எங்கும் கொரோனா, எதிலும் கொரோனா, விழிப்புணர்வுடன் இரு, வீட்டிலேயே இரு’ அண்மைய நாட்களில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றன இந்த சொற்றொடர்கள். ஆம், உலக ஒழுங்கையே தலைகீழாக புரட்டிப்போட்டு கோரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை.
சில குறைபாடுகள் இருந்தாலும் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் மார்ச் மாதம் 15ஆம் திகதியிலிருந்து தற்போது வரையில் நாட்டின் சுகாதார துறையினரும், முப்படையினரும் முன்னெடுக்கும் பணிகள் அர்ப்பணிப்பு மிக்க அளப்பெரியவை என்றால் மிகையாகாது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு படையினர் களமிறக்கப்பட்டமையும், கொரோனா ஒழிப்பு பணியின் தலைமை இராணுவத்தளபதியிடம் வழங்கப்பட்டமை தொடர்பிலும் பாவங்களைக் கழுவும் கடுமையான விமர்சனங்களும் இல்லாமலில்லை.
ஆனால், கண்ணுக்குத்தெரியாத உயிர்பறிக்கும் கொடிய தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் உயிரை துச்சமென மதித்து ‘முன்களப் பணியாளர்களாக’ செயற்பட்டுவரும் படையினரின் செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகள் மறுதலிக்கவும் முடியாதவை.
இவ்வாறிருக்க, நாட்டில் கொரோனா வைரஸானது பேரிழப்புக்களை ஏற்படுத்தவல்ல ‘சமுக பரவல்’ என்று வகையறைக்குள் சென்று ஆக்கிரமிக்கவில்லை என்பதில் நிம்மதி பெருமூச்சு விடலாம். அத்துடன் மே மாத நடுப்பகுதியில் அல்லது ஈற்றில் நாட்டின் இயல்பு நிலையும் வழமைக்கு திரும்பி விடும் என்ற பெரும் நம்பிக்கையும் காணப்பட்டது.
ஆனால் அண்மைய நாட்களில் அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கிவிட்டது கொரோனா.
வல்லாதிக்க நாடுகள் முதல் சிற்றரசு நாடுகளையும் கதிகலங்க வைத்துக்கொண்டிருப்பது போன்று நாட்டில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மிக நெருக்கடியான நிலைமையொன்று ஏற்படும் ஆபத்தை அழுத்தமாக உணர்த்தி நிற்கின்றது.
இவ்வாறாறிருக்க, நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்களச் செயற்பாட்டில் இராணுவம், கடற்படை, விமானப்படை, ஆகியன தனித்தனியாகவும், கூட்டாகவும் பல்வேறு தருணங்களில் ஈடுபட்டிருந்தமை வெளிப்படையானதொன்று.
இவ்வாறு முப்படைகளின் பங்களிப்பும் தொடாந்து காணப்பட்டுக்கொண்டிருக்கையில், கடற்படையினரின் பிரதான முகாம்களில் ஒன்றான வெலிசறை கடற்படை முகாமில் உள்ள 65வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது 24ஆம் திகதி நள்ளிரவு வரையிலான பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 26இல் முதலாவது கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தாலும் அதன் தாக்கத்திற்கு இலங்கையின் முப்படைகளில் ஒன்றான கடற்படை இலக்காகியுள்ளமையே முதற்சந்தர்ப்பமாக அமைகின்றது.
22ஆம் திகதி திடீர் சுகயீனம் காரணமாக பொலன்னறுவை வைத்தியசாலையில் பொலன்னறுவை, புலஸ்திகம பகுதியைச் சேர்ந்த வெலிசறை கடற்படை முகாமில் கடற்படை இலத்திரணியல் பிரிவில் கடமையாற்றும் வீரரொருவர் அனுமதிக்கப்பட்டார். விடுமுறைக்காக தனது வீட்டுக்குச்சென்றிருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்தவீரருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் கொரோனா தொற்றிருப்பது உறுதிசெய்யப்பட்டது.
அதேபோன்று, வெலிசறை முகாமில் பணியாற்றும் குருணாகல், பண்டுவஸ்னுவரவைச் சோந்த வெலிசறை கடற்படை முகாமில் சேவையாற்றும் மற்றொரு வீரருக்கும் கொரோனா தொற்றிருப்பது அன்றையதினமே உறுதி செய்யப்படவும் வெலிசறை முகாம் நோக்கி விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இதனையடுத்து, குறித்த இரு வீரர்களுடன் முதற்தொடர்பிலிருந்த வீரர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட தகவல் திரட்டுக்கு அமைவாக, 23ஆம் திகதி வெலிசறை கடற்படை முகாமில் கொரோனா தொற்றை கண்டறிவதற்காக விசேட பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதில் 28பேருக்கு கொரோனா தொற்றிருப்பது அடையாளம் காணப்படவும் வெலிசறை கடற்படை முகாம் முழுமையாக முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதோடு முகாமலிருந்த ஏனைய வீரர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனைக்குள் உட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், 24ஆம் திகதி நடைபெற்ற மேலதிக பரிசோதனையில், வெலிசறை முகாமில் 30பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. அத்துடன் இம்முகாமில் பணியாற்றி விடுமுறையில் வீட்டிற்குச் சென்றுள்ள குருநாகலைச் சேர்ந்த இரு வீரர்களுக்கும் இரத்தினபுரி, பதுளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வீரர்களுக்குமாக எழுவருக்கு தொற்றிருப்பது அந்தந்த பிரதேச வைத்தியசாலைகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த வீரர்களுடன் நேரடித் தொடர்பிலிருந்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் உள்ளிட்ட 4ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதனைவிட வீரர்களும், அவர்களின் உறவினர்கள், நண்பர்களும் தொடர்ச்சியான பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையில் முப்படையினரும் களப்பணியில் ஈடுபட்டிருக்க கடற்படையினருக்கு மட்டும் எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது. கடற்படை வீரர்கள் சுயபாதுகாப்பில் அசமந்தமாக இருந்தனரா என்ற கேள்விகள் எழாமிலில்லை. இந்த வினாக்களுக்கான விடை தேடுகின்றபோது, ஜா-எல, சுதுவெல்ல பகுதியில் போதைப்பொருளுக்கு அடிமையான தொற்றாளர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட புலனாய்வு நடவடிக்கைகளின் போதே வைரஸ் தொற்று ஒரு வீரருக்கு ஏற்பட்டு அதிலிருந்து ஏனையோருக்கு பரவியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆக, போதைப்பொருள் அடிமையானவர்களைக் கூட கொரோனா பாதிப்பிலிருந்து மீட்டெடுப்பதற்கு கடற்படை வீரர்கள் எடுத்த சிரத்தை தற்போது பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாகியுள்ளது. இதேவேளை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 65பேரில் 58பேருக்கு எவ்விதமான அறிகுறிகளும் தென்படவும் இல்லையென்று கூறப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் அறிகுறிகள் அற்ற நிலையில் இன்னமும் எத்தனை வீரர்கள் தொற்றுக்குள்ளாகியிருப்பார்கள் என்ற கேள்வியையும் கடற்படையின் சமநிலையை பாதிக்குமா என்ற அச்சமும் வெகுவாக எழுகின்றது.
அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுகளின் பிரகாரம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் ஒருவரிடத்திலிருந்து ஆகக்குறைந்தது எட்டு முதற்தொடர்பாளர்களுக்கு வைரஸ் பரவலடைய வாய்ப்புக்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.
அந்த ஆய்வின் முடிவுகளை வைத்துப் கணக்குப் பார்கின்றபோது கடற்படையினுள் மாத்திரம் சுமார் ஐநூறுக்கும் அதிகமானவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அவ்வாறாதொரு எண்ணிக்கை காணப்படுமாயின் அது மிகப் பெரும் நெருக்கடிகளை நிச்சயம் ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.