கொரோனா வார்டில் பெண் நர்ஸ் ஒருவர் உள்ளாடை மட்டும் அணிந்து பணிபுரிந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரஷியாவில் கடந்த சில தினங்களாக தினந்தோறும் சராசரியாக 10 ஆயிரம் பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அங்கு பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்தை தொட உள்ளது.

ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து 100 மைல் தூரத்தில் உள்ள நகரம் துலா. இங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அந்த மண்டலத்திற்கான அரசு மருத்துவமனை உள்ளது.

இந்த மருத்துவமனையில் ஆண்கள் சிகிச்சை பெறுவதற்கான தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 20 வயது இளம்பெண் ஒருவர் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஆண் நோயாளிகளுக்கு மருந்து அளிக்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

நோயாளிகளிடம் இருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க டாக்டர்கள், நர்ஸ்கள் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) அணிந்துதான் பணிபுரிகிறார்கள். இதை சரியாக பயன்படுத்த தவறினால் கூட கொரோனா தொற்றிற்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படும். PPE-யை அணிந்தால் சுமார் 6 மணி நேரத்திற்கு அதை கழற்ற முடியாத கஷ்டமும் உள்ளது.

பெரும்பாலான PPE-க்கள் கண்ணாடி இழை போன்றுதான் இருக்கும். உள்ளே அணியும் உடைகள் வெளியே தெளிவாக தெரியும். அந்த இளம் நர்ஸ், நர்ஸ்க்கான உடை அணிந்து அதன்மீது PPE-யை அணிந்தால் அசௌகரியமாக இருக்கும். அதேவேளையில் வெப்பம் அதிகமாகி வியர்க்கும் எனக்கருதி உள்ளாடைகளை மட்டும் போட்டுக்கொண்டு அதன்மேல் PPE-யை அணிந்து பணிபுரிந்துள்ளார்.

நர்ஸ் அப்படி செல்லும்போது PPE-யை தாண்டி உடல் அப்பட்டமாக வெளியே தெரியும் என அவர் அறிந்திருக்கவில்லை. நோயாளிகள் இதுகுறித்து புகார் ஏதும் செய்யவில்லை. இந்தப்படம் எப்படியோ வெளியில் கசிந்து வைரலாகி வருகிறது.

ஆனால், நர்ஸ் அவர்களுக்கான ஆடைகளை கட்டாயம் அணிந்து வேலை செய்ய வேண்டும். அதை செய்யத் தவறிய அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. டுலா பகுதியில் 2,637 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

Share.
Leave A Reply