இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தை தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 15,413 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்து இதுவரை ஒரே நாளில் பதிவாகும் அதிகபட்ச பாதிப்பு இதுவே ஆகும்.
இதன் மூலம், இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,10,461ஆக அதிகரித்துள்ளது.
அதே போன்று கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 306 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,254 என்னும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
மேலும், கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2,27,756ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு
டெல்லியில் முன்னெப்போதுமில்லாத வகையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 3,630 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம், டெல்லியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,746ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த 77 பேரையும் சேர்த்து இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 2,112ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் கொரோனா வைரஸ் பரிசோதனை சமீபத்திய நாட்களாக அதிகரிக்கப்பட்டதே இந்த ஏற்றத்துக்கு காரணம் என்று கருதப்படுகிறது.
உலக நிலவரம் என்ன?
அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவின்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87,70,629ஆக உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பை பொறுத்தவரை, 22 லட்சத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகளுடன் அமெரிக்கா முதலிடத்திலும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகளுடன் பிரேசில் இரண்டாவது இடத்திலும், ரஷ்யா 5.7 லட்சம் பாதிப்புகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ள நிலையில் அதற்கடுத்தடுத்த இடங்களில் இந்தியா, பிரிட்டன், பெரு உள்ளிட்ட நாடுகள் உள்ளன.
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,64,039ஆக உள்ளது.
மேலும், இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 43 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் முற்றிலும் குணடமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரஸ் உயிரிழப்பில் 1.19 லட்சத்துடன் அமெரிக்கா முதலிடத்திலும், சுமார் ஐம்பதாயிரம் இறப்புகளுடன் பிரேசில் இரண்டாவது இடத்திலும், 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இறப்புகளுடன் பிரிட்டன் மூன்றாமிடத்திலும் உள்ள நிலையில் அடுத்தடுத்த இடங்களில் இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியா எட்டாவது இடத்தில் இருக்கிறது.