இலங்கை அரசியலரங்கு ஜனாதிபதித் தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வடக்கு மாகாண சபைக்கான தேர்தலுக்குப் பின் முழு இலங்கையுமே கவனத்தில் கொண்டிருக்கும் தேர்தல். எதிர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் நிறையவே உள்ளன. அதற்கான முன்னேற்பாடுகளில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது.
மறுபுறத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பலமாக எதிர்கொள்ளக் கூடிய வேட்பாளர் ஒருவரை எதிர்க்கட்சிகள் தேடிக் கொண்டிருக்கின்றன. ஆம், அப்படித்தான் நம்ப வேண்டியிருக்கிறது.
‘நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை’மைக்கு எதிரான கூட்டங்களை அல்லது சந்திப்புக்களை நடத்திக் கொண்டிருக்கும் சோபித தேரர், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தேடுதலில் முக்கியமானவராக கொள்ளப்படுகிறார்.
அவர், பெயரும் பொது வேட்பாளர் பட்டியலில் கவனத்தில் கொள்ளப்பட்டு ஊடகங்களினால் அலசப்பட்டிருக்கின்றன. எதிர்க்கட்சிகளிடையே அந்தத் தெரிவுக்கான ஆதாரவு பற்றி அவ்வளவு ஆர்வமில்லை என்று தெரிகிறது.
ஆனால், கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் பொது வேட்பாளர் என்ற விடயம் கவனத்தில் கொள்ளப்படுவதற்கான முதல் காரணம். நாட்டில் பலமான எதிர்க்கட்சியொன்று இல்லை என்பது.
குறிப்பாக, ஐக்கிய தேசியக் கட்சியால் தன்னை பலமான எதிர்க்கட்சியாக நிறுத்த முடியவில்லை. இதனால் தான் பொது வேட்பாளர் என்ற விடயத்துக்கு இறங்கி வர வேண்டியிருக்கிறது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நாட்டுக்கு அறிமுகப்படுத்தி அதிகாரத்தினை வைத்துக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி இன்றைக்கு அந்த நிறைவேற்று அதிகாரத்தின் முன் துவண்டு போயிருக்கிறது. அது, எந்த அளவுக்கு என்றால், தன்னால் தீர்க்கமான வேட்பாளர் ஒருவரை வெளிப்படையாக அறிவித்து தேர்தலை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு.
ரணில்- சஜித்
ஐக்கிய தேசியக் கட்சியின் (தேசியத்) தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான மனநிலை அல்லது அவரின் ஆளுமையற்ற தலைமைத்துவம் என்பது கட்சியை மோசமாக தோல்வியின் பக்கம் கொண்டு சென்றுவிட்டது என்று அந்தக் கட்சியின் ஆதரவாளர்களில் குறிப்பிட்டளவானவர்கள் நம்புகிறார்கள்.
அண்மைய மாகாண சபைத் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஒப்பீட்டளவில் வாக்குகள் குறைந்திருக்கின்றன. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகள் அதிகரித்திருக்கவில்லை.
ஏனெனில், குறிப்பிட்டளவான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் தேர்தல்களில் இப்போது வாக்களிப்பதில்லை. அது, கருத்தில் கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட வேண்டியிருக்கிறது.
இவ்வாறான நிலையில் தான் கட்சியின் மறு சீரமைப்பு என்கிற பெயரில் கரு ஜெயசூர்யா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமைத்துவ சபையை அமைத்தது.
ஆனால், அந்தச் சபைக்கான அதிகாரம் என்பது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு முன் மாகாண சபையொன்று கொண்டிருக்கும் அதிகாரங்களைப் போன்றது. அதாவது, அதிகாரமற்ற சபைகள். இவ்வாறான நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மீள் எழுச்சி என்பது அவ்வளவுக்கு சாத்தியமில்லை.
இந்த நிலையில், கடந்த வாரம் கொஞ்சம் கவனிக்கத் தக்க செய்தியொன்று தென்னிலங்கை ஊடகங்களில் வெளியானது. அதாவது, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவி மீண்டும் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்படவுள்ளதாகவும், அதனூடு ரணிலும், சஜித்தும் இணைந்து கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வார்கள் என்றும்(?).
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டாலே தோல்வியிலிருந்து மீள முடியும் என்று அந்தக் கட்சியின் குறிப்பிட்டளவான ஆதரவாளர்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகிறார்கள். கட்சியின் அதிகார அமையத்துக்குள் இருப்பவர்களுக்கும் சஜித்துக்கான மக்கள் ஆதரவு பற்றிய நிறைய தெளிவு உண்டு.
சஜித்தின் அரசியல் போக்கு என்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குணங்களை ஒத்தது என்று சொல்லப்படுவதுண்டு.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக வந்து அதிகாரத்தை கைப்பற்றினால், கட்சியின் இரண்டாம் நிலையிலுள்ளவர்களின் நிலைமை மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களின் நிலைமைக்கு சமனாகிவிடும். அதுதான், ரணிலுக்கு ஆதவாக இருக்கும் செயற்குழு அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜித்திடம் தலைமைப்பதவி சென்றுவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள்.
ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் மீள் எழுச்சி என்பது சஜித்தின் தலைமைத்துவத்துடன் ஆரம்பிக்கலாம். அல்லது, தற்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் மீதான மக்கள் வெறுப்பின் உச்சத்தில் நிகழலாம். ஆனால், அதற்கான வாய்ப்புக்கள் இப்போதைக்கு இல்லை.
ஆக, ஐக்கிய தேசியக் கட்சியினால் திராணியான வேட்பாளரை தனித்து நிறுத்துவதற்கு முடியாது. அப்படி நிறுத்தினாலும் அவரின் தோல்வியை ஒப்புக்கொண்டு நிறுத்தப்பட்டதாக கொள்ள வேண்டியிருக்கும். அதுதான், ஐக்கிய தேசியக் கட்சி பொது வேட்பாளர் என்ற விடயத்துக்குள் தவிர்க்க முடியாமல் வரவேண்டியிருக்கிறது.
ஜே.வி.பி
இன்னொரு புறத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தோல்வியின் வேகமும் அதிகமாகவே இருக்கின்றது. புரட்சிப் போராட்டங்களிலிருந்து விடுபட்டு வாக்கு போட்டி அரசியலுக்குள் ஜே.வி.பி நுழைந்தது முதல் குறிப்பிட்டளவாக தேசியவாத கருத்தியலை (அல்லது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை) முன்வைத்து விரைவாக முன்னோக்கி வந்தது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவால் விடுக்கும் அளவுக்கு ஜே.வி.பி.யின் வளர்ச்சி 2000த்தின் ஆரம்பங்கள் வரையில் இருந்தது. அவர்களின் வளர்ச்சிக்கான தடை என்பது மஹிந்த ராஜபக்ஷ முதற்தடவையான ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தருணத்தில் ஆரம்பித்தது.
அதாவது, 2005ஆம் ஆண்டு. அந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றதும் ஜே.வி.பி. மெல்ல கலைபட ஆரம்பித்தது. அதன் வளர்ச்சியின் வேகம் அல்லது தேசியவாத கொள்கைகளை முன்வைத்து நகர்ந்த அரசியல் பயணம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து வெளிப்பட்ட தேசியவாத நிறுவல் அல்லது அதற்கான அர்ப்பணிப்புக்கு முன்னால் ஒன்றுமில்லை என்றானது. அத்தோடு, கட்சியின் முக்கியஸ்தராக வலம் வந்த விமல் வீரவன்ச பிரித்தெடுக்கப்பட்டார்.
இன்று ஜே.வி.பி கடைநிலையில் இருக்கும் கட்சி போன்ற நிலைக்கு சென்றுவிட்டது. இவ்வாறான நிலையில், அந்தக் கட்சி தலைமைத்துவத்தில் மாற்றம் செய்திருக்கிறது.
அநுரகுமார திஸாநாயக்க
நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையேற்றிருக்கிறார். மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் ஓரளவுக்க வரவேற்புள்ளவர். ஆனால், ஜே.வி.பி.யின் மீள் எழுச்சி என்பது பலமான வாக்கு வங்கியொன்றை உருவாக்கும் அளவுக்கு இப்போதைக்கு இல்லை. இப்படியான நிலையில் தான், கடந்த ஜனாதிபதித் தேர்தல் போன்று பொது வேட்பாளர் தளத்துக்கு செல்ல வேண்டி வந்திருக்கிறது.
சந்திரிக்கா குமாரதுங்க
இலங்கை அரசியல் வரலாற்றில் ‘சமாதான தேவதை’ என்ற வர்ணனையோடு ஜனாதிபதியானவர் சந்திரிக்கா குமாரதுங்க. ஆனால், அவரின் இறுதிக்கால அரசியல் என்பது நிறைவேற்று அதிகாரங்களை வைத்திருந்த போதும், கட்சியின் ஆதரவின்றி அனாதையாக விடுவிக்கப்பட்டார்.
இன்றைக்கு, தன்னுடைய ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் விரோத நடவடிக்கைகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அல்லது அது தொடர்பில் பேசுவதைத் தவிர்த்துவிட்டு புதிய அரசியல் களம் மீதான ஆர்வத்தை வெளியிட்டிருக்கிறார்.
மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாகும் பெரு ஆர்வம் என்பது சந்திரிக்கா குமாரதுங்கவிடமும் உண்டு. ஆனால், அவரின் தந்தையால் தோற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட (பல தருணங்களில் குடும்ப சொத்துப் போல காணப்பட்ட) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு என்பது முற்றாகவே இல்லை என்று சொல்லலாம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான மனநிலை என்பது அரசாங்கத்துக்குள் உண்டுதான். ஆனால், அது அவரை எதிர்த்துக்கொண்டு வெளிச் செல்லும் அளவுக்கு இல்லை.
அப்படியான நிலையில், சந்திரிக்கா மீதான அபிமானம் கொண்டவர்களும் வெளிப்படையாக ஆதரிக்கமாட்டார்கள். இப்படியான நிலையில், அவரின் பொது வேட்பாளர் பற்றி ஆர்வம் அல்லது இன்னும் சிலரின் ஆர்வம் என்பது வெற்றுக் கனவு. அவர், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், முன்னாள் பொது வேட்பாளரான சரத் பொன்சேகா எதிர்கொண்ட தோல்வியை ஒத்த தோல்வியை எதிர்கொள்ள நேரிடலாம்.
அது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சிக்கல்கள் இன்றி வெற்றிபெற வைக்கும். அப்படியான நிலையில் சந்திரிக்கா குமாரதுங்கவின் அரசியல் பிரவேசம் என்பது இப்போதைக்கு தேவையற்றது. அல்லது, எதிர்க்கட்சிகளின் அவர் மீதான எதிர்பார்ப்பும் அவசரமும் பொருத்தமற்றது.
த.தே.கூ
வடக்கு, கிழக்கிலுள்ள தமிழர்களின் 80 வீதமளவான ஆதரவினைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஜனாதிபதித் தேர்தல் என்பது மேடை நாடகத்தின் பார்வையாளர் மனநிலைக்கு நெருக்கமானது.
ஏதாவது காட்சி மாற்றங்களின் போது அல்லது உச்சங்களின் போது அவ்வப்போது கொஞ்சம் ஆரவாரம் செய்துவிட்டு அடங்கி விடுவது. ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தளவில் எந்தத்தரப்பு (அரச- எதிர்க்கட்சிகளின்) வேட்பாளர் ஜனாதிபதியானலும் அவர்களுடனான பிணக்கு என்பது தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை முன்வைத்தே இருக்கும்.
ஆக, அந்தப் பிரச்சினை என்பது மஹிந்த ராஜபக்ஷவோ, ரணில் விக்ரமசிங்கவோ, சந்திரிக்கா குமரதுங்காவோ, இன்னும் யாரோ வந்தாலும் தொடரும். அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது சிங்கள பௌத்த- தமிழ் தேசிய மனநிலைகளிலிருந்து குறிப்பிட்டளவில் இறங்கி வந்து பெறப்பட வேண்டியது. அது இப்போதைக்கு சாத்தியமில்லை.
இவ்வாறான நிலையில், எதிர்க்கட்சிகளின் தரப்பில் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான வேட்பாளரை வெளிப்படையாக இல்லாவிடினும், ஆதரிக்கச் செய்யும். ஏனெனில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான தமிழ் மக்களின் மனநிலை என்பது நாளுக்கு நாள் அதிகரித்தே வந்திருக்கிறது.
ஆனால், இதுவே மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்களிடம் பெருமளவு வாக்குகளைப் பெற்றுக் கொடுக்கப் போகின்றது. (அத்தோடு, இலங்கை மீதான ஐக்கிய நாடுகளின் விசாரணைகளும்; ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொண்டிருக்கும் வாய்ப்புக்கள் பற்றி இன்னொரு கட்டுரையில் பேசலாம்) அத்தோடு, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு புலிச்சாயம் பூசும்.
ஏற்கெனவே, விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரை வென்றொடுத்தவர்களில் முக்கியமானவரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு அந்த நிலை உருவானது. அப்படியிருக்க, இன்னொருவரினால் தாக்குப்பிடிக்க முடியாது போகும். ஆக, பொது வேட்பாளருக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு என்பது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொடுக்கலாம். ஆனால், சிங்கள மக்களின் வாக்குகளை குறிப்பிட்டளவில் இல்லாமற் செய்யும்.
சரத்- ஷிராணி- இன்னும் பல
முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் பொது வேட்பாளரான சரத் பொன்சேகா, பதவி நீக்கப்பட்ட பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உள்ளிட்டவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான அடையாளங்கள் என்ற அளவில் கொள்ள முடியும்.
ஆனால், அவர்களிடத்தில் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்கும் அளவுக்கு மக்கள் அபிமானம் என்பது இல்லை. போர் வெற்றியின் நாயகனாக மஹிந்த ராஜபக்ஷவுக்கு சமமாக கருதப்பட்ட சரத் பொன்சேகாவினால் கடந்த தேர்தலில் நிலைத்து நிற்க முடியவில்லை. அவ்வாறான நிலையில், சிறகுகள் பிடுங்கப்பட்ட பறவை போலிருக்கும் இன்றை சரத் பொன்சேகாவால் அவ்வளவுக்கு பெரிதாக ஒன்றும் செய்துவிட முடியாது.
இந்த நிலையில் அரசாங்கத்துக்கு எதிரான மனநிலையின் வடிவங்களாக முன்வைக்கப்படும் ஷிராணி பண்டாரநாயக்க மற்றும் சரத் என் சில்வா ஆகியோரினால் மக்கள் அலையொன்றை தோற்றுவிக்க முடியாது.
அத்தோடு, அவர்கள் இருவரும் மக்களின் பொதுத் தளத்துக்கு அவ்வளவு வந்தவர்கள் இல்லை. பிரதம நீதியரசர் பதவி பறிப்பு மற்றும் ஓய்வுக்குப் பின் கட்சிகளின் உயர்மட்ட நிலைகளில் தொடர்புகளைப் பேணுபவர்கள். இவ்வாறான நிலையில், அவர்கள் மீதான எதிர்பார்ப்பு என்பது அவசியமற்றது.
இறுதியாக,
இவ்வாறான நிலையில் தான், பொது வேட்பாளர் பற்றிய பேச்சுக்கள் எதிர்க்கட்சிகளினால் முன்னெடுக்கப்படுகின்றன. சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் எப்போதோ தயாராகியிருக்க வேண்டும்.
அதற்கு மக்களோடு நிறையவே இறங்கி, இணங்கி பணியாற்றியிருக்க வேண்டும். மக்கள் அலையொன்றை தோற்றுவிப்பதென்பது தேர்தல்களின் போது நிகழ்த்தப்படுவது அல்ல. அதற்கு நிறையவே அர்ப்பணிப்பு அவசியம்.
அந்த அர்ப்பணிப்பு இப்போதைய பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிடம் இல்லை. மற்றக் கட்சிகளினாலும் அதனை உருவாக்க முடியவில்லை.
இப்படியான நிலையில், பொது வேட்பாளர் மீது நம்பிக்கை கொள்ளுமாறு மக்களைக் கோருவது சூன்யத்தின் மீது நம்பிக்கை கொள்ள வைப்பது மாதிரியானது. இலங்கை அரசியலரங்கில் பொது வேட்பாளர் என்பது வெற்றிக்கான சூத்திரம் அல்ல. அது, தோல்வியின் அடையாளம்!
-புருஜோத்தமன் தங்கமயில்-