இந்த நாட்டில் அனைவரும் அறிந்ததும் நிகழ்ந்து நிறைவேறியதுமான விடயங்களையே நான் கூறியிருந்தேன்.

அவ்வாறிருக்கையில் என்னை விமர்சிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாஸ, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க உட்பட எவருக்கும் அருகதையே இல்லை என்று தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைரான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

 

அண்மையில் நாவிதன்வெளியில் இடம்பெற்ற கூட்டத்தின்போது உரையாற்றிய கருணா அம்மான், தான் கொரோனவை விட பயங்கரமானவர் என்றும் ஆணையிறவில் ஒரே இரவில் இரண்டாயிரம் மூவாயிரம் இராணுவத்தினரை கொலை செய்ததாகவும் கிளிநொச்சியிலும் அவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்றதாகவும் கருத்து வெளியிட்டிருந்தார்.

இக்கருத்திற்கு தென்னிலங்கையில் பலத்த எதிர்ப்புக்கள் மேலெழுந்திருந்தன. குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க மற்றும் ருவான் விஜயவர்த்த உட்பட பௌத்த தேரர்களும் கடுமையான கண்டனத்தினை வெளிப்படுத்தியதோடு அவரைக் கைதுசெய்யுமாறும் ஆணைக்குழு அமைத்து விசாரணைகளை முன்னெடுக்குமாறும் கோரியிருந்தனர்.

இவ்வாறு எதிர்ப்புக்கள் எழுந்துள்ளமை தொடர்பில் வீரகேசரியிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் புதிதாக ஒன்றையும் கூறிவிடவில்லை. இந்த நாட்டில் கடந்த காலத்தில் நிகழ்ந்து நிறைவேறிய விடயங்களையே குறிப்பிட்டேன்.

விடுதலைப்புலிகள் அமைப்பு பலமாக இருந்த காலத்தில் அவ்விதமான சம்பவங்கள் இடம்பெற்றன. அதேபோன்று படைகளாலும் விடுதலைப்புலிகளுக்கு பாரிய அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன.

இதனை இலங்கையில் உள்ளவர்களும் சரி உலகத்தில் உள்ளவர்களும் சரி அறிந்தே கொண்டுள்ளனர்.

அந்த விடயங்களையே நான் கூறினேன். அதனை தற்போது தென்னிலங்கையில் சஜித், அநுர, நவீன், ருவான் போன்றவர்கள் தூக்கிப்பிடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் தென்னிலங்கை மக்கள் அவ்விடயம் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. இதிலிருந்து தென்னிலங்கை மக்கள் எனது கருத்துக்கள் தொடர்பிலான புரிதலைக் கொண்டிருக்கின்றார்கள் என்பது வெளிப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி தற்போது எனது கருத்தினை தூக்கிப்பிடித்துக்கொண்டு கொக்கரித்துக்கொண்டிருப்பவர்கள் தமது தேர்தல் பிரசாரத்திற்கான ஒரு உத்தியாகவே பயன்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களுக்கு தென்னிலங்கையில் சரிந்து கிடக்கும் வாக்குகளை மீளப்பெற்றுக்கொள்வதற்கு எனது கருத்துக்களை பயன்படுத்துகின்றார்கள். ஆகவே இதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.

மேலும் சஜித் பிரேமதாஸ ஒரு விடயத்தினை மறந்து விட்டார்.

அவருடைய தந்தையாரான ரணசிங்க பிரேமதாஸவே 1989ஆம் ஆண்டு எமக்கு ஐயாயிரம் ரைபில் ரக துப்பாக்கிகளையும் ஒரு இலட்சம் ரவைகளையும் வழங்கினார். எமது போராட்டத்தின் ஆரம்பகாலத்தினை அவரே பலப்படுத்தினார்.

அதற்கு நானே சாட்சியாளனாக இருக்கின்றேன். அத்துடன், அநுரகுமார திஸாநாயக்கவுக்கு விடுதலைப்போராட்டம் பற்றியோ, அதில் இடம்பெற்ற மரணங்கள் பற்றியோ பேசுவதற்கு எவ்விதமான தகுதியும் கிடையாது. அவர்கள் தமது மக்களுக்கு எதிராக போராட்டத்தினை நடத்தி 80ஆயிரம் பேரின் உயிர்களை குடித்தவர்கள்.

அவ்வாறானவருக்கு என்னை விமர்சனம் செய்வதற்கு என்ன தகுதி இருக்கின்றது. இதுபோன்று தான் ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாறு தெரியாது, நேந்றுப் பெய்த மழையில் முழைத்த களான்களாக இருக்கும் பரம்பரை அரசியல் வாரிசுகள் முதலில் ஐ.தே.கவினதும் தலைவர்களினதும் வரலாற்றினை முழுமையாக படித்து விட்டு வருமாறு கூறுகின்றேன்.

ஐ.தே.கவே விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கு அதிகளவில் உதவிகளை வழங்கியிருந்தது என்பதை கூறுவதோடு அதற்கான சாட்சியாக நான் இருப்பதையும் மனதில் நிறுத்திக்கொள்ளுமாறு கூறுகின்றேன்.

அரசியலுக்காகவும் வாக்குகளை பெறவேண்டுமென்பதற்காகவும் வரலாறையும் கடந்த காலத்தினையும் மறந்து சித்துவிளையாட்டுக்களை ஆரம்பிக்ககூடாது என்றும் என்னை விமர்சிப்பதென்ன என்னைப்பற்றி பேசுவதற்கே இவர்களுக்கு அருகதை இல்லை என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் கூறுகின்றேன்.

பிரமர் மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் இரத்தாறு ஓடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு அமைதி திரும்புவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என்பதை மறந்துபோகக் கூடாது என்றார்.

Share.
Leave A Reply