சீனாவில் வேகமாக பரவி வரும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ், இதுவரை 170 உயிர்களை பலி வாங்கி உள்ளதுடன் மேலும் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கி, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இதனால் பல்வேறு நாடுகள், சீனாவில் இருந்து திரும்பும் பயணிகள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், சீனாவுடனான எல்லையை ரஷ்யா மூடியுள்ளது.
நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள சீனாவுடனான எல்லையை மூடுவதற்கான உத்தரவில் ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டின் கையெழுத்திட்டுள்ளார்.
சீன நாட்டவர்களுக்கு வழங்கி வந்த மின்னணு விசாக்களையும் நிறுத்த உள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதேபோல், ரஷ்ய நாட்டவர்கள் சீனா செல்வதை தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம், சீனாவில் இருக்கும் ரஷ்யர்கள், தூதரகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
ரஷ்யாவில் தற்போது வரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரஷ்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.