17ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் சக்திமிக்க பெண்ணாக பேரரசி நூர் ஜஹான் விளங்கினார். பரந்து விரிந்த முகலாய பேரரசின் வரலாற்றில் நூர் ஜஹான் முன்னெப்போதும் இல்லாத பாணியில் ஆட்சியை குறிப்பிடத்தக்க வகையில் நடத்தினார்.
அவரது தலைமைத்துவம் இன்றைய காலத்தில் நினைத்து பார்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை வரலாற்றாசிரியர் ரூபி லால் விளக்குகிறார்.
இவர் பிறந்தபோது பெற்றோர் வைத்த பெயர் மிஹர் உன்-நிசா என்றாலும், திருமணத்திற்கு பிறகு அவரது கணவரும், முகலாய பேரரசருமான ஜஹாங்கிர் வைத்த நூர் ஜஹான் (உலகின் வெளிச்சம்) என்ற பெயர்தான் வரலாற்றில் இடம்பிடித்தது.
பிரிட்டிஷ் இளவரசி முதலாம் எலிசபெத் பிறந்த சில தசாப்தகாலத்திற்கு பிறகே இவர் பிறந்தாலும், எலிசபெத்தை காட்டிலும் மிகவும் பரந்த நிலப்பரப்பை ஆட்சி செய்தார்.
16ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியில் ஆட்சியை பிடித்த முகலாயர்கள் 300 ஆண்டுகளுக்கு மேல் இந்திய துணைக்கண்டத்தை ஆட்சி செய்தார்கள்.
இது இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த ராஜ வம்சங்களில் ஒன்றாக விளங்கியது. முகலாய பேரரசர்களும், நூர் ஜஹான் உள்ளிட்ட பேரரசிகளும் தங்களது ஆட்சி காலத்தில் கலை, இசை மற்றும் கட்டிடக்கலைக்கு ஆதரவாளர்களாக இருந்ததுடன், பெரும் நகரங்கள், கம்பீரமான கோட்டைகள், மசூதிகள் மற்றும் கல்லறைகளையும் கட்டினார்கள்.
குறிப்பாக முகலாய பேரரசின் ஒரே பெண் ஆட்சியாளராக விளங்கிய நூர் ஜஹானின் பெயர் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தின் கலை, கலாசாரம் மற்றும் கட்டட கலைத்துறையில் இன்றும் நிலைத்து நிற்கிறது.
முகலாய பேரரசின் ஆட்சிக்காலத்தின்போது முக்கியத்துவம் பெற்ற நகரங்களாக விளங்கிய வட இந்தியாவின் ஆக்ராவிலும், பாகிஸ்தானின் லாகூரிலும் உள்ள அவர்களது கோட்டைகள், நினைவுச்சின்னங்களுக்கு அருகிலுள்ள இடங்கள் ஆகியவற்றில் நூர் ஜஹான் ஆட்சி பற்றிய பல்வேறு தகவல்கள் நிரம்பியுள்ளன.
வயதான ஆண்களும், பெண்களும், சுற்றுலா வழிகாட்டிகளும், வரலாற்றில் ஆர்வமுள்ளவர்களும் நூர் ஜஹானும், ஜஹாங்கிரும் எப்போது சந்தித்தார்கள், எப்படி காதலில் விழுந்தார்கள் என்பது குறித்த கதைகளை கூறுவதுண்டு; அதுமட்டுமில்லாமல், ஒரு கிராமத்தையே அச்சத்தில் ஆழ்த்திய மனிதனை சாப்பிடும் புலியை நூர் ஜஹான் எப்படி யானையொன்றின் மீதமர்ந்துக்கொண்டே சுட்டுக்கொன்றார் என்ற கதைகளும் ஆச்சர்யத்தை உண்டாக்கக்கூடியது.
நூர் ஜஹானின் காதல் பற்றியும், எப்போதாவது அவரது துணிவு பற்றிய கதைகளை மக்கள் கேட்டிருந்தாலும், அவரது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க அம்சமாக விளங்கிய அரசியல் புத்திசாலித்தனம் மற்றும் சக்தி வாய்ந்த செயல்கள் பற்றி சிறிதளவே அறியப்பட்டுள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், அசாதாரண முரண்பாடுகளுக்கு எதிராக ஒரு பேரரசை ஆட்சி புரிய வந்த ஒரு திறமைவாய்ந்த பெண்ணாக அவர் விளங்கினார்.
நூர் ஜஹான் ஒரு ஆட்சியாளராக மட்டுமல்லாமல், கவிஞராகவும், வேட்டையாடுவதில் வல்லமை வாய்ந்தவராகவும், கட்டட கலையில் புதுமைமிக்கவராகவும் விளங்கினார்.
ஆண்களின் ஆதிக்கத்தின் கீழ் ஒட்டுமொத்த உலகமும் இருந்தபோது குறிப்பிடத்தக்க ஆட்சியாளராக விளங்கிய நூர் ஜஹான், அரச குடும்பத்திலிருந்து வந்தவரல்ல. இருந்தபோதிலும் பல்வேறு விடயங்களில் தனக்கிருந்த அபார திறமைகளை ஒருங்கே பயன்படுத்தி முகலாய பேரரசரை மணம் புரிந்ததோடு மட்டுமல்லாமல், அவரது விருப்பதிற்குரியவாகவும். தந்திரமுள்ள ஆட்சியாளராகவும் செயல்பட்டு பரந்து விரிந்த முகலாய பேரரசை கட்டிக்காத்தார்.
பெரும்பாலும் பெண்கள் வீட்டிற்குள் முடங்கியிருந்த காலத்தில் வாழ்ந்த நூர் ஜஹானால் மட்டும் எப்படி ஒரு சக்திவாய்ந்த பெண்ணாக மட்டுமல்லாமல், திறம்வாய்ந்த ஆட்சியாளராக உயர முடிந்தது?
இந்த கேள்விக்கான பதிலை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், நூர் ஜஹானின் வளர்ப்பு, அவருக்கு வாழ்கை முழுவதும் பல நிலைகளில் துணையாக நின்ற ஆண்கள்-பெண்கள், ஜஹாங்கிருடனான உறவு, அவரது லட்சியம், பிறந்து வளர்ந்த நிலம்-மக்கள் குறித்து நிறைய தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
பன்மைத்துவதும், செல்வம் மற்றும் சகிப்புத்தன்மை நிறைந்த கலாசாரத்துடன், சிந்து நதிக்கு அப்பால், பல்வேறுபட்ட உணர்வுகளும், மதங்களும், பாரம்பரியமும் கொண்டவர்கள் ஒருங்கே வாழ்ந்த அல்-ஹிந்த் என்ற அந்த நிலப்பகுதி, அரேபியர்களாலும், பாரசீகர்களாலும் வட இந்தியா என்றழைக்கப்பட்டது.
தற்போதைய ஆப்கானிஸ்தானிலுள்ள காந்தகார் என்ற பகுதியில் கடந்த 1577ஆம் ஆண்டு நூர் ஜஹான் பிறந்தார். இரானில் வாழ்ந்த பிரபல பாரசீக பிரபுக்களான அவரது பெற்றோர், அப்போது அந்நாட்டை ஆட்சிசெய்த சபாவித் வம்சத்தில் சகிப்புத்தன்மையற்ற நிலை அதிகரித்த வண்ணம் இருந்ததால், தாராளவாத கொள்கையை அடிப்படையாக கொண்ட முகலாய பேரரசுக்கு அகதிகளாக சென்றனர்.
அபார வளர்ச்சி
தனது பெற்றோரின் நிலப்பகுதி மற்றும் அவர்கள் அகதிகளாக வந்த முகலாய நிலப்பகுதி என இருவேறு நிலப்பகுதிகளின் கலவையான கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் வளர்ந்த நூர் ஜஹான், 1594ஆம் ஆண்டு முகல் பேரரசை சேர்ந்த அதிகாரியும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகு கிழக்கிந்திய பிராந்தியமான வங்காளத்திற்கு தனது கணவருடன் குடிபெயர்ந்த ஜஹான், தனது முதல் மற்றும் ஒரேயொரு குழந்தையை பெற்றெடுத்தார்.
ஜஹாங்கிருக்கு எதிராக திட்டமிடப்படும் சதித்திட்டத்தில் பங்காற்றுவதாக சந்தேகிக்கப்பட்ட நூரின் கணவரை ஆக்ராவிலுள்ள முகலாய பேரரசின் நீதிமன்றத்திற்கு அழைத்து வருமாறு வங்காள ஆளுநருக்கு பேரரசர் உத்தரவிட்டார். ஆனால், ஆளுநரின் வீரர்களுடன் நடந்த சண்டையில் நூரின் கணவர் கொல்லப்பட்டார்.
விதவையான நூருக்கு ஜஹாங்கிரின் அரண்மனையில் அடைக்கலம் கொடுக்கப்பட்டது. படிப்படியாக அங்குள்ள மற்ற பெண்கள் நூரை நம்பவும், மதிக்கவும் ஆரம்பித்தனர். 1611ஆம் ஆண்டு ஜஹாங்கிரின் 20வது மற்றும் கடைசி மனைவியானார் நூர் ஜஹான்.
முகலாய பேரரசின் அதிகாரபூர்வ பதிவேடுகளில், அதே காலகட்டத்தில் பல பெண்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், 1614ஆம் ஆண்டு முதலான ஜஹாங்கிரின் நினைவுகளில் நூர் சிறப்பிடம் பெறத் தொடங்கினார்.
உணர்ச்சி மிகுந்தவர், ஒரு சிறந்த பராமரிப்பாளர், திறமையான ஆலோசகர், திறமையான வேட்டைக்காரர், தூதர் மற்றும் கலை காதலி போன்ற பலதரப்பட்ட நற்பெயர்களை ஜஹாங்கிரின் மனதில் நூர் விதைத்தார்.
நோய்வாய்ப்பட்ட குடிகாரனாகவும், தொடர்ந்து ஆட்சிசெய்வதற்குரிய உறுதித்தன்மையும், கவனமும் இல்லாமல் போனதனால்தான் ஜஹாங்கிர் தனது பேரரசின் ஆட்சி மற்றும் நிர்வாக பொறுப்புகளை நூர் ஜஹானிடம் ஒப்படைத்ததாக பல வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். ஆனால், அது முற்றிலும் உண்மையல்ல.
பேரரசர் ஜஹாங்கிர் குடிக்கும், ஓபியத்துக்கும் அடிமையானவர் என்பது உண்மைதான். ஆனால், அவர் தனது மனைவி மீது ஆழ்ந்த காதலை கொண்டிருந்தார் என்பதும் மறுக்க முடியாத உண்மையே.
நூர் மற்றும் ஜஹாங்கிர் ஒருவருக்கொருவர் பரிபூரணமாக இருந்தனர். மேலும், பேரரசர் தனது மனைவியின் வளர்ச்சியுற்ற செல்வாக்கு இணை-இறையாண்மைக்கு சங்கடமாக இருக்கும் என்று ஒருபோதும் எண்ணியதில்லை.
ஜஹாங்கிருடன் திருமணமான சிறிது காலத்திலேயே, ஊழியர் ஒருவரின் நிலவுரிமையை பாதுகாக்கும் தனது முதல் உத்தரவை நூர் ஜஹான் வழங்கினார். அவரது கையெழுத்தில், நூர் ஜஹான் பஷாஹ் பேகம், அதாவது நூர் ஜஹான், பேரரசி என்று எழுதப்பட்டிருந்தது.
அது இறையாண்மையின் அடையாளமாகவும், அவரது அதிகாரம் வளர்ந்து கொண்டிருப்பதற்கான அறிகுறியாகவும் விளங்கியது.
1617ஆம் ஆண்டுவாக்கில் ஒருபுறம் ஜஹாங்கிரும், எதிர்புறம் நூர் ஜஹானின் பெயரும் பொறிக்கப்பட்ட தங்க, வெள்ளி நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டன.
நீதிமன்ற வரலாற்றாளர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், வணிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் வெகுவிரைவில் நூர் ஜஹானின் தனிப்பட்ட அந்தஸ்து குறித்து கவனிக்கத் தொடங்கினர்.
ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் பேரரசின் பால்கனி ஒன்றில் வந்து நின்று நூர் ஜஹான் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சம்பவம் குறித்து அரசவையை சேர்ந்த ஒருவர் குறிப்பு ஒன்றில் விவரித்துள்ளார்.
நூர் ஜஹான் இதுபோன்ற பல்வேறு வரம்பு மீறிய செயல்களை செய்து பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
வேட்டையாடுவதாக இருக்கட்டும், உத்தரவுகளை பிறப்பிப்பதாக இருக்கட்டும், பொது கட்டடங்களை கட்டுவது, வறிய நிலையிலுள்ள பெண்கள் உள்ளிட்ட நசுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதாக இருக்கட்டும், அக்காலத்தில் வாழ்ந்த பெண்களுடன் ஒப்பிடுகையில் தான் செய்த அனைத்து செயல்களிலும் நூர் ஜஹான் அசாதாரணமான பெண்ணாக விளங்கினார்.
பேரரசர் சிறைவைக்கப்பட்டபோது அவரை காப்பற்றுவதற்காக பேரரசின் ராணுவத்தையே வழிநடத்திய நூர் ஜஹானின் துணிச்சல் நிரம்பிய செயல்பாடு அவரது பெயரை பொதுமக்களின் கற்பனையிலும், வரலாற்றிலேயும் அழியா இடத்தை பிடிக்க வைத்தது.
வரலாற்றாசிரியரான ரூபி லால் அமெரிக்காவிலுள்ள எமோரி பல்கலைக்கழகத்தில் கற்பிக்கிறார். இவர் எழுதிய எம்ப்ரெஸ்: தி அஸ்டோனிஷிங் ரெய்ங் ஆஃப் நூர் ஜஹான் (Empress: The Astonishing Reign of Nur Jahan) என்ற புத்தகத்தை பதிப்பித்தார்.