இன்று ஏப்ரல் 1- ஆம் தேதி. முட்டாள்கள் தினம். நம் சக நண்பர்களை, உறவினர்களை முட்டாளாக்க நாம் ஏதேதோ திட்டமிட்டு இருப்போம். சில முயற்சிகள் செய்து ஏமாற்றி இருப்போம். ஏன் ஏமாற்றமும் அடைந்திருப்போம்?
சரி… எதற்காக ஏப்ரல் 1 – ஆம் தேதி முட்டாள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது? அதன்பின் உள்ள காரணங்கள் என்ன?
இதன்பின் பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் பிரதானமானது இரண்டு. அவற்றை மட்டும் இங்கு பகிர்கிறோம்.
சேவல் – நரி கதை:
ஜெஃப்ரி என்ற ஆங்கில கவிஞர் ஒருவர், 14 ஆம் நூற்றாண்டில் எழுதிய சேவல் நரி கதைதான் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமாக அனுசரிக்கப்படுவதற்கு காரணம் என்கிறார்கள்.
சேவல் நரியிடம் பொய் சொல்லி, அதனிடமிருந்து தப்பும் என்பதாக அந்த கதை இருக்கும். நேரடியாக, ஏப்ரல் 1 என்று அந்த கதையில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், ‘Syn March began’ என்று அக்கதையில் வரும், இதனை மார்ச் மாதம் தொடங்கியதிலிருந்து 32 வது நாள் என்பதாக புரிந்துக் கொண்டு, ஏப்ரல் 1 ஆம் தேதியைதான் அவர் குறிப்பிட்டார் என்றனர்.
இதனால்தான் மார்ச் 1 ஆம் தேதி முட்டாள் தினமாக அனுசரிக்கப்படுகிறது என்று ஒரு சிலர் கூறுகிறார்கள்.
முட்டாள் மீன்கள்:
முந்தைய கதை நரி, சேவல் சம்பந்தப்பட்டது என்றால், இந்த கதை மீன்கள் சம்பந்தப்பட்டது.
இந்த கதை உருவாகிய இடம் ஐரோப்பா.
ஃப்ரான்ஸ் நாட்டு ஓடைகள் மற்றும் ஆறுகளில் ஏப்ரல் மாதத்தில் நிறைய மீன்கள் கிடைக்கும். அதனை சுலபமாக பிடிக்க முடியும். மக்கள், அந்த மீன்களை முட்டாள் மீன்கள் என்று அழைத்தனர். பின் இந்த நாளில், அப்பகுதி மக்கள் தங்களுக்குள் ஏமாற்றி விளையாட தொடங்கினர்.
இதுதான் கண்டங்கள் தாண்டி பரவி முட்டாள்கள் தினம் ஆனது.