கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக யாழ். நகர வர்த்தக நிலையங்களை பிற்பகல் 3 மணியுடன் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய நேற்று வியாழக்கிழமை நடந்த யாழ் வணிகர் சங்கத்தின் நிர்வாகசபைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் அவசர நிலையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக வர்த்தகர்களுக்கும், பொதுமக்களுக்கும் சில அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

 

1. அத்தியாவசியத் தேவையான உணவகங்கள், மருந்தகங்கள், பலசரக்கு வியாபார நிலையங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களை கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள அவசர நிலையை கருத்தில் கொண்டு பிற்பகல் 3.00 மணியுடன் பூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2. வர்த்தக நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் அவசர தேவைக்காக மட்டும் ஓரிருவர் வந்து பொருள்களை கொள்வனவு செய்தல் சிறந்தது. குடும்பத்துடனோ கூட்டமாக வருவதைத் தவிர்த்தல் வேண்டும்.

 

3. கொரோனா வைரஸிடமிருந்து தங்களைப் பாதுகாத்து கொள்ள சுகாதார அமைச்சு வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக தண்ணீரில் சவர்க்காரமிட்டு கைகளை அடிக்கடி கழுவுதல், இருமல் அல்லது தும்மல் ஏற்படும் போது உங்கள் வாய் மற்றும் மூக்கை கைகுட்டையால் மூடுதல், உடல்நிலை சரியில்லாத நபர்களுடன் பழகுவதை தவிர்த்தல், மக்கள் கூடுதலாக ஒன்று கூடும் இடங்களை தவிர்த்தல், கைகள் சுத்தமாக இல்லா விட்டால் கண்கள், மூக்கு, வாய், அலது முகத்தை தொடாதிருத்தல், ஒவ்வொரு நபரிடமிருந்தும் முடிந்த வரை ஒரு மீற்றர் தொலைவில் இருந்து உரையாடுதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விற்றமின் சீ, நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் உணவு முறைகளை பின்பற்றுதல், ஏதாவது நோய் அறிகுறி இருப்பின் உடன் வைத்தியசாலையை நாடுதல் போன்ற ஆலோசனைகளை பின்பற்றுமாறு கோரப்பட்டுள்ளது.

4. வர்த்தக நிலையங்களுக்கு வயது முதிர்ந்தவர்கள், சிறுவர்கள் வருவதனைத் தவிர்க்குமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

5. வர்த்தக கொள்வனவிற்காக வரும் பொதுமக்கள் நெருக்கமாக இருப்பதை தவிர்ப்பதுடன் தமக்கிடையில் ஒரு இடைவெளியைப் பேணுமாறும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

6. அத்தியாவசியத்தேவையுடையோர் தவிர்ந்த ஏனையோர் வீட்டை விட்டு வெள்யே வருவதை தவிர்த்தல் வேண்டும்.

7. வர்த்தக நிலையக் கதவின் கைபிடிகள் உட்பட வர்த்தக நிலையங்களை கிருமியகற்றும் பதார்த்தங்களை பயன்படுத்தி அடிக்கடி சுத்தபடுத்தி அதிஉச்ச சுகாதாரத்தினை பேணுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இவ்வொழுங்குகளை யாழ் வணிகர் கழகம் தீர்மானம் எடுத்து தமது உறுப்பினர்களுக்கு உடனடியாக கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Share.
Leave A Reply