கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், வைரஸ்களின் பொதுவான பண்புகள் குறித்து கீழ்க்காணும் தகவல்களை அமெரிக்காவை சேர்ந்த ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
* வைரஸ் ஒரு உயிருள்ள உயிரினம் அல்ல, அது ஒரு புரத மூலக்கூறு (டி.என்.ஏ). அது லிப்பிட் (கொழுப்பு) என்னும் ஒரு பாதுகாப்பு அடுக்கால் மூடப்பட்டிருக்கும். இது, கண், நாசி அல்லது சளிச்சுரப்பியின் உயிரணுக்களால் உறிஞ்சப்படும்போது, அவற்றின் மரபணு குறியீட்டை மாற்றுகிறது (பிறழ்வு). அதற்கடுத்த நிலைகளில், உயிரணுக்களை கட்டுப்படுத்தி தனது எண்ணிக்கையை பன்மடங்காக்கும்.
* வைரஸ் ஒரு உயிரற்ற புரத மூலக்கூறு என்பதால், அது கொல்லப்படுவதில்லை. ஆனால் அது தானாகவே சிதைகிறது. வைரஸின் சிதைவு நேரமானது வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் பொருளின் வகையைப் பொறுத்தது.
* வைரஸ் மிகவும் எளிதாக முறியக்கூடியது; அதைப் பாதுகாக்கும் ஒரே விடயம் கொழுப்பின் மெல்லிய வெளிப்புற அடுக்கு. அதனால்தான் சோப்பு அல்லது சோப்பு சார்ந்த பொருட்கள் அதை அழிப்பதற்கான சிறந்த தீர்வாகும். ஏனென்றால் நுரை கொழுப்பை வெட்டுகிறது (அதனால்தான் நீங்கள் 20 விநாடிகள் அல்லது அதற்கு மேல் கைகளை தேய்த்து நிறைய நுரையை ஏற்படுத்த வேண்டும்). கொழுப்பு அடுக்கைக் கரைப்பதன் மூலம், புரத மூலக்கூறு சிதறடிக்கப்பட்டு தானாகவே உடைகிறது.
* வெப்பம் கொழுப்பை உருக்குகிறது; இதனால்தான் கைகள், உடைகள் மற்றும் எல்லாவற்றையும் கழுவுவதற்கு 25 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேலான வெப்பநிலையில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. மேலும், சூடான நீர் அதிக நுரையை உருவாக்கும் என்பதால் அது மேலும் பலனளிக்கும்.
* வைரஸ்கள் வெளிப்புற குளிர் அல்லது வீடு, கார் உள்ளிட்ட செயற்கையாக குளிரூட்டபட்ட இடங்களில் நிலையாக இருக்கும். எனவே, ஈரப்பதம் அகற்றப்பட்ட, உலர்ந்த, சூடான மற்றும் பிரகாசமான சூழல்களில் வைரஸ்கள் வேகமாக சிதைவுறும்.
* ஆரோக்கியமான நிலையில் உள்ள தோலின் வாயிலாக வைரஸ்கள் உடலினுள் நுழைய முடியாது.
* வோட்கா உள்ளிட்ட அனைத்துவிதமான மதுபானங்களையும் வைரஸை கட்டுப்படுத்தும் கிருமிநாசினியாக பயன்படுத்த முடியாது. கிருமிநாசினியில் ஆல்கஹாலின் அளவு 65 சதவீதம் இருக்க வேண்டும்.
* மூடப்பட்ட இடங்களில் வைரஸின் செறிவு அதிகமாக இருக்கும். இயற்கையான காற்றோட்டம் மிக்க இடங்களில் வைரஸின் செறிவு குறைவாக காணப்படும்.
* சளி, உணவு, பூட்டுகள், கைப்பிடிகள், சுவிட்சுகள், ரிமோட் கண்ட்ரோல், அலைபேசி, கைக்கடிகாரங்கள், கணினிகள், மேசைகள், தொலைக்காட்சி பெட்டி போன்றவற்றைத் தொடுவதற்கு முன்பும் பின்பும் கைகளைக் கழுவவும்.
* நுண்ணிய விரிசல்களில் மூலக்கூறுகள் மறைய கூடியவையாக இருப்பதால், கைகளை நன்கு கழுவிய பிறகு கட்டாயம் உலர வைக்க வேண்டும்.
* நீளமாக நகங்களை வளர்ப்பதை தவிர்ப்பதன் மூலம், வைரஸ்கள் நகங்களின் உள்ளே மறைந்திருப்பதை தடுக்கலாம்.