`இந்தப் போரில் நாம் வென்றாக வேண்டும். கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தப் போரில் நிச்சயம் நாம் வெல்வோம். இந்தப் போர் எதிர்பாராத ஒன்று. அதனால், எதிர்பார்க்காத சில முடிவுகளை எடுக்க வேண்டியதாயிற்று.’
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன்கி பாத் வானொலி உரைமூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அந்தவகையில், கொரோனா முன்னெச்சரிக்கையாக 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், முதல்முறையாக நாட்டு மக்களிடையே மன்கி பாத் நிகழ்ச்சி மூலம் உரையாற்றினார்.
வழக்கமாக அவரது உரையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று வந்தநிலையில், இந்த உரையில் முழுக்க முழுக்க கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மையப்படுத்தியே பேசினார். அவர் கூறுகையில்,
“உங்கள் அன்றாட வாழ்வில் சிரமங்களை ஏற்படுத்தும் வகையில், இதுபோன்ற கடினமான முடிவுகளை எடுத்ததற்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். கொரோனா பரவலுக்கு எதிரான போர் கடினமானது. அதற்கு இதுபோன்ற கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கிறது. நாட்டு மக்களைப் பாதுகாப்பாக வைக்க வேண்டியது முக்கியமானது.
இந்தப் போராட்டம் வாழ்வா, சாவா போன்றது. அதில், இதுபோன்ற கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த நோயால் பாதிக்கப்படாமல் இருக்க நாம் தொடக்கம் முதலே நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இந்தியாவும் தற்போது அதைத்தான் செய்துகொண்டிருக்கிறது.
மக்களைப் பலிகொள்ளும் கொரோனாவுக்கு எதிராக மொத்த மனிதகுலமும் ஒன்றுசேர்ந்து அதற்குத் தீர்வு காண வேண்டும். கொரோனா வைரஸுக்கு எதிரான முன்நின்று போரிட்டுக்கொண்டிருக்கும் போராளிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் ஆகியோரை நாம் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். விதிகளை மீறி வீட்டைவிட்டு வெளியே வரும் ஒருசிலரால் கொரோனா பாதிப்பில் இருந்து தப்ப முடியாது’’ என்றார்.
இந்தப் போரில் நாம் வென்றாக வேண்டும். கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தப் போரில் நிச்சயம் நாம் வெல்வோம். இந்தப் போர் எதிர்பாராத ஒன்று. அதனால், எதிர்பார்க்காத சில முடிவுகளை எடுக்க வேண்டியதாயிற்று
அதேபோல், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட சிலருடன் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் ஒருவரான ரமகம்பா தேஜா பிரதமரிடம் கூறுகையில்,
“வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டபோது நான் அச்சமுற்றேன். ஆனால், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்களால், அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டேன். மருத்துவமனையில் இருந்து குணமாகி வீடு திரும்பியதும் கைகளைச் சுத்தமாகக் கழுவுவது போன்றவை மூலம் சுகாதாரத்தைக் கடைப்பிடித்தேன்’’ என்றார்.
I apologize for taking these harsh steps which have caused difficulties in your lives, especially the poor people. I know some of you would be angry with me also. But these tough measures were needed to win this battle: PM Narendra Modi #MannKiBaat (file pic) pic.twitter.com/fwGlUk5ubz
— ANI (@ANI) March 29, 2020
அதேபோல், ஆக்ராவைச் சேர்ந்த ஷூ தொழிற்சாலை நடத்திவரும் அசோக் கபூர் குடும்பத்தினருடனும் பிரதமர் மோடி உரையாடினார். இத்தாலியில் இருந்து திரும்பியபோது தன் இரண்டு மகன்களும் குடும்ப உறுப்பினர் ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகக் கூறிய அசோக் கபூர், மருத்துவர்கள் உதவியுடன் வைரஸ் தொற்றிலிருந்து அவர்கள் மீண்டதாகக் குறிப்பிட்டார்.
ஆக்ரா பகுதியில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அசோக்கை அறிவுறுத்திய பிரதமர் மோடி, சமூக வலைதளங்கள் வாயிலாக அதைச் செய்யலாம் என்றும் கூறினார். “உலக நாடுகளில் கொரோனாவால் ஏற்படும் இறப்புகள் குறித்த செய்திகளால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கானோர் அச்சத்தில் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு உரிய முறையில் ஆலோசனைகள் வழங்க வேண்டியது அவசியம்’’ என்று மருத்துவர் நிதிஷ் குப்தா, தனது கருத்தை பிரதமர் மோடியிடம் தெரிவித்தார். அதேபோல் புனேவைச் சேர்ந்த மருத்துவர் போர்ஸ், தங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் அதிலிருந்து குணமடைந்து வருவதாக பிரதமர் மோடியிடம் நம்பிக்கை தெரிவித்தார்.
மருத்துவர்களின் சேவையைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் மோடி, “’பொருளாதாரரீதியான நோக்கம் இல்லாமல் நோயாளிகளுக்கு சேவை செய்பவரே உண்மையான மருத்துவர்’ என்று கூறுவார்கள். நமது மருத்துவர்களின் சேவை, எனக்கு அதை நினைவுபடுத்துகிறது. தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களால்தான் நமது அன்றாட வாழ்வு பிரச்னையின்றி கழிகிறது. அவர்கள்தான் `டெய்லி லைஃப் ஹீரோஸ்’. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் கடுமையாகப் பணியாற்றி வரும் வங்கி ஊழியர்கள், ஐ.டி ஊழியர்கள், மளிகைக் கடைகள், ஆன்லைன் வணிக நிறுவனங்களின் பொருள்களை டெலிவரி செய்பவர்கள் ஆகியோரின் பணி பாராட்டுதலுக்குரியது.
மொத்தமாகக் கூடாமல் சமூகரீதியாக நமக்குள் இடைவெளி இருந்தால் போதும். மனங்களுக்கிடையில் இடைவெளி வேண்டாம். தனிமைப்படுத்தி வைத்திருப்பவர்களை ஒதுக்கிவிடாதீர்கள். இடைவெளி விடுங்கள் என்று கூறியதால், பேசாமல் இருந்துவிடாதீர்கள். உங்கள் நண்பர்களுடன் எப்போதும் தொடர்பிலேயே இருங்கள். தடை உத்தரவு அமலில் இருக்கும் இந்த நாள்களில் தோட்டங்களைப் பராமரிப்பது, இசையைக் கேட்பது போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள்.
இந்த போரில் நாம் வென்றாக வேண்டும். கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தப் போரில் நிச்சயம் நாம் வெல்வோம். இந்தப் போர் எதிர்பாராத ஒன்று. அதனால், எதிர்பார்க்காத சில முடிவுகளை எடுக்க வேண்டியதாயிற்று’’ என்றார் பிரதமர் மோடி.