கால்வன் பள்ளத்தாக்கு, அக்சய் சீனா, காலாபானி, லிபுலேக், நிரந்தரக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் மெய்யான கட்டுப்பாடு கோடு. இந்தியா-சீனா, இந்தியா-நேபாளம் அல்லது இந்தியா-பாகிஸ்தான் எல்லை தகராறு தொடர்பான செய்திகளில் இந்த வார்த்தைகளை அடிக்கடி நாம் கேட்கிறோம்.

அண்மையில், லிபுலேக் மற்றும் காலபானி தொடர்பாக நேபாளத்துடனான எல்லை பிரச்சனையின் சூடு தணிவதற்குள், சீனாவின் எல்லையில் இரு நாட்டு வீரர்களிடையே வன்முறை மோதல் ஏற்பட்டது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டில் மோதல் நடந்ததாக கூறப்படுகிறது.

எனவே இந்தியாவின் சர்வதேச எல்லை, கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு என்ற வார்த்தைகளின் உண்மையான பொருள் என்ன? அவற்றிக்கு இடையே உள்ள வேறுபாடு யாவை என்பதை விரிவாக தெரிந்து கொள்வோம்.

இந்திய எல்லை

மொத்தம் 15,106.7 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தியாவின் நில எல்லையானது, மொத்தம் ஏழு நாடுகளை தொட்டு செல்கிறது. இதைத் தவிர, 7516.6 கி.மீ நீளமுள்ள கடல் எல்லையைக் கொண்டது இந்தியா.

 

வங்கதேசம் (4,096.7 கி.மீ), சீனா (3,488 கி.மீ), பாகிஸ்தான் (3,323 கி.மீ), நேபாளம் (1,751 கி.மீ), மியான்மர் (1,643 கி.மீ), பூடான் (699 கி.மீ), ஆஃப்கனிஸ்தான் (106 கி.மீ) ஆகிய இந்த ஏழு நாடுகளும் இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்துகொள்ளும் நாடுகள் ஆகும்.

இந்தியா-சீனா மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு

இந்தியா, சீனாவுடன் 3,488 கி.மீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது. ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றை ஒட்டி இந்த எல்லை செல்கிறது.

மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த எல்லையின் மேற்குப் பகுதியில் ஜம்மு-காஷ்மீர், மத்தியப் பகுதியில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மற்றும் கிழக்குப் பகுதியில் சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் இடம் பெற்றுள்ளன.


இருப்பினும், இரு நாடுகளும் இன்னும் முழுமையாக எல்லைகளை வரையறுக்கவில்லை. ஏனென்றால் பல பகுதிகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே எல்லை தகராறு நீடிக்கிறது.

தற்போது மேற்குப் பகுதியில் உள்ள அக்சய் சீனா தனக்கு சொந்தமானது என இந்தியா கூறுகிறது. 1962ஆம் ஆண்டு இந்தியாவுடனான போரின்போது, சீனா இந்தப் பகுதி முழுவதையும் ஆக்கிரமித்தது.

அதே நேரத்தில், கிழக்குப் பகுதியில் அருணாச்சல பிரதேசம் தனக்கு சொந்தமானது என்று உரிமை கோரும் சீனா, இது தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று கூறுகிறது. திபெத்துக்கும் அருணாச்சல பிரதேசத்திற்கும் இடையிலான மக்மோகன் எல்லைக் கோடு தொடர்பான ஒப்பந்தத்தையும் சீனா ஏற்கவில்லை.

அதாவது, அருணாச்சல பிரதேசத்தில் மக்மோகன் கோட்டை ஏற்காத சீனா, அக்சாய் சீனா மீதான இந்தியாவின் உரிமை கோரலையும் நிராகரிக்கிறது.

இந்த மோதல்கள் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைகள் முடிவு செய்யப்படாமல் தொடர்கிறது. எது எவ்வாறு இருந்தாலும், இருக்கும் நிலையை அப்படியே தக்க வைத்துக் கொள்ள, மெய்யான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அதாவது எல்.ஏ.ஓ.சி என்ற பதம் பயன்படுத்தப்பட்டது.

இருப்பினும், அது இன்னும் தெளிவுபடுத்தப்படாமல் இருக்கிறது. இரு நாடுகளும் தங்களது கட்டுப்பாடு எல்லைக் கோடு என்று வெவ்வேறு வரையறைகளை முன்வைக்கின்றன.


இந்த கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில், பல்வேறு பனிப்பாறைகள், பனிப் பாலைவனங்கள், மலைகள் மற்றும் ஆறுகள் இருக்கின்றன.

எல்.ஏ.ஓ.சி-யை ஒட்டியப் பகுதிகளில் இதுபோன்ற பல பகுதிகள் உள்ளன, அங்கு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.

இந்தியா-பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோடு

ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தின் முக்கிய பிரச்சனையாக உள்ளது ஜம்மு-காஷ்மீர். இந்த பகுதி தற்போது கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டால் பிரிக்கப்பட்டு, ஒரு பக்கம் இந்தியாவுடனும் மற்றொன்று பாகிஸ்தானுடனும் உள்ளது.

1947-48ஆம் ஆண்டில், ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் முதல் மோதல் நடந்தது, அதைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, இதன் கீழ், போர்நிறுத்த எல்லைக் கோடு நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி ஜம்மு-காஷ்மீரில் மூன்றில் ஒரு பங்கு பாகிஸ்தானுடன் இருந்தது, அதை பாகிஸ்தான் ‘ஆசாத் காஷ்மீர்’ (சுதந்திர காஷ்மீர்) என்று அழைக்கிறது.

மீதமுள்ள கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பகுதியைச் சேர்ந்த ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக் இந்தியாவிடம் உள்ளது.

1972 போருக்குப் பிறகு, கையெழுத்தான சிம்லா ஒப்பந்தத்தின் கீழ் போர்நிறுத்தக் கோட்டிற்கு ‘கட்டுப்பாட்டுக் கோடு’ என்று பெயரிடப்பட்டது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கட்டுப்பாட்டு எல்லைக் கோடானது 740 கிலோமீட்டர் நீளம் கொண்டது.


இது மலைகள் மற்றும் கரடுமுரடான சிக்கல் நிறைந்த பகுதிகளின் வழியாக செல்கிறது. இந்த கட்டுப்பாட்டு எல்லைக் கோடானது, சில பகுதிகளில் கிராமங்களையும், பல பகுதிகளில் மலைகளையும் பிரிக்கிறது.

அங்கு சில இடங்களில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தூரம் நூறு மீட்டர் என்ற அளவில் குறுகி இருந்தால், வேறுசில இடங்களில் ஐந்து கிலோமீட்டர் என்று விஸ்தாரமாய் பரவியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான கட்டுப்பாட்டுக் கோடு, கடந்த ஐம்பது ஆண்டுகளாக சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

1947ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரின்போது இருந்த நிலையே ஏறக்குறைய தற்போதைய கட்டுப்பாட்டுக் கோட்டில் இருக்கிறது. அந்த நேரத்தில் காஷ்மீரின் பல பகுதிகளில் சண்டை ஏற்பட்டது.

வடக்கு பகுதியில் கார்கில் நகரத்திலிருந்தும், ஸ்ரீநகரிலிருந்து லே நெடுஞ்சாலைக்கு அப்பால் , பாகிஸ்தான் துருப்புக்களை இந்திய ராணுவம் பின்னடையச் செய்தது.

 

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே 1965ல் மீண்டும் போர் வெடித்தது. ஆனால், அப்போது உருவான நிலைமையே 1971இல், மீண்டும் போர் மூளும் வரை தொடர்ந்தது.


1971 போரில், கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து வங்கதேசம் ஆனபோது, காஷ்மீரில் பல இடங்களில் சண்டை நடந்தது. அப்போது இந்தியாவுக்கு சுமார் 300 சதுர மைல் நிலம் கிடைத்தது. இது கட்டுப்பாட்டுக் கோட்டின் வடக்கு பகுதியில் உள்ள லடாக் பகுதியில் இருந்தது.

1972இல் ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தம் மற்றும் சமாதான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கட்டுப்பாட்டுக் கோடு மீண்டும் நிறுவப்பட்டது. பரஸ்பர பேச்சுவார்த்தைகளின் மூலம் இந்த விவகாரம் தீர்க்கப்படும் வரை அதே நிலைமையை தொடர வேண்டும் என்று இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

இந்த செயல்முறைக்கு நீண்ட நேரம் எடுத்தது. ஐந்து மாதங்களில், இருதரப்பு தளபதிகளும் பரஸ்பரம் இருபது வரைபடங்களைக் பறிமாறிக் கொண்ட பிறகு இறுதியாக உடன்பாடு எட்டப்பட்டது.

இது தவிர, இந்தியா-பாகிஸ்தானின் சர்வதேச எல்லைகள் ராஜஸ்தான், குஜராத், ஜம்மு மற்றும் குஜராத்தை ஒட்டிச் செல்கின்றன.

சியாச்சின் பனிப்பாறை: மெய்யான தரை நிலை கோடு

சியாச்சின் பனிப்பாறை பகுதியில் இந்தியா-பாகிஸ்தானின் இடங்களை ‘மெய்யான தரை நிலை கோடு’ (The Actual Ground Position Line (AGPL) ) தீர்மானிக்கிறது. 126.2 கி.மீ நீளமுள்ள இந்த ஏ.ஜி.பி.எல் இந்திய ராணுவத்தால் பாதுகாக்கப்படுகிறது.

80களில் இருந்து சியாச்சின் பனிப்பாறையில் மிகவும் கடுமையான போராட்டம் நடந்து வருகிறது. சிம்லா ஒப்பந்தத்தின்போது இந்தியாவோ பாகிஸ்தானோ பனிப்பாறையின் எல்லைகளை முடிவு செய்வது குறித்து வலியுறுத்தவில்லை.

 சியாச்சென் பனிப்பாறை

இந்த பயங்கரமான மற்றும் அணுகுவதற்கு கடினமானப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டியது அவசியமானதில்லை என்று இரு நாடுகளும் நினைத்ததால் இந்தப் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்திருக்கலாம் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால், சீனாவால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரின் ஒரு பகுதிக்கு உரிமை கொண்டாடும் நிலையில் எல்லைக் கோடுகளை வரையறுப்பது சங்கடத்தை ஏற்படுத்தும் என்ற காரணமும் இந்தியா இந்தப் பகுதியில் எல்லையை வரையறுப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்க காரணமாக இருந்திருக்கலாம் என்றும் சில நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்திய-பூடான் எல்லை

பூடானுடனான இந்தியாவின் சர்வதேச எல்லை 699 கிலோமீட்டர் நீளம் கொண்டது. ஆயுத எல்லைப் படை அதைப் பாதுகாக்கிறது. சிக்கிம், அருணாச்சல பிரதேசம், அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலம் ஆகியவை பூடான் எல்லையில் உள்ளன.

இந்திய-நேபாள எல்லை

உத்தராகண்ட், உத்தரபிரதேசம், பிகார், மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் ஆகியவை நேபாளத்தின் எல்லையில் உள்ளன. இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான சர்வதேச எல்லையின் நீளம் 1751 கிலோமீட்டர் ஆகும்.

இந்த எல்லையை பாதுகாக்கும் பொறுப்பு எல்லை பாதுகாப்புப் படையிடம் உள்ளது. இரு நாடுகளின் எல்லைகளில் பெரும்பாலும் கட்டுப்பாடு இல்லாமல் மக்கள் சென்று வரக்கூடியதாகவே இருக்கின்றன.


இருப்பினும், இப்போது எல்லையை பாதுகாக்க பாதுகாப்பு படையினர் பெருமளவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இரு நாடுகளின் எல்லைகள் முழுமையாக தீர்மானிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம். மகாகாளி (சாரதா), கந்தக் (நாராயணி) போன்ற ஆறுகளில் மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும்போது அவை தடம் மாறுவதால் எல்லையின் வரையறை மாறிவிடுவதும் குறிப்பிடத்தக்க விஷயமாக உள்ளது.

ஆறுகளின் போக்கும் ஆண்டுக்கு ஆண்டு மாறுபடுகிறது. பல இடங்களில், எல்லையை நிர்ணயிக்கும் பழைய தூண்கள் இன்னும் நிற்கின்றன. ஆனால் உள்ளூர் மக்கள் அவற்றைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

இந்தியா-மியான்மர் எல்லை

இந்தியா மியான்மருடன் 1643 கி.மீ நீளமுள்ள சர்வதேச எல்லையைக் கொண்டுள்ளது. இதில் 171 கி.மீ தொலைவில் எல்லை நிர்ணயிக்கும் பணி இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.

 

அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு மியான்மர் எல்லையின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்றுள்ளது.

இந்தியா-வங்கதேச எல்லை

4096.7 கி.மீ நீளமுள்ள இந்தியா-வங்கதேசம் எல்லையில் மலைகள், சமவெளி, காடுகள் மற்றும் ஆறுகள் என பலதரப்பட்ட பகுதிகள் உள்ளன. இந்த எல்லைப் பகுதிகளில் மக்கள்தொகை அடர்த்தி அதிகமாக உள்ளது. எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்), இந்தியா-வங்கதேசம் எல்லையை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்தியா-வங்கதேச எல்லையில் சர்வதேச எல்லைக்குள் ஒரு கிலோமீட்டர் பரப்பளவில் மட்டுமே பி.எஸ்.எஃப் நடவடிக்கை எடுக்க முடியும். இதன் பின்னர், உள்ளூர் காவல்துறையின் அதிகார வரம்பு தொடங்கிவிடும்.

 

Share.
Leave A Reply