மிருசுவில் படுகொலை குற்றவாளியான சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ அதிகாரி, பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பாக கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாக எழுப்பப்பட்டு வந்த கேள்விகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதிலளித்திருக்கிறார்.

மார்ச் 26ஆம் திகதி ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்ட சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அந்த விடுதலைக்கு எதிராக, தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் எல்லாம் கருத்துக்களையும் அறிக்கைகளையும் வெளியிட்டன.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரமுகர்களும் கூட, ஜனாதிபதியின் நடவடிக்கையை கடுமையான விமர்சித்திருந்தனர்.

ஆனாலும், உடனடியாக எந்தவொரு எதிர்க் கருத்துக்கும் ஜனாதிபதி தரப்பில் இருந்து பதிலளிக்கப்படவில்லை.

சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க எதற்காக பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்கப்பட்டார் என்பதற்கும், ஜனாதிபதி தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்படவில்லை.

கொரோனா தொற்று பரவத் தொடங்கியிருந்த சூழலில், அதுபற்றிய பரவலான செய்திகளுக்கு மத்தியில், சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க விடுவிக்கப்பட்ட விவகாரம் சற்று அமுங்கிப் போனது.

ஆனாலும் சர்வதேச அளவில், இந்த விடுதலைக்கு எதிராக கிளம்பிய எதிர்ப்புகள் அல்லது கண்டனங்களை, அரசாங்கம் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

யார் எதைச் சொன்னாலும் அதற்கு பதிலளிப்பதில்லை, என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்து வந்தது அரசாங்கம்.

எனினும், இரண்டு மாதங்களுக்குப் பின்னர், பிறிதொரு விவகாரத்தில் ஜனாதிபதி செயலகத்தினால் அனுப்பப்பட்டுள்ள கடிதம் ஒன்றில் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவின் விடுதலை நியாயப்படுத்தப்பட்டிருக்கிறது.

அரசியலமைப்பில் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படியே, தாம் இந்த விடுதலையை செய்ததாக, தி ஹிந்து நாளிதழுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

மே 19ஆம் திகதி போர் வீரர்கள் நாளை முன்னிட்டு. படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டதை விமர்சித்து எழுதப்பட்டிருந்த கட்டுரைக்கு பதிலளித்து ஜனாதிபதி செயலகத்தினால் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் மேலும் சில விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன.

 உள்நாட்டுப் போர்களின் போது, பொதுமக்கள் கொல்லப்படுவது இயல்பு தான்.

 போர்க்குற்றங்கள் நிகழ்ந்தன என்பதற்கு எந்த நம்பத்தகுந்த ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை.

 இராணுவத் தளபதிக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் அநீதியானது.

 இறுதிப்போரில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐ.நா கூறியது வெறும் கணிப்பு மட்டும் தான்.

 போரின் முடிவில் சரணடைந்த 14,500 விடுதலைப் புலிகள் எந்த வழக்கு விசாரணையும் இல்லாமல் விடுவிக்கப்பட்ட நிலையில், சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட்டது அநீதியானது அல்ல.

 போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

இவ்வாறான விடயங்களை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தனது செயலகத்தின் மூலம் வெளியிட்டிருக்கிறார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இப்போது பல்வேறு சர்ச்சைக்குரிய விவகாரங்களில் நேரடியாக கருத்து வெளியிடுவதை விட, தனது செயலாளர் மூலமாகவோ, ஜனாதிபதி செயலக ஊடக அறிக்கை மூலமோ தான், அதனைக் கையாளுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்.

ஒரு வகையில் இது, தற்காப்பான நிலையில் இருந்து கொண்டு ஆடுகின்ற ஆட்டம் என்று கூறலாம். சர்வதேச அளவில் எதிர்ப்புகள், விமர்சனங்கள் வெளிப்படுத்தப்படுகின்ற போது, அதற்கு எதிராக கருத்துக்களை முன்வைப்பதால், ஏற்கனவே சர்வதேச அளவில் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் அரசாங்கத்தை வீண் சிக்கலில் மாட்டி விடும்.

எனவே தான், சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க விவகாரத்தில் கிளம்பிய எதிர்ப்புகளுக்கு உடனடியாகப் பதிலளிக்காமல், பொறுமையாக காத்திருந்து பதில் கொடுத்திருக்கிறார் ஜனாதிபதி.

சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவை விடுதலை செய்த விவகாரத்தில், இரண்டு விடயங்கள் ஜனாதிபதியினால் கூறப்பட்டுள்ளது.

ஒன்று- நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள்.

இரண்டு- 14,500 விடுதலைப் புலிகளை விடுவித்துள்ள நிலையில், இந்த விடுதலை அநீதியானது அல்ல என்ற நியாயப்படுத்தல்.

முதலில், தனது அதிகாரத்தின் மூலம் அந்த உத்தரவைப் பிறப்பித்ததாக கூறும் ஜனாதிபதி, அதற்குப் பின்னர், புலிகளை விடுதலை செய்த நிலையில், இவரை விடுவித்தது அநீதியானதல்ல என்று நியாயப்படுத்தியிருக்கிறார்.

ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் உள்ளது. அரசியலமைப்பின் படி அதிகபட்ச அதிகாரங்கள் ஜனாதிபதிக்குத் தான் வழங்கப்பட்டிருக்கின்றன.

அதனைப் பயன்படுத்தியே அந்த விடுதலையும் அளிக்கப்பட்டது. ஆனால் ஜனாதிபதி நினைத்த மாத்திரத்தில், அரசியலமைப்பில் உள்ள அதிகாரங்கள் எல்லாவற்றையும் பயன்படுத்தி விட முடியாது.

அரசியலமைப்பில் கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் அனைத்தும் பயன்படுத்தக் கூடியவை அல்ல. அதற்கன சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

போர்ப் பிரகடனம் செய்யும் அதிகாரம் கூட, ஜனாதிபதியிடம் இருக்கிறது. அதற்காக அண்டை நாடுகளின் மீது போரைத் தொடுக்க முடியாது, அந்த அதிகாரத்தை ஜனாதிபதி பயன்படுத்துவதற்கு என்று ஒரு சூழல் இருக்கிறது.

சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க விடுதலை செய்யப்பட்ட விடயத்தில், அவ்வாறானதொரு சூழல் ஏற்படவில்லை. 2009இல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போரில், இடம்பெற்ற மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும், அதில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் தமிழர்கள் 11 ஆண்டுகளாக போராடுகின்ற நிலையில், அவ்வாறான ஒரு மீறல் சம்பவத்தில் ஈடுபட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒருவரையும் கூட பொதுமன்னிப்பில் விடுவித்திருப்பது அபத்தமான செயல்.

அதிகாரம் கையில் உள்ளது என்பதை வைத்துக் கொண்டு, ஜனாதிபதி தனது தீர்மானத்தை எடுத்திருக்கிறார். அதனை செயற்படுத்தியிருக்கிறார்.

அதற்கு அப்பால் அவ்வாறான ஒரு செயலுக்கு பொருத்தமான சூழல் உள்ளதா என்பதை அவர் கருத்தில் கொள்ளவில்லை. இந்தநிலையில் தான், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, 14,500 விடுதலைப் புலிகளை விடுவித்த நிலையில், இவரது விடுதலை ஒன்றும் அநீதியானதல்ல என்று குறிப்பிட்டிருக்கிறார். 14,500 விடுதலைப் புலிகளை அரசாங்கம் புனர்வாழ்வுக்குட்படுத்தி விடுதலை செய்ததாக கூறினாலும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க பெரும்பாலும் ஆதாரங்கள் இருக்கவில்லை என்பதே உண்மை.

ஏற்கனவே பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் கூட, ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

எனவே, 14,500 விடுதலைப் புலிகளை விடுவித்ததற்கும், சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க விவகாரத்துக்கும் போடப்படும் முடிச்சு மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் போடப்படுவதற்கு ஒப்பானது.

சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க 8 பொதுமக்களை படுகொலை செய்த வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரணதண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்டவர்.

அவருக்கு அளிக்கப்பட்ட பொதுமன்னிப்பையும், 14,500 விடுதலைப் புலிகள் விடுவிக்கப்பட்டதையும் ஒரே தராசில் எடைபோட முடியாது. அரசியல் கைதிகளில் பலர் தண்டனை பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

அவர்களில் எவரையாவது விடுவித்து விட்டு, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க விடுவிக்கப்பட்டிருந்தால் தமிழர் தரப்பு வாயை மூடிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

ஆனால், ஆனந்தசுதாகரன் போன்றவர்களுக்கே பொதுமன்னிப்பு வழங்காமல் இழுத்தடிக்கும் அரசாங்கம், விடுதலைப் புலிகளை விடுவித்ததற்கும், சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க விடுவிக்கப்பட்டதற்கும் இடையில், முடிச்சுப் போடுவது அபத்தமான அரசியல் நாடகம்.

Share.
Leave A Reply