அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர், போலீஸ் பிடியில் இருந்தபோது கழுத்து நெறித்து கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்கா முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் ஏழாவது நாளாக தொடர்கின்றன.
பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோதும் அதை மீறி ஏராளமான மக்கள் இந்த மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை அருகே உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவாலயத்துக்கு செல்வதற்காக அருகே அமைதியான முறையில் போராடிக்கொண்டிருந்த போராட்டக்காரர்கள் அதிபர் உத்தரவின் பேரில் கண்ணீர் புகை குண்டுகள், தீக்குண்டுகள் உள்ளிட்டவை வீசி கலைக்கப்பட்டதற்காக அதிபர் டிரம்ப் விமர்சிக்கப்படுகிறார்.
அந்த புகழ் பெற்ற தேவாலயத்தின் முன் நின்றபடி பைபிளைத் தூக்கிக் காட்டி போஸ் கொடுத்தார் டிரம்ப். பிளடல்பியா சிட்டி ஹாலில் பேசிய அதிபர் தேர்தல் போட்டியாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பைடன், டிரம்ப் “பைபிளை தூக்கிக் காட்டியதற்குப் பதில் அதைத் திறந்து படித்திருந்தால் எதையாவது கற்றிருக்கலாம்” என்று குறிப்பிட்டார்.
கொல்லப்படுவதற்கு முன்பு, ஃப்ளாய்டு பேசிய வாக்கியமான “என்னால் சுவாசிக்க முடியவில்லை” என்ற வார்த்தையைப் பேசிய பைடன் இந்த சொற்கள் நாடு முழுவதும் எதிரொலிப்பதாக கூறினார்.
கொள்கையைவிட அதிகாரத்திலேயே அதிபர் டிரம்ப் அக்கறை கொண்டிருப்பதாக குற்றம்சாட்டிய பைடன், அதிபர் தமது கடமையான மக்கள் மீது அக்கறை காட்டுவது என்பதைக் கைக்கொள்ளாமல், தமது ஆதரவாளர்களின் உணர்வுகளுக்கு தீனி போடுவதிலேயே குறியாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
இதனிடையே போராட்டக்காரர்களுக்கு முட்டி போட்டு ஆதரவு தெரிவித்த நியூயார்க் போலீஸ் துறைத் தலைவர் டெரன்ஸ் மோனஹன் தங்கள் போலீஸ் படையில் இனவெறி செயல்படுவதாக கூறுவதை ஏற்கமுடியாது என்று தெரிவித்தார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் இப்படித் தெரிவித்தார். இனவாத சம்பவம் நடந்திருக்கலாம். ஆனால் அதற்குக் காரணமானவர் இந்த துறையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால், போலீஸ் துறையையே இனவாத போலீஸ் துறை என்று கூறுவதை ஏற்கமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் காவல் மரணத்தை தொடர்ந்து நடக்கும் போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
செயிண்ட் லூயிஸ் நகரில் நான்கு காவல் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என அந்நகர காவல் துறை தெரிவித்துள்ளது.
அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனினும் உயிராபத்தை உண்டாக்கும் காயங்கள் அவர்களுக்கு உண்டாகவில்லை.
கலிஃபோர்னியா கடலோரப் பகுதிகளில் இருக்கும் சான் பிராசிஸ்கோ, சான் ஜோஸ், சாண்டா கிளாரா, ஓக்லேண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கை மீறி போராட்டங்கள் நடக்கின்றன.
அப்பகுதிகளில் வன்முறைச் சம்பவங்களும் சூறையாடல்களும் நடந்துள்ளன.
மினசோட்டா தலைநகர் மினியாபொலிஸில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணமடைந்த சதுக்கத்தில் பல்லாயிரம் போராட்டக்காரர்கள் கூடியுள்ளனர்.
ஜார்ஜ் ஃப்ளாயிட் மரணத்தை தொடர்ந்து நடக்கும் போராட்டங்களின்போது வன்முறை ஏற்பட்டுள்ளதாக சியாட்டில் நகர காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல் அதிகாரிகளை நோக்கி கற்கள், பாட்டில்கள், பட்டாசுகள் ஆகியவை வீசப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வெடிச்சத்தங்களும், கண்ணீர் புகைக்குண்டு பயன்படுத்தப்பட்டதால்தால் உண்டான புகை மூட்டமும் எங்கும் காண முடிகிறது என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கை மீறி போராட்டங்கள் நடந்தாலும், அது தொடர்ந்து அமைதியான முறையில் இருப்பதாக போர்ட்லேண்ட் நகர காவல்துறை தெரிவித்துள்ளது.
வால்நட் க்ரீக் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் பெண் போராட்டக்காரர் ஒருவர் சுடப்பட்டார்.
காரில் வந்த நபர் சுட்டுவிட்டு தப்பிவிட்டதாகக் காவல்துறை தெரிவிக்கிறது.
படத்தின் காப்புரிமை Getty Images
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணம் ஒரு கொலை என அதிகாரப்பூர்வ பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹென்னெபின் கவுண்டி மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், இறந்தவரின் உடலில் இதய நோய் மற்றும் சமீபத்திய போதைப்பொருள் பயன்பாடு ஆகியவை கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.