நீங்கள் வயது முதிர்ந்தவராக இருந்தால், கொரோனா வைரஸால் உங்களுக்கு அதிக ஆபத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இளைஞர்களை கொரோனா வைரஸ் தாக்காது என்று சொல்ல முடியாது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
“கொரோனா வைரஸ் வயதானவர்கள் அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்களை மட்டும்தான் தாக்கும் என்றில்லை” என பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் எம்.பி-யும் மருத்துவருமான டாக்டர் ரோசேனா அல்லின்-கான் பிபிசியிடம் தெரிவித்தார்.
பிரிட்டனில் இந்த வைரஸ் தொற்றால் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 30 மற்றும் 40 வயதுகளில் நல்ல உடல்நிலையில் இருக்கும் சில நோயாளிகளுக்கு தாம் சிகிச்சை அளித்ததாகவும், அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருவதாகவும் அல்லின்-கான் குறிப்பிட்டார்.
வெவ்வேறு வயதினரிடையே இருக்கும் ஆபத்துகள் என்ன?
ஒட்டுமொத்தமாக பார்த்தோம் என்றால் வயதானவர்களுக்குதான் இந்த வைரஸ் தொற்றால் ஆபத்து அதிகம்.
ஒருவரது வயது மற்றும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட இருக்கும் வாய்ப்பிற்கும் இடையே உள்ள தொடர்பை லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
வயதானவர்களே அதிகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அவசியமாகிறது என்பது அதில் தெரிய வந்தது.
50 வயதிற்குட்பட்டவர்களில் 5%க்கும் குறைவானவர்களே கொரோனா வைரஸ் அறிகுறிகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், 70-79 வயதுடையவர்களுக்கு இது 24 சதவீதமாக இருக்கிறது.
40 வயதிற்கு உட்பட்டவர்களில் வெறும் 5 சதவீதத்தினருக்கே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தேவைப்பட்டது. 60களில் இருப்பவர்களுக்கு இது 27 சதவீதமாகவும், 70களில் இருப்பவர்களுக்கு 43 சதவீதமாகவும் உயர்ந்திருக்கிறது.
இதுவே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் 71 சதவீதம் பேருக்கு தீவிர சிகிச்சை தேவைப்பட்டது.
வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட சீனா மற்றும் இத்தாலி நாடுகளின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே இது கணக்கிடப்பட்டது.
இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டோரின் சராசரி வயது 63 என ஓர் ஆய்வு கூறுகிறது.
அதே நேரத்தில், அமெரிக்காவை பொறுத்தவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 53 சதவீதம் பேர் 55 வயதிற்கு மேல் ஆனவர்கள் என அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் ஆரம்பக்கட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் அதே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லது இந்த வைரஸ் தொற்றால் இறந்தவர்களை எடுத்துக் கொண்டால் மிகவும் வயதானவர்களே அதிகம். (உயிரிழந்தவர்களில் 80 சதவீதம் பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்)
சராசரி மட்டுமே
இவையெல்லாம் சராசரிதான். இதற்குள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு மற்றும் உயிரிழந்த இளம் வயதினரும் அடங்குவர்.
இத்தாலியில் 40களில் உள்ள, இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களில் 0.4% பேர் இறந்துள்ளனர். 80களில் இருந்தவர்களில் 19.7% பேர் உயிரிழந்துள்ளனர். அதுவே அமெரிக்காவில் 40களில் இத்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களில் 0.7% பேர் இறந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.
வயதானவர்கள் மற்றும் உடல்நிலை மோசமாக இருந்தவர்கள்தான் இந்த கொரோனா தொற்றால் அதிகம் உயிரிழந்திருக்கிறார்கள் என்றாலும் இது ஏதோ கணித விதிமுறை போன்று கிடையாது என்கிறார் அமெரிக்க ஒவ்வாமை மற்றும் பரவும் நோய்கள் மையத்தின் இயக்குநர் அந்தோனி ஃபாசி.
“இளம் வயதுடையவர்களும் இதனால் பாதிக்கப்பட்டு, தீவிரமாக நோய்வாய்பட்டு உள்ளனர்” என்கிறார் அவர்.
ஏற்கனவே நம்மிடம் இருக்கும் ஆதாரங்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் மிகுந்த அபாயத்தில் இருப்பதாக கூறினாலும், குழந்தைகள் உட்பட இளம் வயதினரும் கொரோனாவால் இறந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
“கொரோனா வைரஸ் சிறுவர்களைவிட முதியவர்களைத்தான் அதிகம் தாக்குகிறது என்று தெரிவிக்கப்பட்டாலும், சிறுவர்கள், முக்கியமாக பச்சிளம் குழந்தைகளுக்கு இத்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக” சீனாவில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட 2000 குழந்தைகளை ஆய்வு செய்ததில் தெரிய வந்தது.
ஏற்கனவே இருக்கும் உடல்நலப் பிரச்சனைகள்
எந்த வயதினராக இருந்தாலும், ஏற்கனவே ஒருவருக்கு இருக்கும் உடல்நலம் இதில் முக்கிய பங்காற்றுகிறது.
உதாரணமாக, பிரிட்டனில் 4.3 மில்லியன் மக்களுக்கு ஆஸ்துமா பிரச்சனை இருக்கிறது. வயதானவர்களைவிட, இவர்களுக்கு கொரோனாவால் மிகுந்த ஆபத்து ஏற்படக்கூடும்.
பரவலை கட்டுப்படுத்துவது
இந்நிலையில், இளம் வயதினர் கொரோனாவால் கடுமையாக நோய்வாய்ப்படும் வாய்ப்பு குறைவாக இருந்தாலுமே, அவர்களால் மற்றவர்களுக்கு மிக எளிதாக வைரஸ் பரவலாம். இளம் வயதினருக்கு அவர்கள் பாதிக்கப்பட்டதற்கான எந்த அறிகுறிகளும் வராமல் இருக்கலாம், அல்லது மிகக் குறைந்த அறிகுறிகளே தென்படலாம்.
படத்தின் காப்புரிமை Getty Images
எந்த ஒரு காய்ச்சலையும்விட, கொரோனா தொற்று வேகமாக பரவும் என்று தெரிய வந்துள்ளது. இந்த வைரஸ் தொற்று இருக்கும் ஒருவர், சராசரியாக இரண்டிலிருந்து மூன்று பேருக்கு பரப்புவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அந்த இரண்டு அல்லது மூன்று பேர், மேலும் இரண்டு அல்லது மூன்று பேருக்கு பரப்புவார்கள். இந்தக் கணக்கு இவ்வாறு போய் கொண்ட இருக்கும். இது பார்க்க குறைந்த எண்ணிக்கையாக இருக்கலாம். ஆனால் இது ஒரு கட்டத்தில் ஆயிர்க்கணக்கில் பரவத் தொடங்கும்.
ஒருவரிடம் இருந்து ஒருவர் விலகிக் கடைபிடிக்கப்படும் சமூக விலகல் இந்த பரவலைத் தடுக்க உதவும்.