சமூக ஊடகமான ஃபேஸ்புக்கில் “நைஜீரிய பெண் விற்பனைக்கு” என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்த 30 வயதாகும் பெண் லெபனானிலிருந்து மீண்டும் நைஜீரியாவுக்கு வரவிரும்பவில்லை என கூறியுள்ளதாக நைஜீரிய புலம்பெயர்ந்தோருக்கான ஆணையம் தெரிவித்துள்ளது.

லெபனானில் ஃபேஸ்புக் மூலம் ”நைஜீரிய பெண் விற்பனைக்கு” என்ற விளம்பரம் மார்ச் மாதம் பதிவிடப்பட்டது. இந்த விளம்பரத்தால் நைஜீரியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விளம்பரத்தில் அந்த பெண்ணின் புகைப்படமும் பதிவிடப்பட்டிருந்தது. இதை பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.

சில நாட்களுக்கு பிறகு இதை பதிவு செய்தவரும் கைது செய்யப்பட்டார்.

ஆயிரம் டாலருக்கு விற்கப்பட்ட அந்த பெண் லெபனானில் சில அதிகாரிகளால் மீட்கப்பட்டு பெயிரூட்டில் இருக்கும் நைஜீரிய தூதரகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டார்.

மீட்கப்பட்ட நைஜீரிய பெண் தனக்கு லெபனானிலேயே ஒரு நல்ல வேலை கிடைத்துவிட்டதாகக்கூறி நைஜீரியா கிளம்ப மறுக்கிறார்.

நைஜீரிய புலம்பெயர்ந்தோருக்கான ஆணையத்தின் தலைவர் அபிக்கே தப்பிரி-ஈரிவா அவரை தாய்நாட்டிற்கே திரும்பி வரும்படி கூறியபோது அவர் அதை மறுத்துவிட்டார்.

பெண்ணை விற்க ஃபேஸ்புக் விளம்பரம் – மீட்கப்பட்டது எப்படி?

அவர் சார்ந்த ஒயோ மாநிலத்தின் அரசு செயலாளர் அவருடன் பேசியபோதுகூட அவர் அதை மறுத்துவிட்டார். நைஜீரியாவிலிருந்து லெபனானுக்கு வந்து வேலை செய்பவர்கள் அடிமைகளாக நடத்தப்பட மாட்டார்கள் என நம்புகிறோம் என்கிறார் அபிக்கே தப்பிரி.

மேலும் அவர், 79 நைஜீரிய குடிமக்களில் 69 பேரை லெபானான் அரசு மீட்டுள்ளது. இப்போது அந்த 69 பேரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு லெபனானில் வீட்டு வேலைக்காக வரும் நைஜீரியர்களுக்கு விசா வழங்குவதை லெபனான் தூதரகம் நிறுத்தியுள்ளது.

நைஜீரியா மற்றும் பல ஆஃப்ரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் ஆண்டுதோறும் கடத்தப்படுகின்றனர்.

ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றப்படுகின்றனர். ஆனால் பெரும்பாலும் இவர்களை வீட்டு வேலைகள் மேற்கொள்ளும் கொத்தடிமைகளாகவும் கட்டாயமாகப் பாலியல் தொழிலில் ஈடுபடவும் தள்ளப்படுகின்றனர்.

கடந்த ஆண்டு குவைத்தில் பிபிசி அரபி மொழி செய்தி சேவை மேற்கொண்ட விசாரணையில், கள்ளச் சந்தைகளில் வீட்டு வேலைகளுக்காக பல பெண் ஊழியர்கள் இணையம் மூலம் விற்கப்படுவது தெரியவந்தது.

Share.
Leave A Reply