரண்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என ராணுவத்திடம் திட்டம் ஒன்று இருந்தது.

டாஸ்க்-ஃபோர்ஸ் (Task Force – TF) என அழைக்கப்பட்ட அதிரடிப் படை பிரிவுகளான 2, 3, 4 ஆகியவையும், 57-வது படைப்பிரிவும் பின்னால் வர, அதிரடிப்படை பிரிவு 8, 53-வது படைப்பிரிவு, மற்றும் 58-வது படைப்பிரிவு ஆகியவை புதுக்குடியிருப்பு பகுதியை தாக்கி, அதைக் கடந்து கிழக்கே செல்வது என்பதே, புதுக்குடியிருப்பில் ராணுவம் போட்டிருந்த திட்டம்.

அதாவது, முதலில் 3 படைப் பிரிவுகள் புதுக்குடியிருப்பு பகுதியை தாக்குவது. அதை கைப்பற்றுவது. ஆனால், புதுக்குடியிருப்பில் தங்கி நிற்காமல், தொடர்ந்து கிழக்கு திசையில் நகர்ந்து செல்வது.

இதற்கான காரணம் என்னவென்றால், புதுக்குடியிருப்பு பகுதியிலேயே பிரபாகரன் உட்பட முக்கிய தளபதிகள் இருந்தனர் என்பதும், வன்னி யுத்தத்துக்கான உத்தரவுகள் அங்கிருந்துதான் பிறப்பிக்கப்பட்டன என்பதும் ராணுவ உளவுத்துறைக்கு தெரிந்திருந்தது.

இதனால், புதுக்குடியிருப்பு பகுதி மற்ற நகரங்கள் போல அல்லதாது, தரையடி மறைவிடங்கள் அதிகம் உள்ள இடமாக இருக்கும் என ஊகித்திருந்தார்கள்.

புதுக்குடியிருப்பை கைப்பற்றும் படைப்பிரிவு, அங்கேயே தரித்து நின்றுவிட்டால், தரையடி மறைவிடங்களில் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் மறைந்திருக்க முடியும். அதன்பின், அங்கு தரித்துள்ள ராணுவ படையணிகளின் மீது பெரியளவில் தற்கொலை தாக்குதல்களை நடத்த முடியும்.

ஒரே புதுக்குடியிருப்பு நகரில், வெளிப்படையாக ராணுவமும், தரையடி மறைவிடங்களில் விடுதலைப் புலிகளும் இருந்தால் யாருக்கு அனுகூலம்? நிச்சயம் புலிகளுக்குதான்.

இதனால், புதுக்குடியிருப்பை மூன்று படைப்பிரிவுகள் (அதிரடிப்படை பிரிவு TF-8, 53-வது படைப்பிரிவு, மற்றும் 58-வது படைப்பிரிவு) தாக்கிவிட்டு, வேகமாக அங்கிருந்து அகன்றன. அவர்கள் கிழக்கு நோக்கி நகரத்தொடங்க, புதுக்குடியிருப்பில் இருந்த பொதுமக்களும் கிழக்கு நோக்கி புலிகளால் நகர்த்தப்பட்டனர்.

ராணுவம் எதிர்பார்த்ததும் அதைத்தான்.

காரணம், அதன்பின் புதுக்குடியிருப்பு மீது மற்றொரு தாக்குதல் திட்டமிடப்பட்டு, அதற்காக 4 படைப் பிரிவுகள் (அதிரடிப் படை பிரிவுகள் TF-2, TF-3, TF-4 ஆகியவையும், 57-வது படைப்பிரிவும்) வந்துகொண்டு இருந்தன. இந்த 2-வது தாக்குதலிலேயே விடுதலைப் புலிகளின் முக்கிய நபர்கள் (தரையடி மறைவிடங்களில் இருந்து யுத்தத்தை நடத்தியவர்கள்) தாக்கப் படுவார்கள்.

அந்த நேரத்தில் பொதுமக்களும் புதுக்குடியிருப்பு நகருக்குள் இருப்பது, ராணுவத்துக்குத்தான் இடைஞ்சல். யார் பொதுமக்கள், யார் விடுதலைப் புலிகள் என வேறுபடுத்துவது கடினம்.

இதற்கும் ஒரு காரணம் இருந்தது.

போரின் இறுதி நாட்களில் விடுதலைப் புலிகள் அனைவரும் சீருடை அணிந்து யுத்தம் புரியவில்லை.

பெரும்பாலானோர் சிவிலியன் உடைகளே அணிந்திருந்தார்கள். ஒவ்வொரு நகரமும் ராணுவத்தால் கைப்பற்றப்பட்டு வந்த நிலையில், அந்தந்த நகரத்தில் இருந்த பொதுமக்களை அடுத்த நகரத்துக்கு நகர்த்தி சென்றபோது, புலிகளும் சிவிலியன் உடைகளில் இருந்ததால், ராணுவம் இலக்கு வைக்க முடியாமல் திணற வேண்டியிருந்தது.

நகரில் இருந்து வெளியேறும் அனைத்து புலிகளையும் அழிக்க வேண்டும் என்றால், அனைத்து பொதுமக்களையும் அழிக்க வேண்டும்.

vanni-battle-20140819-2தாக்குதல் பொசிஷன்களை பார்க்கவும்

ஒருவிதத்தில் சொல்லப்போனால், பிரபாகரன் உட்பட புலிகள் 2009-ம் ஆண்டு மே வரை தாக்குப் பிடித்ததன் காரணமே, பொதுமக்களை கேடயமாக வைத்து நகர்ந்ததுதான். அந்தப் பகுதியில் இருந்த அனைத்து நகர்வுகளையும் ராணுவம் லைவ் சாட்டலைட் இமேஜ்களில் பார்த்துக்கொண்டு இருந்தது.

பொதுமக்கள் வேறாக, புலிகள் வேறாக நகர்ந்திருந்தால், 2009-ம் ஆண்டு ஜனவரியிலேயே யுத்தம் முடிந்திருக்கும்.

விடுதலைப் புலிகளின் இந்த உத்தியை புரிந்துகொண்ட ராணுவம் போட்ட மாற்றுத் திட்டம்தான், புதுக்குடியிருப்பு நகரில் அரங்கேற்றப்பட்டது.

அந்த மாற்றுத் திட்டப்படி, முதலில் வந்த படைப்பிரிவுகள், பொதுமக்களுடன் கலந்த விடுதலைப்புலிகளை கிழக்கு நோக்கி நகர்த்திக்கொண்டு போக, அடுத்து வந்த படைப்பிரிவுகள், பிரபாகரன் உட்பட முக்கியஸ்தர்களை இலக்கு வைத்து நகர்ந்து வந்தது.

இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில்தான், தீபன் தலைமையிலான படையணியை புதுக்குடியிருப்புக்கு வருமாறு பிரபாகரன் உத்தரவிட்டிருந்தார்.

மேலேயுள்ள வரைபடத்தில், முதல் செட் படைகள் புதுக்குடியிருப்பை கடந்து கிழக்கு நோக்கி சென்று சிட்டதையும், அடுத்த செட் படையணிகள் புதுக்குடியிருப்பை நோக்கி வருவதையும் பார்க்கவும்.

இப்போது உங்களுக்கு புதுக்குடியிருப்பில் அப்போது இருந்த சூழ்நிலை புரிந்திருக்கும். அடுத்த அத்தியாயத்தில் தொடங்குகிறது, புதுக்குடியிருப்பு தாக்குதல்

(தொடரும்)
-ரிஷி-

 

ஈழப் போரின் இறுதி நாட்கள்-34: இறுதி யுத்தத்தில் வான் புலிகளுக்கு என்ன நடந்தது?-14

ஈழப் போரின் இறுதி நாட்கள்-33: இறுதி யுத்தத்தில் வான் புலிகளுக்கு என்ன நடந்தது?-13

ஈழப் போரின் இறுதி நாட்கள்-32: இறுதி யுத்தத்தில் வான் புலிகளுக்கு என்ன நடந்தது?-12

Share.
Leave A Reply