இந்த நாட்டில் ஜனநாயக ரீதியில் அரச தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர் இந்நாட்டின் அனைத்து மக்களதும் ஜனாதிபதியாகச் செயற்பட வேண்டும்.

தனது பதவிக்காலத்தினுள் முழுமொத்த இலங்கை மக்களுக்காகவே சேவையாற்ற வேண்டும்.  தனக்கு வாக்களித்த மக்களுக்காக மட்டும் சேவையாற்றும் கட்டுப்பாடுடையவராக இருக்கமுடியாது.

ஆகவே ஒரு சமூகத்திற்கு மட்டும் சேவை புரியும் அரசியல் தலைவராக அல்லாது  அனைத்து மக்களினதும் அரச தலைவர் என்ற வகையில் மக்களுக்காகச் சேவையாற்றுவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

2020-02-04T082705Z_1583648233_RC2KTE9CAV4W_RTRMADP_3_SRI-LANKA-INDEPENDENCEDAY

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்தக் காரணிகளைக் கூறினார்.

அவர் உரையில் மேலும் கூறியதாவது, இலங்கை ஒற்றையாட்சி அரசாகும். சுதந்திரமும்  இறைமையும்  தன்னாதிக்கமும் கொண்ட ஜனநாயகக் குடியரசாகும்.

இலங்கை 500 ஆண்டுகளாக ஏகாதிபத்திய காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம்பெற்று இன்றுடன் 72 வருடங்களாகின்றன.

இன்றைய தினம் அரச தலைவர் என்ற வகையில் நாட்டு மக்கள்  பெற்ற சுதந்திரத்தை மேலும் பலப்படுத்துவதற்காக உறுதிபூண்டே உங்களுக்கு உரை நிகழ்த்துகின்றேன்.

இச்சுதந்திரத்தைக் கைப்பற்றிக் கொள்ளுவதற்கும் அதனை உறுதிப்படுத்துவதற்குமாக தம்மை அர்ப்பணித்த சிங்கள, தமிழ், முஸ்லிம், மலே மற்றும் பேகர் இனத் தலைவர்களுக்கு எனது பெருமதிப்பைச் செலுத்துகின்றேன்.

இலங்கை வாழ் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாகவும் பாதுகாப்போடும் வாழும் உரிமையுண்டு. அவர்களது சுதந்திரமாகச் சிந்திக்கும் உரிமையையும்  சுயாதீனமாக அபிப்பிராயம் கொள்ளும் உரிமையைப் போன்று சுதந்திரமாக கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமையையும் நாம் எப்பொழுதும் உறுதி செய்வோம்.

எந்தவொரு பிரஜைக்கும் தான் விரும்பும் மதத்தை வழிபடுவதற்காகவுள்ள உரிமையை நாம் எப்பொழுதும் மதிப்பளிப்போம்.

தத்தமது நண்பர்களைத் தெரிவு செய்வது போன்று அமைதியான ஒன்று கூடலுக்கும் ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமை உள்ளது.

இலங்கைப் பிரஜை ஒருவர் தான் தெரிவுசெய்து கொள்ளும் மக்கள் பிரதிநிதிகள் ஊடாக அரசியல் செயற்பாட்டிலும்  அரச நிருவாகத்திலும் சம்பந்தப்படும் உரிமையை நாம் எப்பொழுதும்  பாதுகாப்போம்.

இவை அனைத்தும் எவராலும் சவாலுக்கு உட்படுத்த முடியாத மனித உரிமைகள் என்றே நாம் கருதுகிறோம்.

ஜனநாயகத்தைச் சீரான முறையில் நடைமுறைப்படுத்தும் போது எம்மால் சரிசமப்படுத்த வேண்டிய பல துறைகள் உள்ளன.

நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறையானது  இதன் போது மிக முக்கியமாகிறது.

அதிகாரப் பரவலாக்கலின் போது மத்திய அரசு மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட பொறுப்புக்களுக்கு இடையே சிறந்த ஒருமைப்பாடு இருக்கவேண்டும்.

பொதுமக்களும் பாதுகாப்புத் துறைகளும் ஒவ்வொருவரின் பொறுப்புகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுடன் பிரஜைகளுக்கு தனிப்பட்ட உரிமைகளைப் போன்று கூட்டுரிமைகளும் உள்ளனவென்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான கூட்டிணைப்பு இதன்போது முக்கியமாகிறது.

சுதந்திரத்தின் பின் இக்குடியரசுக்குள் ஆட்சிக்கு வந்த ஒவ்வோர் அரச தலைவரும் சர்வஜன வாக்கு அதிகாரத்தின் மூலமாகவே தெரிவு செய்யப்பட்டனர்.

அவ்வாறு மக்கள் வாக்கினால் தேர்ந்தெடுக்கப்பட்ட தற்போதைய அரச தலைவர் என்ற வகையில் எனது பதவிக் காலத்திற்குள் நாட்டின் அனைவரினதும் தலைவராக  நாட்டின் நலன்கருதி உயரிய அர்ப்பணிப்போடு சேவையாற்ற நான் தயாராக உள்ளேன்.

ஜனநாயக ரீதியிலான ஒரு நாட்டில் முறையாக  அரச தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர் இந்நாட்டின் அனைத்து மக்களதும் ஜனாதிபதியாவார்.

அவர் தனது பதவிக் காலத்தினுள் முழுமொத்த இலங்கை மக்களுக்காகவே சேவையாற்ற வேண்டும். அவர் தனக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டும் சேவையாற்றும் கட்டுப்பாடுடையவராக இருக்க முடியாது.

ஒரு சமூகத்திற்கு மட்டும் சேவை புரியும் அரசியல் தலைவரல்லாது அனைத்து மக்களினதும் அரச தலைவர் என்ற வகையில் சேவை புரியும் நோக்கு எனக்குள்ளது.

ஜனாதிபதியாக  இன்று நான் பிரதிநிதித்துவப்படுத்துவது இன, மத  கட்சி அல்லது வேறு எவ்வித பேதங்களுமின்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்காகவேயாகும்.

எந்தவொரு ஜனநாயக ரீதியிலான சமூகத்திலும் நன்மைக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பலமான  நிறைவேற்றுத்துறையும்  சட்டவாக்கத்துறையும் அதேபோன்று  சுயாதீன  நீதிமன்றமும் தேவைப்படுகிறது.

ஒரு நாட்டின் இருப்புக்காக இன்றியமையாத இம் முக்கிய நிறுவனங்கள் தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும்  மக்கள் நம்பிக்கை சீர்கெடுமானால் அது  நாட்டின் அராஜகத்திற்கு காரணமாகும்.

ஆகையால் அனைத்துத் தரப்புகளும் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நாட்டின் நலன் கருதியும்  மக்களின் இறைமையைப் பாதுகாப்பதற்கான தேசிய நோக்கையும் கடமையையும் நிறைவேற்ற வேண்டியுள்ளது.

இந்நாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும்  கடப்பாடு எனக்கு உண்டு. அது எனது பொறுப்பும் கடமையுமாகும்.

அதனைச் செயற்படுத்துவதற்கான எந்தவொரு தடையையும் அரசாங்க உத்தியோகத்தர்களிடமிருந்தோ அல்லது சட்டவாக்கத்துறையினரிடமிருந்தோ அல்லது நீதித்துறையிடமிருந்தோ நான் எதிர்பார்ப்பதில்லை.

மக்களின்  சுதந்திரத்தை மதிப்பது மட்டுமல்லாது அதன் வளர்ச்சிக்காகவும் அர்த்தமுள்ள ஜனநாயக நாட்டில் அரசியல்,பொருளாதார ரீதியில் சுதந்திரமாகச் செயலாற்றுவதற்காகவும் உறுதியளிக்கின்றேன்.

நீண்ட காலமாக அரசாங்க நிருவாக விஸ்தரிப்பு முறையினால் மக்களின் சுதந்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது.

தகுந்த ஆய்வு அல்லது ஒருங்கிணைப்பின்றி விதிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளினால் இன்று மக்கள் பெரும் நெருக்கடிகளை  எதிர்நோக்கியுள்ளனர்.

இதனூடாக பல ஊழல்களுக்கும் மோசடிகளுக்கும்  வழிவகுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள்  காலம், வளங்கள் மற்றும் ஜீவனோபாயம் போன்றவற்றை இழக்கும் சந்தர்ப்பம் அதிகமாகும்.

தவறிழைக்கின்ற அற்பமானவர்களுக்கு எதிராக உடனுக்குடன் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதே தவிர பெரும்பாலானவர்களின் மீது தேவையற்ற கடப்பாடுகளை விதிப்பதை நாங்கள் மேற்கொள்ளக் கூடாது.

சட்டத்தை மதித்தும், ஒழுக்கப் பண்பாட்டோடும்,  நன்நெறிகளோடும் வாழ்வதற்கான முறையான  சுதந்திரத்தை நாம் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

மக்கள் சுதந்திரமாக சுயதொழிலினை, பாரம்பரிய கைத்தொழிலை அல்லது தொழிற்றுறையினைப் புரிவதற்குத் தடையாகும் காலங்கடந்த சட்டதிட்டங்கள்இ வரி மற்றும் ஒழுங்கு விதிகள் கட்டணங்கள் துரிதமாகத் திருத்தப்படவேண்டும்.

மக்களின் உயிர் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக அவர்கள் மேல் சுமத்தப்பட்டுள்ள அநாவசியமான தடைகளை நீக்குவதற்குரிய நடவடிக்கைகளை நாம் எடுப்போம்.

இலங்கை பழைமை வாய்ந்த வரலாறுடைய நாடாகும். பௌத்த தத்துவத்தினால் போஷிக்கப்பட்ட சகல  மதத்தவர்களுக்கும்  சகல இனத்தவர்களுக்கும் பாதுகாப்பான நாடாகும்.

எனது ஆட்சிக் காலத்தினுள் எவரும் தான் விரும்பும் மதத்தை வழிபடுவதற்கான சுதந்திரத்தை நான் உறுதிப்படுத்துவேன்.

நீதி, நியாயத்தை உறுதிப்படுத்தும் அத்துடன் எந்தவொரு பிரசைக்கும் அநீதி விளையாத தார்மீகமான அரச நிருவாக முறையை நடாத்துவதற்கே பௌத்த தத்துவத்தின் மூலம் எமது ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை கிடைக்கப்பெற்றுள்ளது.

எனது பதவிக்காலத்தினுள்ளும் இந்நாட்டில் பௌத்த தத்துவத்தைப் பாதுகாத்து போஷிப்பதற்காக நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். சமூக மற்றும் பொருளாதார முரண்பாடுகளை ஒழித்தல் மூலமே மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்க முடிகிறது.

ஒற்றையாட்சியினுள் எல்லாப் பிரஜைகளுக்கும் சம உரிமைகள் கிடைக்கபெற  வேண்டும். இன்றும் எமது மக்கள் சமூகத்தினுள் இருப்பவர், இல்லாதவர் எனும் பெருமளவிலான ஏற்றத்தாழ்வு இருக்கின்றது.

நகர்ப்புற பிரதேசங்களில் உள்ள வசதிகள் கிராமியப் பிரதேசங்களில் இல்லை. எல்லாப் பிரதேசங்களிலும் கல்வி வசதிகள் சமநிலையில் இல்லை. $

எல்லாப் பிரதேசங்களிலும் சுகாதார வசதிகள் சமநிலையில் இல்லை. தொழில் வாய்ப்புகள் எல்லாப் பிரதேசங்களுக்கும் முன்னெடுக்கப்படவில்லை.

SRI-LANKA-INDEPENDENCEDAY.gota_

இவற்றை  இன ரீதியாகவோ, மத ரீதியாகவோ வலுப்படும் நிலைமைகள் அல்ல. அவை நாட்டின் பொதுப் பிரச்சினைகளாகும்.

வாழும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் போது நாங்கள் முதன் முதலாக செய்ய வேண்டியது மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்தலாகும்.

ஆகவே தான் நாங்கள் மக்களின் வறுமையை ஒழித்தலை அரசின் முன்னுரிமையாகக் கருதுகின்றோம்.

முப்பது வருட கால யுத்தத்தைப் போன்று மேலும் பல்வேறு காரணங்களினால் எமது நாட்டின் அபிவிருத்திப் பணிகள் மிகவும் தாமதமாகியுள்ளன. எம்மால் மேலும் காலத்தை வீணாக்க முடியாது.

எமது நாட்டின் முக்கியமாக  புவியியல் அமைவு,பௌதிக வளங்கள் மற்றும் மனித வளங்கள் என்பவற்றை உரியவாறு பயன்படுத்தி உலகப் பொருளாதாரத்தின் புதிய போக்குகளை அணுகி எமது அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துவதற்காக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

வினைத்திறன்மிக்க தூய்மையான ஒரு அரச சேவை நாட்டின் அபிவிருத்திக்கு இன்றியமையாத காரணியாகும்.

மக்களுக்கு சுதந்திரத்தின் அதிகபட்ச பயன்களை வழங்குவதாயின் அரசாங்க நிருவாகம் உரியவாறு நடைமுறைபடுத்தப்படுதல் வேண்டும்.

இதற்காக முழு அரசாங்க நிருவாகமே பொறுப்பைக் கையேற்க வேண்டும். பயங்கரவாதிகள், அடிப்படைவாதிகள்,திருடர்கள், எதிரிகள்,குண்டர்கள், கப்பம் பெறுபவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களை துன்புறுத்து பவர்கள் ஆகியோரினால் இயல்பான மக்கள் வாழ்வுக்கு தடைகள் ஏற்படுமாயின் அவ்விடத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.

தேசிய பாதுகாப்பைப் போன்று மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதன்பாலும் நாங்கள் முக்கிய கவனம் செலுத்தியுள்ளோம்.

பயங்கரவாதத்துக்கு வழிவகுக்கும் அடிப்படைவாத அமைப்புகளை மேலும் இந்நாட்டில் செயற்படுவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம்.

நாடு பூராகவும் பரவியுள்ள போதைப்பொருள்  இடையூறிலிருந்து பிள்ளைகளை மீட்கும் வரை பெற்றோருக்குச் சுதந்திரம் இல்லை.

அரச நிறுவனங்களினுள் ஊழல்கள், மோசடிகள் இருக்கும்வரை பொது மக்களுக்குச் சுதந்திரம் இல்லை. 

ஆகவே  இயல்பான மக்கள் வாழ்வுக்கு அழுத்தம் செலுத்துகின்ற அனைத்து சமூக இடையூறுகளையும் ஒழிப்பதற்காக சட்டத்தை கடுமையாகச் செயற்படுத்துவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

இந்நடவடிக்கைகளை வினைத்திறமையாக்குவதற்குத் தேவையான சீர்திருத்தங்களைத் தற்போது பாதுகாப்புத்துறையினுள் ஆரம்பித்துள்ளோம்.

சிந்திக்கும் சுதந்திரத்தையும், எழுதுவதற்கான சுதந்திரத்தையும் நான் முழுமையாக உறுதிப்படுத்துவேன்.

அப்போதுதான் தத்துவஞானிகளைப் போன்று உயர்மட்ட கலை ஆக்கங்கள் உருவாகும். எனது அரசாங்கம் எப்பொழுதும் எதிர் அபிப்பிராயங்களைப் பொறுமையுடன் செவிமடுக்கத் தயாராக உள்ளது. ஊடகங்களுக்கு இன்று முழுமையான சுதந்திரம் இருக்கின்றது.

எந்த ஒருவரும் சுதந்திரமாக கருத்துகளைத் தெரிவிக்கும் உரிமையை நாங்கள் வழங்கியுள்ளோம். சமூக ஊடகங்கள் ஜனநாயகத்திற்கு  புதிய சவால்களை ஏற்படுத்துகின்றது.

இணையத்தளத்தில் அதிகமான காலத்தைக் கழித்துக்கொண்டு அநேகமான சந்தர்ப்பங்களில் அறிமுகமற்றவர்களுடன் தொடர்பு கொள்வதால் அவர்களது குற்றங்களின்படி பிழையான தகவல் பிரசாரங்களுக்கு உட்பட்டு தமது அபிப்பிராயங்களை விட வேறு அபிப்பிராயம் கொண்டவர்கள் தொடர்பில் உடனுக்குடன் தவறான அபிப்பிராயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.

உங்களது மனச்சாட்சியின்படி செயற்படுமாறு நாங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கின்றோம். எப்பொழுதும் நாட்டைப் பற்றிச் சிந்தியுங்கள். ஏனைய சகோதர நாட்டு மக்களைப் பற்றிச் சிந்தியுங்கள்.

அரசியல் தேவைகளைப் பற்றி மட்டும் சிந்திக்காது  உங்கள் செயல்களினாலும் சொற்களினாலும் நாட்டுக்குத் தீமை ஏற்படுமா அல்லது நன்மை ஏற்படுமா என்பதை நன்கு சிந்தித்துப் பார்க்கவும்.

ஆயினும் அரசு பிழையான வழியில் செல்கிறதென உங்களுடைய மனச்சாட்சிக்குத் தெரியுமாயின்  எப்போதும் தயங்காது அதனைச் சுட்டிக் காட்டவும். நாங்கள் எப்பொழுதும் சட்டத்தின் இறைமையை மதித்து நடக்க வேண்டும்.

நீதி, நியாயமாகச் செயற்படும் போதுதான் மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கின்றது. சட்டரீதியான நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகள் நிகழும் கலாசாரத்தை மாற்றுவதற்கு எனது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எமக்கு பல சவால்கள் உள்ளன. அதில் வெற்றிபெறுவதற்காக அரசாங்கம் எடுக்கும் முயற்சிக்கு உங்கள் அனைவரதும் ஆதரவு தேவைப்படுகின்றது.

நான் தங்களின் முன்னிலையில் வைத்த கொள்கைப் பிரகடனம் இன்று நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளக் கூடிய செயல்நெறியாகும்.

அதன் வாயிலாக சுபீட்சமான ஒரு தேசத்தை உருவாக்குவது எமது எதிர்பார்ப்பாகும். எதிர்கால சந்ததியினருக்காக தற்கால சந்ததியினரால் தான் இந்த எதிர்பார்ப்புகளை  நிறைவேற்ற முடியும்.

வரலாற்றினால் எம்மீது சுமத்தப்பட்டுள்ள இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக எம்முடன் ஒன்று சேருமாறு அனைத்து இலங்கை வாழ் மக்களிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

உங்கள் அனைவரினதும் வளமான எதிர்காலத்திற்காக பிரார்த்தனை செய்கின்றேன் என்றார்.

Share.
Leave A Reply