கிம் ஜாங் உன் என்பவர் கொரிய தொழிலாளர் கட்சியின் தலைவரும் வடகொரிய நாட்டின் சுப்ரீம் லீடரும் ஆவார். `சுப்ரீம் லீடர் என்றால் சுப்பாரியா பாக்கு போடுபவரா?’ என வடகொரியாவில் கலாய்த்தால் மென்று, துப்பிவிடுவார்கள்.

பெயர்: கிம் ஜாங் உன்

வயது: 36 – 38

பிறந்தநாள்: மொத்தம் மூன்று பிறந்தநாள்கள் உள்ளன. சீட்டுக்குலுக்கி போட வேண்டும்.

பிறந்த இடம்: ப்யோங்யாங்

கிம் ஜாங் உன்

கிம் ஜாங் உன் என்பவர் கொரிய தொழிலாளர் கட்சியின் தலைவரும் வடகொரிய நாட்டின் சுப்ரீம் லீடரும் ஆவார். `சுப்ரீம் லீடர்’ என்றால் சுப்பாரியா பாக்கு போடுபவரா?’ என வடகொரியாவில் கலாய்த்தால் மென்று துப்பிவிடுவார்கள். அதுதான் அந்நாட்டின் உயரிய பதவி. மேலும், தமிழக மீம் க்ரியேட்டர்கள் இவரை `தலைவன்’ எனச் செல்லமாக அழைக்கிறார்கள்.

பால்வழி அண்டத்தின் பக்கத்து அண்ட ஏலியன், பசிபிக் பெருங்கடலுக்குள் படுத்து உறங்கும் காட்ஸில்லா, சொடக்கு போடும் தானோஸ் வரிசையில் கிம் ஜாங் உன்னையும் அமெரிக்காவுக்கு எதிரான சூப்பர் டீலக்ஸ் வில்லனாகப் பார்த்தனர் அமெரிக்க நாட்டினர்.

ஆனால், தற்போதைய நிலவரப்படி அமெரிக்க அரசுதான் அமெரிக்காவின் மிகப்பெரிய வில்லன் என அந்நாட்டினர் பிரித்துணர்ந்து பொருள் கொண்டுள்ளதால், கிம்மின் மவுசு அமெரிக்காவிலும் இப்போது பரவத் தொடங்கியுள்ளது.

பார்ப்பதற்கு பால் கொழுக்கட்டையில் மிதக்கும் உருண்டைபோல் அப்பாவியாக இருந்தாலும், எப்போது இவர் உருண்டையை உருட்டிவிடுவாரோ என்கிற பயத்தில் மற்ற நாடுகள் கிம்மைக் கண்டு பீதியில் இருக்கின்றன.

மிகச் சமீபத்தில், தென்கொரிய எல்லையில் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியிருக்கிறது வடகொரியா. இதற்கான உண்மை காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

புதிதாகப் பேனா வாங்கினால் பேப்பரில் கிறுக்கிப்பார்ப்பதுபோல, புதிதாக வாங்கிய துப்பாக்கியை டெமோ பார்க்கவே துப்பாக்கிச்சூடு நடத்தச் சொன்னார் கிம் என நம்பத்தகாத வட்டாரங்கள் சொல்கின்றன.

`மாண்புமிகு, இதயதெய்வம், தங்கத்தாரகை’ என நம் ஊர் அரசியல்வாதிகளுக்கே பத்துவித பட்டம், பானா காத்தாடி எல்லாம் பறக்கவிடுகையில், வடகொரியர்கள் கொரியன் காத்தாடியே பறக்கவிடுவார்கள் இல்லையா?! `புதிய அத்தியாயம், கூட்டத்திலேயே புத்திசாலி, பலசாலி, தைரியசாலி’ எனப் பல பட்டங்களைக் கொண்டு கிம்மை போற்றுகிறார்கள்.

கிம் ஜாங் உன்னுக்கு போர் பயிற்சி, ஆயுதப்பயிற்சி, வெடிகுண்டு பயிற்சி எல்லாம் அத்துப்படி. கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளிலும் ஆர்வம் அதிகம்.

அவர் விளையாடிய முதல் ஸ்னோ பௌலிங் ஆட்டத்திலேயே பர்ஃபெக்ட் 300 அடித்தவர். வைடு பந்தில் சிக்ஸ் அடித்து 7 ரன்கள் பெற்றவர்.

அவரின் பள்ளி பருவத்திலேயே ஏறத்தாழ 1,500 புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். இதை எல்லாம் யார் சொன்னார் எனக் கேட்டால், கிம்தான் சொன்னார் என அமெரிக்க ஊடகங்கள் சொல்கின்றன.

இவையெல்லாம் உண்மையா, பொய்யா என வாட்ஸ்அப் பல்கலைக்கழகம்தான் ஆய்வின் அடிப்படையில் கண்டறிய வேண்டும்.

வேதனைகள்:

Kim Jong-un

ஸ்கூல் லீவு விடுவார்கள் என, வடகொரிய மாணவர்கள்கூட கிம் இறந்துவிட்டதாகப் புரளி கிளப்புவது கிடையாது. இந்த சர்வதேச ஊடகங்கள்தான் எதையாவது கிளப்புகின்றன. பார்த்தாலே பச்சமுகம், பாம் எரியும் முகமான கிம் பற்றி புரளிகள் கிளம்புவது வேதனை அளிக்கின்றன.

ஸ்விட்சர்லாந்தில் ஸ்கூல் படித்த காலத்தில் இருந்தே, கிம்முக்கு ஸ்விஸ் சீஸ் என்றால் மிகவும் பிடிக்குமாம். எனவேதான், இப்படி கொழுக் மொழுக் குழந்தையாக இருக்கிறார் என்றும், உடம்பைக் குறைத்தால் `டை அனதர் டே’ வில்லனைப் போல் டெரராக இருப்பார் எனவும் வேதனை கொள்கின்றனர் வடகொரியன்ஸ். மேலும், சீஸ் பிடிக்கும் காரணத்தினாலேயே எல்லா போட்டோவிலும் `சீஸ்’ எனச் சிரித்த முகத்தோடு கிம் இருப்பதாகவும் கூறப்படுகிறது!

இதர வேதனைகள்:

Kim Jong-un

வதந்தி பரப்பினால் பதிலடி கொடுக்கப்படும் என வெறியாகி உள்ளது வடகொரிய அரசு. வடகொரியாவின் இசைக்குழு `மோரன்பாங்’கின் பாடல்களை இணையத்தில் காணலாம். `சொஸுகொபமாயவு ஜபடிப்பாம்வா’ என ஆரம்பிக்கும் பாடல் அட்டகாசமான ஒன்று. ஆனால், அதை யாரும் பெரியளவில் கண்டுகொள்ளாதது வேதனையளிக்கிறது. `லெட்ஸ் ஸ்டடி’, `மதர்ஸ் வாய்ஸ்’ என நற்கருத்துகளைக் கொண்ட பாடல்களை இசைத்துப் பாடுவார்கள். செவி சாய்க்கலாம்.

குழப்பங்கள்:

தனது தாத்தாவான கிம் இல்-சங் போல் தெரிவதற்கு, கிம் ஜாங் உன் தன் முகத்தை ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக அமெரிக்கர்கள் கூறுவதுண்டு.

அதில் சிலர், `இப்போது நம்மை ஆட்சி செய்வதுகூட டொனால்டு ட்ரம்ப் போல் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட கிம்தானோ’ எனக் குழம்புவதும் உண்டு.

கிம்முக்கு மொத்தம் மூன்று பிறந்தநாள்கள் உள்ளன. வடகொரிய ஆவணங்கள் ஜனவரி 8, 1982 என்றும், தென்கொரிய ஆவணங்கள் ஜனவரி 8, 1983 என்றும், அமெரிக்க ஆவணங்கள் ஜனவரி 8,1984 என்றும் சொல்கின்றன. இதில் எது உண்மையென இன்னும் விளங்கவில்லை.

Share.
Leave A Reply