குழந்தையை 2 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டு காணாமல் போனதாக நாடகமாடிய தந்தை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சின்னக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி தனலட்சுமி. இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், நான்காவதாகவும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 11ம் தேதி, பழனி பேருந்து நிலையத்திற்கு, மனைவி மற்றும் குழந்தைகளுடன் செல்வம் வந்துள்ளார். அந்த சமயம், அவரது மனைவி மற்ற குழந்தைகளை கழிவறைக்கு அழைத்துச் செல்வதற்காக, கைக் குழந்தையை கணவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.

திரும்பி வந்த பார்த்த போது, கைக்குழந்தை காணாமல் போயிருந்தது. அதுகுறித்து, தனலட்சுமி, அவர் கணவரிடம் கேட்டபோது குழந்தையை காணவில்லை என செல்வம் கூறியுள்ளார்.

 

அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த தனலட்சுமி, பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து, செல்வத்தைப் பிடித்து போலீஸார் விசாரித்துள்ளனர்.

அந்த விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த யுவராஜ் என்பவருக்கு, திருமணமாகி 20 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்ததாகவும், அவரிடம் தன்னுடைய பெண் குழந்தையை 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு செல்வம் இடைத்தரகர் மூலம் விற்றதும் அம்பலமானது.

மேலும், மனைவிக்கு தெரியாமல் பழனி பேருந்து நிலையத்தில் குழந்தையை யுவராஜ்-விஜயலட்சுமி தம்பதியிடம் செல்வம் ஒப்படைத்ததும் தெரியவந்தது.

இதன் தொடர்ச்சியாக, தனிப்படை அமைத்து குழந்தையை மீட்ட போலீஸார், தாய் தனலட்சுமியிடம் சேர்த்தனர். மேலும், குழந்தை விற்பனையில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாகி உள்ள இடைத்தரகரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

Share.
Leave A Reply