பல வாரங்களாக இருந்த ஊரடங்கு சிறிது தளர்த்தப்பட்டதால், ஐஸ்கிரீம் கடைகள் முதல் அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டிருந்தன.
உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொடிய கொரானாவுக்கு ஐரோப்பாவும் பலியானது. இத்தாலியில் மட்டுமே இருபத்தி ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மக்களைக் கொன்றுகுவித்த கொரோனா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி என்று அனைத்து நாடுகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்துவருகிறது.
ஜெர்மனியில் மட்டும் இதுவரை ஐந்தாயிரத்திற்கும் மேலான இறப்பு கணக்கிடப்பட்டுள்ளது. ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்பொருட்டு, அந்த நாட்டிலும் பல கடுமையான தடைகள் அமலில் உள்ளன.

இந்தத் தடைகளுக்கெல்லாம் இயற்கை அஞ்சுமா?
கொரோனாவைப் பற்றி சிறிதும் கலக்கமின்றி ஜெர்மனியில் வசந்தகாலம் இனிதே தொடங்கியது. சூரியஒளியில் குளித்து புத்துணர்ச்சியுடன் காணப்பட்டது அந்த நகரம்.
பல வாரங்களாக இருந்த ஊரடங்கு சிறிது தளர்த்தப்பட்டதால், ஐஸ்கிரீம் கடைகள் முதல் அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டிருந்தன.
இத்தனை காலம் வீட்டிலேயே முடங்கி இருந்த களைப்பிலிருந்து சிறிது விடுபட எண்ணி, அருகில் இருந்த ஐஸ்கிரீம் கடைக்குள் நுழைந்தனர் அந்தத் தம்பதியினர்.
ஐஸ்கிரீம் வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியுடன் வெளியில் வந்த அவர்கள், அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து சுவைக்கத் தொடங்கினர். பாவம், அந்தத் தம்பதியினருக்கு அப்போது தெரியாது, இவர்கள் ருசிப்பதுதான் அவர்கள் வாழ்க்கையிலேயே மிக விலை உயர்ந்த ஐஸ்கிரீம் என்று.

என்ன ஒரு முப்பது நாப்பது யூரோ இருக்குமா என்று தானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. முப்பத்திரண்டாயிரம் ரூபாய் (400 யூரோ). இதைக் கேட்டதுக்கே உங்கள் புருவங்கள் உயர்கின்றனவே, இந்த அபராதத்தை இவர்கள் தவறாமல் கட்ட வேண்டுமே… அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று சற்றே சிந்தித்து பாருங்கள்!
ஆம். நாலு யூரோ ஐஸ் கிரீம் வாங்கி வெளியில் வந்தவருக்கு 400 யூரோ அபராதம் விதித்தது போலீஸ். இது எங்கே என்றுதானே கேட்கிறீர்கள். இது நடந்தது ஜெர்மனியில் உள்ள உர்செலின் (Würsele) என்ற இடத்தில்தான்.
கடந்த ஏப்ரல் 20-ம் தேதி முதல் ஐஸ்கிரீம் கடைகள் திறக்க அனுமதியளித்த அரசு, அதை யாரும் அந்த கடையிலேயோ அல்லது கடையின் அருகிலேயோ உண்ண தடை விதித்திருந்தது. மக்கள் ஐஸ்கிரீமை வாங்கி, தங்கள் வீட்டிற்குச் சென்று உண்ணவே அனுமதி இருந்தது. குறைந்தபட்சம் 50 மீட்டர் தள்ளித்தான் ஐஸ்கிரீம் ருசிக்க முடியும்.
அதை மீறி கடையின் அருகிலேயே அமர்ந்து உண்டதால்தான் அந்தத் தம்பதிக்கு அபராதம் விதித்ததாகத் தெரிவித்தனர் அந்தக் காவலர்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், சற்று தூரத்தில் அமர்ந்திருந்த யாருக்கும் அபராதம் இல்லை. ஆனால், அங்கே அமர்ந்து ஐஸ்கிரீம் உண்டவருக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தம்பதியினரோ, அந்தக் கடையின் அருகே எந்த ஒரு அறிவிப்பும் இல்லாத காரணத்தால்தான் தாங்கள் அங்கே அமர்ந்து உண்டதாகக் கூறியும் காவலர்கள் செவிசாய்க்கவில்லை.
கொரோனாவின் காரணத்தால் வேலைகளும் பாதிக்கப்பட்டு, வருவாயும் குறைந்துள்ள இந்தச் சமயத்தில், இவர்கள் இதுபோன்ற ஒரு பாரத்தைத் தாங்குவது கடினமே.
இருப்பினும், ஜெர்மன் அரசு இதைக் கருத்தில்கொண்டு, அபராதத் தொகையை குறைக்குமா அல்லது விலக்களிக்குமா என்று தெரியவில்லை.
இதில் ஒரு படிப்பினை என்னவென்றால், இதுபோன்ற கடுமையான விதிகளின் காரணங்களினாலேயே, ஜெர்மனி போன்ற நாடுகள் கொரோனாவின் தாக்கத்தையும் இறப்பு விகிதத்தையும் மிகவும் குறைவாக வைத்துள்ளது.
எத்தனை கட்டுப்பாடுகள் விதித்தாலும் கேட்க மறக்கும் நம்ம ஊரு ஹீரோக்களுக்கு இதுபோன்ற ஓர் அதிர்ச்சி வைத்தியமளித்தால் மட்டுமே செவிசாய்ப்பார்கள் என்றால், அதையும் செய்தே தீரவேண்டும்.