இனி உலகத்தில் போர் ஏற்பட்டால், தாக்குதலில் ஈடுபட பல்லாயிரக்கணக்கான படை வீரர்களும், ஆயிரக்கணக்கான விமானங்களும், ஹெலிகாப்டர்களும் தேவைப்படாது என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது தொழில்நுட்ப வளர்ச்சி.

இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந்த நாட்டிலேயே அதிக அதிகாரம் பெற்ற ராணுவத் தளபதியாக விளங்கியவருமான ஜெனரல் காசெம் சுலேமானீயை மனிதர்களே இல்லாமல் வெறும் ட்ரோனை மட்டுமே பயன்படுத்தி கொன்றுள்ளது அமெரிக்கா.

தாங்கள் எந்த ட்ரோனை பயன்படுத்தி சுலேமானீயை கொன்றோம் என்பதை அமெரிக்க அரசு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றாலும், அந்நாட்டு விமானப்படையில் இருக்கும் ட்ரோன்களிலேயே அதிதிறன் வாய்ந்த எம்.கியூ – 9 ரீப்பர் அவரை கொல்வதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், அதிதிறன் வாய்ந்த எம்.கியூ – 9 ரீப்பர் ட்ரோன் எப்படி செயல்படுகிறது? எவ்வளவு தூரத்துக்கு, எத்தனை மணிநேரம் அதனால் தொடர்ந்து பறக்க முடியும்? இது ஏவுகணை தாக்குதல்களை எப்படி மேற்கொள்கிறது? இதன் விலை என்ன? உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அலசுகிறது இந்த கட்டுரை.

ட்ரோன்களால் என்னென்ன செய்ய முடியும்?

_110445993_ebd3747f-655d-4e4e-b691-7112f0af7216

விமானியே இல்லாமல் தனக்கு கொடுக்கப்படும் கட்டளைகளை முதலாக கொண்டு செயல்படும் ஆளில்லா வான்வழி வாகனங்களே ட்ரோன்கள் என்றழைக்கப்படுகிறது.

வானத்தில் இருந்து புகைப்படங்கள் எடுக்கவும், காணொளிகளை பதிவு செய்யவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் ட்ரோன்களின் பயன்பாடு துறைக்கு துறை வேறுபடுகிறது.

அதாவது, மருத்துவ துறையில் இரத்தம், உடலுறுப்பு ஆகியவற்றை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக எடுத்துசெல்லவும், வணிகரீதியாக பார்க்கும்போது பொருட்களை கொண்டுசேர்க்கவும், பாதுகாப்பு துறையில் நாட்டின் எல்லை உள்ளிட்ட பகுதிகளில் மனிதர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

எம்.கியூ – 9 ரீப்பர் ட்ரோன்கள் எவ்வளவு அபாயகரமானது?

உலகிலேயே அதிதிறன் மிக்க ட்ரோன்களை கொண்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது.

பல நாடுகள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ட்ரோன்களின் பயன்பாட்டை பெருக்கி வரும் சூழ்நிலையில், அமெரிக்கா தனது எதிரிகளை கண்டறிந்து தாக்கி அழிப்பதற்கு ட்ரோன்களை பரவலாக பயன்படுத்தி வருகிறது.

அந்த வகையில், அமெரிக்க பாதுகாப்புப்படையிலேயே மிகவும் அபாயகரமான ட்ரோனாக எம்.கியூ – 9 ரீப்பர் கருதப்படுகிறது.

தானாக மேலெழும்பி, புறப்பட்ட இடத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பறந்து சென்று, இலக்கை தொடர்ந்து பல மணிநேரங்கள் கண்காணித்து, தக்க நேரத்தில் பேரழிவை ஏற்படுத்தவல்ல ஏவுகணைகளை செலுத்தி, பணியை முடிக்கும் இந்த ட்ரோன் கள்ளத்தனமாக செயல்படுவதில் பெயர்பெற்றது.

அமெரிக்க விமானப்படைக்கு தேவையான உபகரணங்களை தயாரிக்கும் ஜெனரல் அட்டாமிக்ஸ் ஏரோநாட்டிகள் சிஸ்டம் என்னும் கலிஃபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம்தான் இதை தயாரிக்கிறது.

மணிக்கு 482 கி.மீ. வேகம்; 1701 கிலோ ஏவுகணை

_110445995_gettyimages-76025548

எம்.கியூ – 9 ரீப்பர் ரக ட்ரோனை “ஒரு ஆயுதமாக, கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தே நீண்டதூரத்தில் இருக்கும் முக்கியமான இலக்குகளை கண்டறிந்து தாக்கி அழிப்பதற்கும், உளவு தகவல் சேகரிப்புக்கும்” பயன்படுத்துவதாக அமெரிக்க விமானப்படையின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2,223 கிலோ எடை கொண்ட இந்த ட்ரோனின் நீளம் 36 அடி, உயரம் 12.5 அடி. இறகுகளின் நீளம் மட்டும் 66 அடி. மேலும், 1,701 கிலோ எடை கொண்ட ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகளை தாங்கி செல்லக்கூடிய இந்த ட்ரோனால் அதிகபட்சமாக 50,000 அடி உயரத்தில், 1,850 கிலோ மீட்டர் தூரத்துக்கு, மணிக்கு 482 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும். இந்த வகை ட்ரோனில் ஒரே சமயத்தில் 2,278 லிட்டர் எரிபொருளை நிரப்ப முடியும்.

அதிகபட்சமாக 50,000 அடி உயரத்தில் பறக்க கூடிய இந்த வகை ட்ரோன்கள், தனது இலக்கை கண்டறிந்தவுடன், குறைந்த பட்சமாக 800 அடி உயரம் வரை கீழிறங்கி தாக்குதல்களை மேற்கொள்ளவல்லது.

இவ்வளவு குறைந்த உயரத்தில் சென்றாலும், கிட்டதட்ட எவ்வித சத்தத்தையும் இந்த ட்ரோன்கள் ஏற்படுத்தாததால் ஒருவர் மேல்நோக்கி பார்க்கும் வரை இவற்றை அடையாளம் காணவியலாது.

அமெரிக்காவிலிருந்து பிறப்பிக்கப்படும் கட்டளை

எம்.கியூ – 9 ரீப்பர் ரக ட்ரோனின் முகப்பு பகுதியில் செயற்கைகோளுடன் நேரடியாக இணைக்கப்பட்ட வண்ணம், கருப்பு மற்றும் வெள்ளை டிவி கேமராக்கள், ஒளியை நிர்வகிக்கும் கருவி, ரேடார், குறைந்த ஒளி நிலைகளுக்கான அகச்சிவப்பு படங்கள் மற்றும் இலக்குகளை தாக்கி அழிப்பதற்கான லேசர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த வகை ட்ரோன்கள் தன்னிச்சையாக பறந்து, தரையிறங்க கூடியது என்றாலும், இதை தொலைதூரத்தில் இருக்கும் பணியாளர்களே கட்டுப்படுத்தி வருகிறார்கள்.

_110446079_gettyimages-76024783

அதாவது, ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து இலக்கு குறித்த தகவல்களோடு கிளம்பும் எம்.கியூ – 9 ரீப்பர் , தாக்குதல் நடத்த வேண்டிய இடத்தை/ நபரை கண்டறிந்தவுடன் அதுகுறித்த தகவல்களை ஆயிரத்திற்கும் அதிகமாக கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கக் கூடிய கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும்.

பெரும்பாலான நேரங்களில், இந்த வகை ட்ரோன்கள் அனுப்பும் புகைப்படங்கள்/ காணொளிகள் மற்றும் தரவுகள் பெறப்பட்டு அமெரிக்காவின் நெவாடாவிலுள்ள விமானப்படை தளத்தில் இருந்து கட்டுப்படுத்தப்படுகிறது.

மற்ற வகை ட்ரோன்களை போலன்றி, இவை குறிப்பிட்ட இலக்கை தேடி கண்டுபிடிப்பதுடன், கட்டுப்பாட்டு மையத்திலிருந்து உத்தரவு கிடைத்த அடுத்த நொடியே குறைந்தபட்சம் 800 அடி முதல் அதிகபட்சமாக எட்டு கிலோமீட்டர் தூரத்திலிருந்து ஏவுகணைகளை செலுத்தி இலக்கை துல்லியமாக அழிக்கவல்லது.

இந்த வகை ட்ரோனால் ஒரே சமயத்தில் நான்கு ஏவுகணைகளையும், லேசரின் துணையுடன் செயல்படும் வெடிகுண்டுகளை தாங்கி செல்ல முடியும்.

அதாவது, AGM-114 ஹெல்ஃபைர் ஏவுகணைகளை மட்டும் தனியாகவும், GBU-12 பேவ்வே II மற்றும் GBU-38 ஆகிய இரு ஏவுகணைகளை இணைத்து ஒரே சமயத்தில் இயக்க செய்தும் இந்த ட்ரோனால் தாக்குதல் நடத்த முடியும்.

விலை என்ன தெரியுமா?

எம்.கியூ – 9 ரீப்பர் ரக ட்ரோன்கள் இலக்குகளை தேடி கண்டுபிடித்து தாக்கி அழிப்பதுடன், உளவுப்பணிகளில் ஈடுபட்டு, தரைப்பகுதியில் வெடிகுண்டுகள் பதிக்கப்பட்டுள்ளதா என்பதையும் கண்டறிவதோடு, அலைபேசி உரையாடல்களை இடைமறித்து ஒட்டுக்கேட்பது, எல்லையில் கண்காணிப்பில் ஈடுபடுவது, பல்வேறு ஆயுதங்களை கண்டறிவது, பேரிடர்களின் போது உதவிப்பணிகளில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மோசமான வானிலையின்போதும் துல்லியமாக செயல்படும் திறன் பெற்றது என்று அமெரிக்க விமானப்படை கூறுகிறது.

110446081_gettyimages-497592508

2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, 93 எம்.கியூ – 9 ரீப்பர் ரக ட்ரோன்கள் அமெரிக்க விமானப்படையின் வசம் உள்ளது.

நான்கு ட்ரோன்கள் இருக்கும் ஒரு தொகுப்பு எம்.கியூ – 9 ரீப்பரின் விலை 64.2 மில்லியன் டாலர்கள். அதாவது, இந்திய மதிப்பில் பார்த்தோமானால் ஒரு ட்ரோனின் விலை சுமார் 114 கோடி ரூபாய் ஆகும்.

எம்.கியூ – 9 ரீப்பரை வாங்க ஆர்வம் காட்டுகிறதா இந்தியா?

அமெரிக்கா ட்ரோன்களை பயன்படுத்தி எதிரிகளை கொல்வது இது முதல் முறையல்ல.

2007ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருவதாக கூறப்படும் இந்த வகை ட்ரோன்கள், ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்த சமயத்திலேயே பயன்படுத்தப்பட்டாலும், ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் தான் இதன் பயன்பாடு பெருகியது.

இந்த நிலையில், டிரம்பின் உத்தரவுப்படி காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதன் மூலம், மீண்டும் ட்ரோன்களின் செயல்பாடு, பயன்பாடு குறித்த பேச்சு அதிகரித்துள்ளது.

இந்த சம்பவத்துக்கு பின்னர் இந்தியா எம்.கியூ – 9 ரீப்பரை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply