விழுப்புரம் சிறுமி தீ வைத்து எரிக்கப்பட்ட விவகாரத்தில், கைதானவர்கள் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அடுத்திருக்கும் சிறுமதுரை காலனியைச் சேர்ந்தவர் ஜெயபால் (42), ராஜி தம்பதியர்.
இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர். விவசாயக் கூலி வேலை செய்துவரும் ஜெயபால் தனது வீட்டிலேயே சிறிய பெட்டிக்கடை ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று ஜெயபாலும் அவரது மனைவியும் வெளியே சென்றிருந்த நிலையில், மூத்த மகளான ஜெயஸ்ரீ (15) மட்டும் வீட்டில் இருந்திருக்கிறார்.
சுமார் 11 மணியளவில் ஜெயபால் வீட்டிற்குள்ளிருந்து திடீரென்று புகைமூட்டம் வெளியேறியதுடன், அலறல் சத்தமும் கேட்டது.
கைது செய்யப்பட்ட கலியப்பெருமாள்
அதனால் அக்கம்பக்கத்தினர் ஜெயபாலின் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கே உடல் முழுவதும் கருகிய நிலையில் சிறுமி ஜெயஸ்ரீ உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயஸ்ரீயை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் 90% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி ஜெயஸ்ரீ, கவுன்சிலர் முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரும்தான் தனது கைகளைக் கட்டிப்போட்டு பெட்ரோல் வைத்து எரித்ததாக வாக்குமூலம் கொடுத்துவிட்டு உயிரிழந்தார்.
அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரையும் கைது செய்து விசாரணையை மேற்கொண்டது காவல்துறை.
இதற்கிடையில் சிறுமி ஜெயஸ்ரீ உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் தேசிய அளவில் எதிரொலித்தது. முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவரும் கட்சியின் அனைத்துப் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டதாக ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் அறிவித்தனர்.
தேசிய குழந்தைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ததுடன், ஒரு வாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
கைது செய்யப்பட்ட முன்னாள் கவுன்சிலர் முருகன்
இந்நிலையில் முருகன் மற்றும் கலியபெருமாள் அளித்த வாக்குமூலமாக காவல்துறை தரப்பில் கூறப்படுவது, “ஜெயபால் குடும்பத்துக்கும், எங்களுக்கும் 7 வருஷமா பிரச்னை இருந்துச்சி.
அதனால் எங்களுக்கும் அவங்களுக்கும் அடிக்கடி சண்டை வரும். நாங்க அரசியல்ல இருக்கோம்னு தெரிஞ்சுகூட ஜெயபாலுக்கு எங்கமேல கொஞ்சம்கூட பயமே இல்லை. ரெண்டு பெட்டிக்கடை வெச்சிட்டு சம்பாதிக்கறதாலதான் அந்தத் திமிர்னு எங்களுக்கு அடிக்கடி தோணும்.
இந்நிலையில்தான் முருகன் நிலத்துக்குப் பக்கத்துல இருக்கற ஒரு ஏக்கர் நிலத்தை ஜெயபால் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து சம்பாதிக்க ஆரம்பிச்சார். அதனால் அவர்மேல எங்களுக்கு இன்னும் கோபம் அதிகமாச்சி.
அந்தப் பிரச்னைலதான் நாலு மாசத்துக்கு முன்னாடி எங்களுக்குள்ள தகராறு ஏற்பட்டது. அப்போ ஜெயபாலையும், அவரு பொண்டாட்டி ராஜியையும் நான் அடிச்சேன்.
அடிக்கடி எங்களுக்குள்ள வர்ற பிரச்னைக்கெல்லாம் போலீஸ்கிட்ட போய் புகார் கொடுப்பாரு. எங்களுக்குள்ள எப்ப பிரச்னை வந்தாலும் ஜெயபாலோட பெரிய பொண்ணு ஜெயஸ்ரீ எங்களை திட்டும். அதனால எங்களுக்கு அந்தப் பொண்ணு மேலயும் கோபம் அதிகமாச்சு.
ரெண்டு நாளைக்கு முன்னாடிகூட அவங்க பெட்டிக் கடையில நடந்த சண்டைக்கு நாங்கதான் காரணம்னு, போலீஸ்ல கம்ப்ளெயின்ட் கொடுக்கப் போனாங்க.
அந்த சமயத்துல ஜெயபால் வீட்டுக்குப் போயி பெட்டிக்கடையில இருந்த ஜெயஸ்ரீயின் வாயில் துணியை வைத்து அழுத்தி வீட்டுக்குள்ள இழுத்துக்கிட்டுப் போனோம்.
அங்க கை, கால்களை துணியாலேயே கட்டி அங்க இருந்த மண்ணெண்ணெயை அந்தப் பொண்ணு மேல ஊத்தி உயிரோட கொளுத்திட்டு வந்துட்டோம்” என்று கூற, அதிர்ச்சியடைந்துள்ளனர் போலீஸார்.