சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் 1000 சடலப் பைகளைக் கோரியதன் நோக்கம் நாட்டில் அந்தளவான மரணங்கள் பதிவாகும் என்ற எதிர்பார்ப்பில் அல்ல என்று தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, இவ்விடயம் தொடர்பில் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சினால் சர்வதே செஞ்சிலுவைச் சங்கத்திடம் 1000 சடலப்பைகளைக் கோரி கடிதம் மூலம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் விளக்கமளிக்கையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் 1000 சடலப் பைகளைக் கோரியதன் நோக்கம் நாட்டில் அவ்வாறு மரணங்கள் பதிவாகும் என்ற எதிர்பார்ப்பில் அல்ல.
இலங்கையில் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் அவ்வாறானதொரு துரதிஷ்டவசமாக நிலைமை ஏற்படாது என்பதை உறுதியாகக் கூறுகின்றோம்.
இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக எதிர்பார்க்கப்படுகின்ற மரணங்கள் மிகக் குறைவாகும். நோயாளர்களின் எண்ணிக்கையும் குறைவாகும்.
இதுவரையில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் பரவியுள்ள வைரஸ் மேலும் தீவிரமடையாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.