வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்த 45,000 கடிதங்களை விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை அஞ்சல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் அஞ்சல் மா அதிபர் ரஞ்ஜித் ஆரியரத்ன இதனை பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார்.
கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையின் விமான நிலையங்களின் சேவைகள் கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி முதல் இடைநிறுத்தப்பட்டன.
இவ்வாறு விமான நிலையங்களின் சேவைகள் இடைநிறுத்தப்பட்ட பின்னணயில் இலங்கைக்கு விமானத்தின் மூலம் கொண்டு வரப்பட வேண்டிய அஞ்சல் சேவைகள் தடைபட்டதாக அஞ்சல் மாஅதிபர் தெரிவித்தார்.
இதையடுத்து, விமானத்தின் மூலம் கொண்டு வரப்பட வேண்டிய அஞ்சல்கள், கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்க குறித்த அஞ்சல் சேவை நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், குறித்த அஞ்சல்கள் மற்றும் அஞ்சல் பொதிகள் இலங்கைக்கு வந்து சேர சுமார் மூன்று மாத காலம் எடுத்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
விமான சேவை தடைபட்ட நிலையில், அவை கப்பல் நிறுவனங்களுக்கு கையளிக்கப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில், அஞ்சல் பொதிகளில் பொறிக்கப்பட்ட பெயர்கள் மற்றும் முகவரிகள் அழித்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
இவ்வாறு பெயர்கள் மற்றும் முகவரிகள் அழிந்த சுமார் 45,000 அஞ்சல் பொதிகள் அஞ்சல் தலைமையகத்தில் சேர்ந்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
அஞ்சல் பொதிகளில் பெயர் பொறிக்கப்பட்டுள்ள முறைமைக்கு அமைய, அந்த பெயர்கள் மற்றும் முகவரிகள் அழிவடைவது சாதாரண விடயம் என அவர் கூறுகின்றார்.
இவ்வாறு பெயர்கள் மற்றும் முகவரிகள் அழிவடைந்துள்ள அஞ்சல் பொதிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவிக்கின்றார்.
இலங்கை அஞ்சல் திணைக்களம் வசமுள்ள பெரும்பாலான அஞ்சல் பொதிகள் அனைத்தும் மலேசியாவிலிருந்தே இலங்கைக்கு கிடைத்துள்ளதாகவும், மலேசியாவிலிருந்து இலங்கைக்கு கிடைத்த அஞ்சல் பொதிகளிலேயே பெயர், முகவரிகள் அழிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, அஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மலேசியா அஞ்சல் நிர்வாகத்துடன் இணைந்து, உரிமையாளர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
பொதிகளிலுள்ள பார்கோட் இலக்கங்கள் இயலுமான வரை அடையாளம் காணப்பட்டு, அவை மலேசியா அஞ்சல் நிர்வாகத்திற்கு அனுப்பி அதனூடாக முகவரிகளை கண்டறியும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பொதிகளில் பெரும்பாலானவை, இணையத்தளத்தின் ஊடாக பொருள் கொள்வனவுகளை செய்தவர்களின் பொதிகளாக இருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிடுகின்றார்.
இணையத்தளத்தின் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்வோருக்கே மலேசியாவிலிருந்து பெரும்பாலான பொதிகள் இலங்கைக்கு கிடைக்கும் என கூறிய அவர், அதனூடாக முகவரிகளை கண்டறியும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், மிக விரைவில் அந்த முகவரிகள் அடையாளம் காணப்பட்டு, உரிய பொதிகள் உரிய தரப்பினரிடம் கையளிக்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
ஏதேனும் சந்தர்ப்பங்களில் முகவரிகளை அடையாளம் காண முடியாத நிலைமை ஏற்படும் பட்சத்தில், குறித்த பொதிகள் மீண்டும் மலேசியாவிற்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் அஞ்சல் மா அதிபர் ரஞ்ஜித் ஆரியரத்ன தெரிவித்தார்.