இறுதிக்கட்டப் போரில் மனித உரிமை மீறல்களிலும், சட்டவிரோத தடுத்துவைப்புக்களிலும், சித்திரவதைகளிலும் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு ஜனாதிபதியினால் தொடர்ந்தும் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டு வருவதாக சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள இராணுவ வீரர்களுக்குத் தொடர்ந்தும் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவற்றைத் தாம் கடுமையாகக் கண்டனம் செய்வதாகவும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தொடர்ச்சியாகக் குறிப்பிட்டுவருகிறது.

இந்நிலையில் ‘இன்னமும் தொடரும் சர்ச்சைக்குரிய இராணுவப் பதவியுயர்வுகள்’ என்ற தலைப்பில் இன்று திங்கட்கிழமை அச்செயற்திட்டத்தினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 2009 ஆம் ஆண்டில் தமிழ் வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் இராணுவப் புலனாய்வுப்பிரிவு அதிகாரி டுவான் சுரேஷ் சாலேயை மேஜர் ஜெனரலாக ஜனாதிபதி பதவியுயர்த்தியிருக்கிறார்.

‘வைத்தியர் துரைராஜா வரதராஜா 2009 ஆம் ஆண்டில் யுத்த வலயத்தில் பணியாற்றிய ஓர் அரச வைத்தியர் என்பதுடன், போர் முடிவடைந்த பின்னர் சுமார் 100 நாட்கள் வரையில் அவர் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

இத்தகைய முறையற்ற தடுத்துவைப்பு மற்றும் மனிதாபிமானமற்ற சித்திரவதைகள் என்பன சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்திற்கு முற்றிலும் முரணானவையாகும். அவர் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றிய ஒரு தைரியமான வைத்தியராவார்.

அவருக்குப் பதக்கம் அணிவித்து கௌரவிக்க வேண்டுமே தவிர, இவ்வாறு தடுத்துவைத்தமை ஏற்புடையதன்று’ என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தற்போது வைத்தியர் துரைராஜா ஐக்கிய அமெரிக்காவில் கொவிட் – 19 கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பணியில் ஈடுபட்டுவருவதுடன், அவர் தனக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளுக்குப் பொறுப்பான முன்னாள் இராணுவப் புலனாய்வுப்பிரிவின் அதிகாரியாக சுரேஷ் சாலேயை அடையாளங்காட்டியிருக்கிறார்.

சுரேஷ் சாலே தம்மை நீண்டகாலமாக அச்சுறுத்தியதாகக் கூறியிருக்கும் வைத்தியர், அப்போதைய பாதுகாப்புச் செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷவின் கட்டளையின் பிரகாரமே இவற்றைத் தாம் செய்ததாக சுரேஷ் சாலே குறிப்பிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

யுத்த வலயத்தில் சேவையாற்றிய வைத்தியர்கள் அங்கு இடம்பெற்ற மரணங்கள் தொடர்பில் ஊடகங்களுக்குத் தகவல்களை வழங்குபவர்களாக இருப்பார்கள் என்பதனாலேயே அவர்கள் இலக்குவைக்கப்பட்டனர்.

அதேபோன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராகக் கடந்த வாரம் பிரசன்ன டி அல்விஸ் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இவரும் போர்க்கால சித்திரவதைகளுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவராவார். அதுமாத்திரமன்றி பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைதொடர்பிலும் பிரசன்ன டி அல்விஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

‘நெடுங்காலமாகப் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றியதுடன், குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானபோது ஒருவரையொருவர் காப்பாற்றிக்கொண்டவர்கள் தற்போது ஜனாதிபதியினால் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்’ என்று இதுகுறித்து யஸ்மின் சூக்கா விசனம் வெளியிட்டிருக்கிறார்.

Share.
Leave A Reply