கேரளாவின் முன்னணி நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் மற்றும் திரைப்பட இயக்குநர் அனூப் சத்யன் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை இழிவுபடுத்தி விட்டதாகக்கூறி ட்விட்டரில் அவர்களுக்கு எதிரான ஹாஷ்டேக் ஒன்று டிரெண்டாகி வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம், துல்கர் சல்மான் தயாரிப்பில் அனூப் சத்யன் இயக்கத்தில் ‘வரனே அவஷ்யமுண்ட்’ என்ற திரைப்படம் வெளியானது. துல்கர் சல்மான், சுரேஷ் கோபி, ஷோபனா மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்திருந்தனர்.

காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் வசூல் ரீதியிலும், வியாபார ரீதியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த சூழலில், இத்திரைப்படம் அமேசான் காணொளி தளத்தில் கடந்த 14ஆம் தேதி வெளியானது.

‘வரனே அவஷ்யமுண்ட்’ படத்தில் பிரபாகரனின் பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தற்போது பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மார்ச் 3ஆம் தேதி துல்கர் சல்மான் ‘வரனே அவஷ்யமுண்ட்’ படத்தின் யு டியூப் காணொளியை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தற்போது, அந்த ஸ்கிரீன் ஷாட்டும் வைரலாக பரவி வருகிறது. அதில், “நீங்கள் இதுவரை கேட்டதிலேயே மிகவும் நகைச்சுவையான நாயின் பெயர் என்ன? எங்களுடையது நிச்சயம் பிரபாகரனாகத்தான் இருக்கும்” என்று பதிவிட்டிருந்தார்.

ஏப்ரல் 13ஆம் தேதி படத்தின் இயக்குநர் அனூப் சத்யன் தனது சமூக ஊடகப் பக்கத்தில் தனது நாயின் புகைப்படத்தை பதிந்து, பிரபாகரன் என்னும் பிரவுனி என்று பதிவிட்டிருந்தார். இவை அனைத்தும் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு வித்திட்டன.

இந்த சூழலில், படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான துல்கர் சல்மான் இந்த பிரச்சனை குறித்து விரிவான விளக்கத்தை கொடுத்துள்ளார்.

வரனே அவஷ்யமுண்ட்’ படத்தில் இடம்பெற்றிருந்த பிரபாகரன் குறித்த நகைச்சுவை காட்சி கேரளாவில் ‘பட்டன பிரவேஷம்’ என்ற பழங்கால படத்தில் பயன்படுத்தப்பட்ட ஒன்று என்று குறிப்பிட்ட துல்கர், இந்த நகைச்சுவை காட்சி கேரளாவில் மீம்மாக மாறிய ஒன்று என்றும், இதுகுறித்து படத்தின் தொடக்கத்திலேயே இந்தப் பெயர் யாரையும் குறிப்பிட்டு சார்ந்தது இல்லை என்று தெளிவாக பொறுப்பு துறப்பு வாசகம் இடம்பெற்றது என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

படத்தைப் பார்க்காமல் பலர் காழ்ப்புணர்ச்சியை பரப்புவதாக குற்றஞ்சாட்டிய அவர், தன் மீதும் இயக்குநர் மீதும் முன்வைக்கப்படும் அவதூறுகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்றும், ஆனால் எங்கள் குடும்பத்தினரையும் படத்தில் நடித்த மூத்த நடிகர்களையும் அவதூறாக பேசுவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்த அவர், தன்னுடைய படங்கள் மூலம் யாரையும் புண்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்றும், இது உண்மையிலேயே தவறான புரிதலால் ஏற்பட்ட நிகழ்வு என்றும் அந்த பதிவில் துல்கர் தெரிவித்துள்ளார்.

‘வரனே அவஷ்யமுண்ட்’ படத்தின் இயக்குநர் அனூப் சத்யனும் துல்கரின் கருத்துகளை சுட்டிக்காட்டி, இது விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை குறிப்பிடவில்லை என்றும், தமிழ் மனங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, இருவரும் தாங்கள் பதிந்திருந்த சர்ச்சைக்குரிய கருத்துகளை தங்கள் சமூக ஊடகப்பக்கங்களிலிருந்து அகற்றி உள்ளனர்.

இருந்தும், இன்று காலை தொடங்கியதிலிருந்து இந்த விவகாரம் இணைய தளங்களில் மீண்டும் பூதாகரமாகி வருகிறது.

 

“சர்ச்சைக்குரிய காட்சியை உடனடியாக நீக்க வேண்டும்”

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ”தெரியாமல் வைத்துவிட்டோம் என்றோ, கேரளாவில் அது பெரும்பாலானோர் வைத்திருக்கும் பொதுப்பெயர் என்றோ துல்கர் சல்மான் அவர்கள் கூறும் காரணங்கள் ஏற்புடையதல்ல. படக்குழுவினர் நினைத்திருந்தால் இப்படி ஒருகாட்சியில் அத்தகைய பெயரை பயன்படுத்தாமல் தவிர்த்திருக்கலாம். மேலும் படக்குழுவினருக்கு எவ்வித உள்நோக்கமும் இல்லையென்றால் அந்த ஒரு குறிப்பிட்ட பெயர் இடம்பெறும் காட்சியை மட்டும் தனியாக விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “தமிழக இளம் தலைமுறையிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தவுடனேயே தற்போது துல்கர் சல்மான் அவர்கள் பொதுவெளியில் மன்னிப்புக் கூறியிருப்பது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் படத்திலிருந்து அந்த சர்ச்சைக்குரிய காட்சியை உடனடியாக நீக்க வேண்டும். அதுவரை தங்களுடைய படத்திற்கு எதிரான தமிழர்களின் எதிர்ப்பு என்பது தொடர்ந்துக்கொண்டே இருக்குமென்று எச்சரிக்கிறேன். எனவே காயம்பட்ட ஒவ்வொரு தமிழனின் உள்ளத்து உணர்வையும், அவர்களின் எதிர்ப்பு நிலைப்பாட்டின் தீவிரத்தையும் உணர்ந்து படத்திலிருந்து அக்காட்சியை முழுமையாக நீக்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

 

Share.
Leave A Reply