ஒருவனுக்கு ஒருத்தி என்ற விவாக கலாசார பின்னணியை கொண்டே இலங்கையர்களாகிய நாம் வாழ்ந்து வருகின்றோம்.
ஆனால் இன்று ஒருவனுக்கு பல பெண்கள் அல்லது ஒரு பெண்ணுக்கு பல ஆண்கள் என்ற முறையற்ற உறவு முறையினால் சமூகம் பல இன்னல்களை சந்திக்கின்றது.
நேற்றிரவு நானுஓய பகுதியில் இடம்பெற்ற சம்பவமும் இதனை அடிப்படையாக கொண்டதாகும்.
திருமணமாகி சில வருடங்களே கடந்துள்ள நிலையில் கணவன் மனைவி என ஓர் அழகிய குடும்பமாக சமர்செட் தோட்டத்தின் கிழக்கு பிரிவில் ஒரு தம்பதியினர் வசித்து வந்தனர்.
மனைவி தொழிலின்றி வீட்டில் தனது கணவருக்கு சேவை செய்வதையே நோக்கமாக கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.
அவ்வாறிருக்க தனது கணவருடன் மனைவி உரையாடுகின்றாள்.. நாங்கள் இருவரும் தொழிலுக்கு சென்று அதிக வருமானத்தை ஈட்டித்தரகூடிய தொழில் ஒன்றை செய்து எமது வாழ்க்கையை மேலும் மகிழ்ச்சியாக வாழலாம்.
கணவரும் மனைவியின் சொற்களை கேட்டுக்கொண்டதோடு நான் உயிருடன் இருக்கும் வரை எனது மனைவியான உன்னை தொழிலுக்கு அனுப்ப போவதில்லை.
நான் உழைக்கின்றேன்.. என்னால் முடியும் என தெரிவித்துவிட்டு பிரிதொரு தொழிலை தெரிவு செய்கின்றார்.
அவருக்கு கடுகண்ணாவையில் தொழில் கிடைக்கின்றது. தனது மனைவியை தனிமையில் விட்டு கடுகண்ணாவைக்கு தொழிலுக்கு செல்கின்றார்.
சில மாதங்கள் கடந்து போக மனைவியை காண நானுஓய திரும்பினார் கணவர். மனைவியிடம் தாம் சம்பாதித்த பணத்தினை கொடுத்து விட்டு மீண்டும் தொழிலுக்கு சென்றுள்ளார்.
மனைவி தனது கணவரிடம் விவாகமான ஆரம்பத்தில் உரையாடியதை போன்று உரையாடுவதில்லை. கணவர் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பினை ஏற்படுத்தும் போதெல்லாம் பிரிதொருவர் கதைத்துக்கொண்டிருப்பதை அறிந்துக்கொண்டுள்ளார்.
கணவருக்கு மனைவி மீது சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து மீண்டும் அவர் நேற்றைய தினம் தனது மனைவியை காண வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.
மனைவியிடம் எதனையும் கூறாமல் அவரின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு தாம் கடைக்கு சென்று வருவதாக தெரிவித்து விட்டு மனைவி அருகிலுள்ள கடைக்கு சென்றுள்ளார்.
மனைவியை பித்தொடர்ந்த கணவர்…. அவருக்கு தெரியாமலேயே அவரை கண்காணித்துள்ளார்.
இதன்போது அறிமுகமற்ற நபர் ஒருவர் மனைவியிடம் உரையாடுவதையும், இருவரும் தனிமையில் உரையாடிக்கொண்டிருப்பதையும் அவதானித்துள்ளார்.
இந்நிலையில், அறிமுகமற்ற குறித்த நபரிடம் சென்று… யார் நீ.. எனது மனைவியுடன் உரையாடிக்கொண்டிருக்கின்றாய் என வினவியுள்ளார்.
இருவருக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட குறித்த நபரை இடைவிடாது தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான நபர் காயமடைந்த நிலையில் துடிதுடிப்பதை பார்வையிட்ட மனைவி கதறி கூச்சலிட்டபடி அருகிலுள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.
அயலவர்கள் காவல் துறையினருக்கு அறிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை உத்தியோகத்தர்கள் தாக்குதலுக்கு இலக்கான நபர் உயிரிழந்தமையை அறிந்துக்கொண்டுள்ளனர்.
குறித்த நபர் சிலாபம் வென்னப்புவ பகுதியை சேர்ந்த திருமணமான நான்கு பிள்ளைகளின் தந்தை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வென்னப்புவ பகுதியை சேர்ந்த நபருக்கும் நானுஓயா பகுதியை சேர்ந்த குறித்த பெண்ணுக்கும் இடையில் காணப்பட்ட தகாத உறவு முறையே கொலைச்சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்ய காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.