கொரோனா வேகமாக பரவிவருவதால் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்திய சுகாதாரத்துறை மந்திரியை பிரேசில் அதிபர் பதவி நீக்கம் செய்துள்ளார்.
உலகையே உலுக்கு வரும் கொரோனா பிரேசிலிலும் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் 33 ஆயிரத்து 682 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2 ஆயிரத்து 141 பேர் பலியாகியுள்ளனர்.
வெளிமனிதர்களின் கால்தடமே படாத அமேசான் காடுகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கும் வைரஸ் பரவியுள்ளது.
பிரேசிலில் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நாடு சுகாதாரத்துறை மந்திரி லூயிஸ் ஹெண்டிக்யூ மண்டிட்டா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தார்.
குறிப்பாக நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கவர்னர்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும், வைரஸ் பரவுவதை குறைக்க மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் எனவும் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தார். இவரது நடவடிக்கைகள் பிரேசில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் அவருக்கு ஆதரவும் அதிகரித்தது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட சுகாதாரத்துறை மந்திரி லூயிஸ் ஹெண்டிக்யூ மண்டிட்டா
ஆனால், அமேசான் காட்டுத்தீ விவகாரத்தில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ தனது அமைச்சரவையின் சுகாதாரத்துறை மந்திரி லூயிஸ் ஹெண்டிக்யூ மண்டிட்டாவின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சனம் செய்துவந்தார்.
மேலும், கொரோனா ஒரு சிறிய வைரஸ். மனித உயிர் விலைமதிப்பற்றது தான் அதே சமயம் நாட்டின் பொருளாதாரமும், வேலைவாய்ப்பும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என அதிபர் தெரிவித்தார்.
இதனால் சுகாதாரத்துறை மந்திரிக்கும் அதிபருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது.
இந்நிலையில், கருத்து மோதல்கள் உச்சத்தை எட்டிவந்த நிலையில் லூயிஸ் ஹெண்டிக்யூ மண்டிட்டாவை பிரேசிலின் சுகாதாரத்துறை மந்திரி பதவியில் இருந்து அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனரோ திடீரென நீக்கியுள்ளார்.
மேலும், லூயிசிடம் இருந்து பறிக்கப்பட்ட சுகாதாரத்துறை மந்திரி பதவி நெல்சன் டெய்க் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிரேசில் அதிபரின் இந்த செயலுக்கு அந்நாட்டை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.